புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 பிப்., 2015

மு.காவின் முடிவு வெட்கக்கேடானது; சாடுகிறார் சம்பந்தன்


தமிழ், முஸ்லிம் மக்களின் உரிமைகளை மதிக்காமல், அவர்களின் ஒற்றுமையைப் பற்றி சிறிதளவும் சிந்திக்காமல், ஜனாதிபதித்
தேர்தலில் அவர்கள் வழங்கிய ஆணையைத் தூக்கியெறிந்துவிட்டு பதவிக்காகவும் சுகபோகங்களுக்காகவும் மீண்டும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து கிழக்கு மாகாணத்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைத்துள்ளது.
 
இது வெட்கக்கேடான செயலாகும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திரு கோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் நேற்று 'உதயனி'டம் தெரிவித்தார்.
 
எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தந்தை செல்வா காட்டிய நேரான வழியில் பயணித்து தமிழ், முஸ்லிம் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையே கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி விவகாரம் பனிப்போராக மூண்டிருந்த நிலையில், மீண்டும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து கிழக்கில் மு.கா. ஆட்சியமைத்துள்ளது.
 
அந்தவகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான ஹபீஸ் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். 
 
இவர், நேற்றுமுன்தினம் மாலை திருகோணமலையில் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னாண்டோ முன்னிலையில் கிழக்கு மாகாண முதலமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார். 
 
கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து ஆட்சிமைக்கும் என்ற நம்பிக்கையில் தமிழ், முஸ்லிம் மக்கள் இருந்தவேளையில் மு.காவின் தலைமை தன்னிச்சையாக முடிவெடுத்து மீண்டும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் கைகோத்து ஆட்சியமைத்துள்ளமையை பலரும் விமர்சித்து வருகின்றனர். 
 
மு.காவின் இந்த முடிவு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்து என்னவென்று அதன் தலைவர் இரா.சம்பந்தனிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 
 
மேலும் 2012 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபைத் தேர்தலின்போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச­ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியிலிருந்து வெளியேறி தனித்துப் போட்டியிட்டிருந்தது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ். இந்தத் தேர்தலில் மு.காவைவிட 61 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, 11 ஆசனங்களை வென்றிருந்தது. ஆனால், மு.கா. % ஆசனங்களையே பெற்றிருந்தது.
 
அதேவேளை, எம்மைவிடப் பங்காளிக் கட்சிகளைக் கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 6 ஆயிரத்து 100 வாக்குகளையே கூடுதலாகப் பெற்று 12 ஆசனங்களை வென்றிருந்தது. 
 
கிழக்குத் தேர்தலில் 3 மாவட்டங்களில் 2 மாவட்டங்களில் (திருகோணமலை, மட்டக்களப்பு) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலிடம் பெற்றிருந்தது. அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி முதலிடம் பெற்றிருந்தது. ஆனால், எந்தவொரு மாவட்டத்திலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முதலிடத்தைக் கைப்பற்றியிருக்கவில்லை.  
 
2012 கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சியமைக்குமாறு மு.காவைக் கேட்டிருந்தோம். இதற்காக முதலமைச்சர் பதவியையும் மு.காவுக்காக விட்டுத் தருகின்றோம் என்று கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் நாம் பகிரங்கமாகத்  தெரிவித்திருந்தோம். ஆனால், எமது கருத்துகளுக்கு செவிசாய்க்காமல் எம்மை நிராகரித்துவிட்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து கிழக்கில் அக்கட்சி ஆட்சியமைக்க மு.கா. உதவியது. 
 
இந்நிலையில், இம்முறை ஜனாதிபதித் தேர்தலின்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியிலிருந்து வெளியேறியிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்தது. 
 
இதனையடுத்து கிழக்கு மாகாண சபை ஆட்சி பெரும்பான்மையை இழந்தது. 
 ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் கிழக்கில் ஆட்சியமைப்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையில் பேச்சுகள் நடைபெற்றன. இதன்போது கிழக்குத் தேர்தலில்  மக்களின் ஜனநாயகத் தீர்ப்பின் பிரகாரம் மு.காவை விட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே முதலமைச்சர் பதவியைப் பெறுவதற்கு முன்னிலையில் நிற்கின்றது. எனவே, முதலமைச்சர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கவேண்டும் என்பதில் நியாயம் இருக்கின்றது என்பதனை மு.காவின் தலைமைக்கு நாம் எடுத்துரைத்தோம். எமது நியாயமான கருத்துகளை புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஏற்றிருந்தனர். 
 
 இந்தச் சூழ்நிலையில், மீண்டும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் கைகோத்து கிழக்கில் ஆட்சியமைத்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், முதலமைச்சர் பதவியையும் பெற்றுள்ளது. 
 
தமிழ், முஸ்லிம் மக்களின் உரிமைகளை மதிக்காமல், அவர்களின் ஒற்றுமையைப் பற்றி சிறிதளவும் சிந்திக்காமல், ஜனாதிபதித் தேர்தலில் அவர்கள் வழங்கிய ஆணையைத் தூக்கியயறிந்துவிட்டு பதவிக்காகவும் சுகபோகங்களுக்காகவும் மீண்டும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து கிழக்கு மாகாணத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைத்துள்ளது. 
 
இது  வெட்கக்கேடான செயலாகும்.எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தந்தை செல்வா காட்டிய நேரான வழியில் பயணித்து தமிழ், முஸ்லிம் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் என்றார்.

ad

ad