புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜன., 2015

இலங்கையில் தமிழர்களின் எதிர்காலம் என்ன? பிரித்தானிய பொதுச்சபையில் விவாதம்


இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட தமிழர் இன அழிப்பை தடுத்து நிறுத்த சர்வதேச சமூகம் தோல்வி கண்டுள்ளதாக பிரித்தானிய பொதுச்சபையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பொதுசபையில் இலங்கை தமிழர்கள் தொடர்பில் நேற்று கலந்துரையாடப்பட்ட போது, இந்தக்கருத்தை சிலர் முன்வைத்தனர்.
இந்தநிலையில் இனப்பிரச்சினைக்கான தீர்வானது சுயநிர்ணய உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வாக அமைய வேண்டும். அதுவே இனப்பிரச்சினைக்கான அடிப்படை காரணத்தை இல்லாமல் செய்யும் என்று தமிழர்களுக்கான அனைத்துக்கட்சி குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் லீ ஸ்கொட் தெரிவித்தார்.
இலங்கையின் புதிய அரசாங்கமும். தமிழர்கள் வாழும் பகுதிகளில் இராணுவ சூன்யத்தை ஏற்படுத்துவது தொடர்பில் எந்த ஒரு மாற்றத்தை ஏற்படுத்தாது என்ற நிலை உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே இலங்கை மீது சர்வதேச நாணய நிதியத்தின் எதிர்கால கடன் திட்டங்களின் போது அழுத்தம் கொடுப்பதன் மூலம் தமிழர்கள் தொடர்பிலான கொள்கையில் மாற்றங்களை கொண்டு வர உந்துதலை அளிக்க முடியும் என்று லீ குறிப்பிட்டார்.
புதிய ஜனாதிபதி, ஏற்கனவே பதவியில் இருந்த ஜனாதிபதியின் கட்சியை சேர்ந்தவர் என்பதை லீ சுட்டிக்காட்டினார்.
இந்தநிலையில் தற்போது இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் வெளியுறவு அலுவலக அமைச்சர் ஹூகோ ஸ்வைரி,பிரித்தானிய பிரதமர் இலங்கைக்கு சென்றிருந்த போது வலியுறுத்திய விடயங்களையும் இலங்கை அரசாங்கத்திடம் நினைவூட்ட வேண்டும் என்றும் லீ கேட்டுக்கொண்டார்.
இதன்போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சியோப்ஹெய்ன் மெக்டோனாக், இலங்கை அரசாங்கம் நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
போர்க்குற்றம் தொடர்பில் விசாரணை, மதங்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துதல், அரசியல் தீர்வு மற்றும் இலங்கை மக்கள் சமமாக நடத்தப்படல் என்ற விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இறுதிப்போரின் போது பாதுகாப்பு அமைச்சராக இருந்தமையையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கை அரசாங்கம் அரசியல் தீர்வை காண வேண்டும் என்ற நிலையில் தமிழர் பிரதிநிதிகளும் அதற்கான முனைப்புக்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் சியோப்ஹெய்ன் மெக்டோனாக் கேட்டுக்கொண்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரொபேட் ஹாபென் உரையாற்றும் போது, இலங்கையில் தமிழர்கள், பல தசாப்தங்களாக துன்பங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். பலர் இன்னும் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஜிம் செனொன் உரையாற்றும் போது, வன்னியில் சுமார் 150000 சிங்கள படையினர் நிலைகொண்டிருப்பதால், அங்கு சிங்களமயத்திட்டம் மேற்கொள்ளப்படலாம் என்று குறிப்பிட்டார்.
வன்னியில் உள்ள 5 பொதுமக்களுக்கு ஒரு இராணுவவீரர் என்ற அடிப்படையில் படையினர் நிலைகொண்டுள்ளதாக அவர் கூறினார்.
இதனால் வடக்கில் பெண்கள் பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு ஆளாகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
திருமணம் செய்துக்கொள்வதாக உறுதியளித்தும் அல்லது பணத்துக்காகவும் சிங்கள படையினர் சில தமிழ்பெண்களுடன் பாலியல் உறவை மேற்கொள்வதாக அவர் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பொப் பிளெக்மேன் தமது உரையில், இலங்கை அரசாங்கம் சர்வதேசத்துடன் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் மெக்டொனல், தமது உரையின் போது போர்க்குற்றச்சாட்டுக்கான உள்நாட்டு விசாரணை திட்டத்தை நிராகரித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் கெரி மெக்கார்தி, புதிய ஜனாதிபதி இலங்கையில் முன்னேற்றமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.வடக்கில் இருந்து இராணுவம் குறைக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்
நாடாளுமன்ற உறுப்பினர் டேவிட் லிங்டன், இலங்கையில் நல்லிணக்கத்துக்கான நடவடிக்கைகளின் போது பாரிய சவால்கள் இருப்பதை புறந்தள்ளிவிட முடியாது என்று குறிப்பிட்டார்.

ad

ad