புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 பிப்., 2015

சம்பந்தர்,சுமந்திரன் பங்கேற்பு கூட்டமைப்பின் முடிவல்ல: சுரேஷ்/ பி.பி.சி


இலங்கையின் 67ஆவது சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்பது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று அதன் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறுகிறார்.
அந்த நிகழ்வில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் மற்றும் சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றது அவர்களின் தனிப்பட்ட முடிவு என்று அவர் தெரிவித்தார்.
அவ்விருவரும் சார்ந்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி கூட இது தொடர்பில் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும், சுதந்திர தின நிகழ்வில் கூட்டமைப்பின் தலைவர் பங்கேற்பு உகந்ததாக இருக்காது என தானும், மாவை சேனாதிராஜாவும் அவரிடம் கூறியதாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறுகிறார்.
சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்பது என்பது இலங்கையின் அரசியல் சாசனத்தை ஏற்றுக் கொண்டதற்கு சமம் என்பதாலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதற்கு முன்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியும் அதில் பங்குபெறாமல் இருந்து வந்தன என்கிறார் சுரேஷ் பிரேமச்சந்திரன்.
ஆனால் இப்போது என்ன அடிப்படையில், என்ன காரணத்துக்காக அவ்விருவரும் கலந்து கொண்டனர் என்பதும் கூட யாருக்கும் தெரியாது என அவர் கூறுகிறார்.
அவர்களின் பங்கேற்புக்கும் கூட்டமைப்பிலுள்ள கட்சிகளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்கிறார் அவர்.
சுதந்திர தினம் போன்ற தேசிய நிகழ்வுகள் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டது எனும் கருத்தும் ஏற்புடையது அல்ல எனவும் தெரிவித்தார் சுரேஷ் பிரேமச்சந்திரன்.
தமிழர்களின் எதிர்காலம் கருதியே சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்பு: சம்பந்தர்
இலங்கையின் 67ஆவது சுதந்திர தின நிகழ்வுகளில் கடந்த நான்கு தசாப்தங்களாக இல்லாத வகையில் மூத்த தமிழ் அரசியல் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
கொழும்பிலுள்ள நாடாளுமன்ற வளாகத்திலுள்ள மைதானத்தில் நடைபெற்ற அந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தர் மற்றும் உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.
அவ்விழாவில் பங்கேற்பது குறித்து கவனமாக சிந்தித்த பிறகே தான் முடிவெடுத்ததாக கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம், தமிழ் மக்களின் எதிர்காலம், புதிய ஆட்சியாளர்கள் மீதுள்ள நம்பிக்கை ஆகியவற்றின் காரணமாக சுதந்திர தின விழாவில் பங்கேற்பது என்று முடிவெடுத்ததாக அவர் கூறுகிறார்.
அதேவேளை கூட்டமைப்புக்குள்ளேயே இது குறித்து மாற்றுக் கருத்துக்கள் இருந்தன என்பதை ஏற்றுக் கொள்ளும் அவர், எனினும் இது தொடர்பில் மூத்த தலைவர்களுடன் கலந்துரையாடப்பட்டது எனத் தெரிவித்தார்.
முந்தைய ஆட்சிபோல் அல்லாமல், இந்த ஆண்டின் சுதந்திர தின வைபவம், இராணுவ வெற்றியை மையப்படுத்தவில்லை என்றும், அப்படியான சூழலில் இந்த நிகழ்வில் பங்குபெறுவது நாட்டில் வாழும் எல்லா மக்களுக்கும் ஒரு நல்ல செய்தியை அனுப்பும் என்றும் சம்பந்தர் கூறுகிறார்.
இலங்கையில் நிரந்தரமான சமாதானம் ஏற்படும் வகையிலும், மக்கள் மத்தியில் நல்லிணக்கம் மற்றும் சமத்துவம் ஏற்பட வேண்டும் என்கிற அடிப்படையிலேயே இந்த ஆண்டின் நிகழ்ச்சிகள் அமைக்கப்பட்டிருந்ததன எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தர் தெரிவித்தார்

ad

ad