புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 பிப்., 2015

ராஜபக்சே கூட்டத்தை அனைத்து உலக நீதிமன்றக் குற்றக்கூண்டில் நிறுத்த வேண்டும்; பொதுக்குழுவில் தீர்மானம்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 23-ஆவது பொதுக்குழு இன்று 01.02.2015 ஞாயிற்றுக்கிழமை கழக அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில் தூத்துக்குடி - 628 002, எட்டையபுரம் சாலை, புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஏ.வி.எம். கமலவேல் மஹாலில் நடைபெற்றது. 

பொதுக்குழு கூட்டத்தில், 

தீர்மானம் 24; இலட்சோபலட்சம் ஈழத்தமிழர்களை, பச்சிளம் குழந்தைகள், தாய்மார்கள், வயது முதிர்ந்தோர், பிணிவாய்ப்பட்டோர் என எவரையும் விட்டு வைக்காமல் ஈவு இரக்கம் இன்றி ஜெர்மானிய இட்லர் யூதர்களைக் கொன்று குவித்ததைப் போல், தமிழ் மக்களை கோரப் படுகொலை செய்த கொடியோன் இலங்கை அதிபர் இராஜபக்சே இலங்கையில் திடீரென்று அதிபர் தேர்தலை அறிவித்துப் போட்டியிட்டான். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தான் கடைபிடிக்க வேண்டிய நெறிசார்ந்த வெளியுறவுக் கொள்கையைக் காற்றில் பறக்கவிட்டு, ராஜபக்சேதான் மீண்டும் அதிபராக வர வேண்டும் என நேபாளத்தில் நடைபெற்ற சார்க் மாநாட்டு உரையில் வாழ்த்தியது மன்னிக்க முடியாத செயல் ஆகும். 

தமிழ் இனக் கொலைகாரனுக்கு இந்தியாவின் உயர் விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று, பாரதிய ஜனதா கட்சியில் ஒட்டுண்ணியாகச் சேர்ந்த இலங்கையின் கைக்கூலி அறிவித்த அக்கிரமும் நடந்தது. மாபாவி ராஜபக்சேவை திருப்பதி ஏழுமலையான் கோவில் தரிசனத்துக்கு அழைத்து வந்தது இந்திய அரசு. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகக் கண்மணிகள், திருப்பதி கோவில் வாசலில், ராஜபக்சே முகத்துக்கு நேரே கருப்புக்கொடி காட்டி கண்டன முழக்கம் இட்டு, காவல்துறையின் தடியடிக்கு ஆளாயினர். 

இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோல்வியுற்று மண்ணைக் கவ்வினான். தமிழ் மக்களும், இஸ்லாமியர்களும் எடுத்த நிலைப்பாடு அவனது தோல்விக்குக் காரணம் ஆயிற்று. புதிதாக அதிபர் பொறுப்புக்கு வந்துள்ள மைத்ரி சிறிபாலசேனா, ஈழத்தமிழர் படுகொலையின்போது மகிந்தனின் அரசில் ராணுவ அமைச்சராக இருந்தவர்தான். வடக்கு கிழக்கு மாகாணத்தில் இருந்து இராணுவம் திரும்பப் பெறப்பட மாட்டாது என்று புதிய அதிபர் அறிவித்து விட்டார். 13 ஆவது சட்டத்திருத்தம் என்பது, ஈழத்தமிழர்களுக்கு நீதி வழங்காத ஏமாற்றுத் திட்டம் என்பதால், விடுதலைப்புலிகளும், தமிழ் ஈழ மக்களும் தொடக்கத்திலேயே நிராகரித்து விட்டனர். 

இலங்கையின் பிரதமர் ஆகப்  பொறுப்பு ஏற்று உள்ள ரணில் விக்கிரமசிங்கே, இலங்கையில் கூட்டு ஆட்சி முறையை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்; ஒற்றை ஆட்சி முறைதான் என்று வெளிப்படையாகவே தெரிவித்து விட்டார். புதிய அரசு ஈழத்தமிழர்களுக்கு நீதி வழங்கப்போவது இல்லை. 

இந்தப் பின்னணியில் இலங்கை அரசும், இந்தியாவின் நரேந்திர மோடி அரசும் கூட்டாகச் சதித்திட்டம் வகுக்கின்றன. மார்ச் மாதத்தில் நடைபெற இருக்கும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில்  கூட்டத்தில், இலங்கை அரசின் இனக்கொலைக் குற்றத்திற்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்ள விடாமல் தடுப்பதற்காகவே தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழ் அகதிகளைத் திருப்பி அனுப்ப நரேந்திர மோடி அரசு முனைந்துள்ள துரோகம் கண்டனத்திற்குரியது ஆகும். 

தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழ் அகதிகளை தமிழர்களின் மரணபூமியாக்கப்பட்ட இலங்கைக்கு அனுப்ப முயலும் நடவடிக்கையை இந்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். 

இலங்கையின் புதிய அதிபர் இந்தியா வருவதற்கும், மார்ச் மாதத்தில் இந்தியப் பிரதமர் மோடி இலங்கை செல்வதற்கும் செய்யப்பட்டுள்ள ஏற்பாடும், உலக நாடுகளை ஏமாற்றி, மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கை அரசுக்கு சாதகமான சூழலை உருவாக்குவதற்காகத்தான் என்பதே உண்மை ஆகும். 

எண்ணற்ற தமிழர்கள் சிங்கள இனவாத அரசுகளால் கொலையுண்டு மடிந்ததும், தங்கள் தாயக விடுதலைக்காக உலகம் போற்றும் தலைவர் பிரபாகரன் அவர்களின் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் அகிலம் இதுவரை கண்டும் கேட்டும் இராத வீரச்சமர் புரிந்து மகத்தான தியாகம் செய்ததும், சுதந்திரத் தமிழ் ஈழத்தை வென்றிடத்தான் என்பதால், அந்த இலட்சியத்தை இலக்காகக் கொண்டு ஈழத்தமிழர்களும் தாய்த்தமிழகத்திலும் தரணியெங்கும் வாழும் தமிழர்களும் மாறாத உறுதியுடன் அனைத்து முனைகளிலும் செயல்படவும், உலக நாடுகளில் ஆதரவைத் திரட்டிடவும், மறைந்த மாவீரர்களை எண்ணி சூளுரைக்க வேண்டும். 

ஈழத்தமிழர் தேசிய இனப்பிரச்சினைக்கு, சுதந்திரத் தமிழ் ஈழமே தீர்வு ஆகும் என்று, 1995 ஜூலை 1 ஆம் தேதி, திருச்சியில் நடைபெற்ற மறுமலர்ச்சி தி.மு.க.வின் மாநில மாநாடு, தொலைநோக்கோடு தீர்மானம் நிறைவேற்றியது. அதே நிலையில், எந்த சமரசமும் செய்து கொள்ளாமல், ஈழவிடுதலைக்காகப் போராடுகிறது. முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரும், தமிழர் தாயகப் பகுதிகளில் சிங்களர் குடியேற்றமும் வேகமாக நடக்கின்றது. சிங்கள இராணுவமும், போலீசும், தமிழர் பகுதிகளில் குவிக்கப்பட்டு உள்ளன. அவர்களையும், சிங்கள குடியேற்றங்களையும் அப்புறப்படுத்த வேண்டும் என்றும், சுதந்திரத் தமிழ் ஈழக் கோரிக்கையை முன்வைத்து, ஒரு பொதுவாக்கெடுப்பை, அனைத்து உலக நாடுகளும், ஐ.நா. மன்றமும் நடத்த வேண்டும் என்றும், அந்தப் பொதுவாக்கெடுப்பில், உலகின் பல நாடுகளில் ஏதிலிகளாக வாழும் ஈழத்தமிழர்கள், அந்தந்த நாடுகளிலேயே, அந்த வாக்குப்பதிவில் பங்கு ஏற்க வகை செய்ய வேண்டும் என்றும், 2011 ஆம் ஆண்டு, ஜூன் 1 ஆம் தேதி, பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரÞஸல்Þ நகரில், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெற்ற மாநாட்டில், மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பிரகடனம் செய்தார்.

எனவே, தமிழ் இனக்கொலை புரிந்த ராஜபக்சே கூட்டத்தை, அனைத்து உலக நீதிமன்றக் குற்றக்கூண்டில் நிறுத்தித் தண்டிப்பதையும், பொது வாக்கெடுப்பு மூலம் சுதந்திரத் தமிழ் ஈழம் அமைப்பதையும் ஒரே இலக்காகக் கொண்டு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் பாடுபடும்; தமிழகத்திலும் தரணியிலும் இதற்கான ஆதரவைத் திரட்டுகின்ற பணியில் ஈடுபடுத்துவது என இப்பொதுக்குழு தீர்மானிக்கின்றது. 

ad

ad