புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 மார்., 2015

சம்பந்தனும் மோடியும் 13 இல் சந்தித்து பேசுவர்; மறுநாள் வடக்கு சென்று விக்னேஸ்வரனுடன் சந்திப்பு


உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு எதிர்வரும் 13ஆம் திகதி கொழும்பு வரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அன்றையதினம் இரவு  இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளு மன்ற உறுப்பினர்களுடன் முக்கிய பேச்சு நடத்தவுள்ளார்.
 
அதில் தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினை மற்றும் இனப்பிரச்சினை ஆகியவற்றின் தீர்வுக்கான அழுத்தத்தை இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசுக்கு வழங்கவேண்டும் என மோடியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தும் என்று கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். 

அன்றைய தினம் மாலை மோடி இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றவும் உள்ளார். இந்தியப் பிரதமர் ஒருவர் இலங்கை நாடாளுமன்றத்தில் ஆற்றும் இந்த முதலாவது உரை, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. 

அதேவேளை, 13ஆம் திகதி கொழும்பில் ஜனாதிபதி, பிரதமர் உட்பட அரசிலுள்ள முக்கியஸ்தவர்களையும் சந்தித்துப் பேசவுள்ள இந்தியப் பிரதமர், மறுநாள் 14ஆம் திகதி சனிக்கிழமை வடக்குக்கு  செல்லவுள்ளார். 

அங்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உட்படப் பல தரப்பினரைச் சந்தித்துப் பேசவுள்ளார். 

அன்றைய தினம் கீரிமலையில் இந்திய வீட்டுத் திட்டத்தைக் கையளிக்கும் நிகழ்விலும் கலந்துகொள்ளவுள்ள இந்தியப் பிரதமர், அதன் பின்னர் மன்னாருக்கும் செல்லவுள்ளார்.

இதேவேளை, 15ஆம் திகதி மலையகத்துக்குப் பயணம் செய்ய இந்தியப் பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்திய இலங்கை ஒப்பந்தத்தின்போது, இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி 1987ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்த பின்னர், இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்ளும் முதலாவது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad