புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 மார்., 2015

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில் மன்மோகன் சிங்குக்கு கோர்ட்டு சம்மன் ஏப்ரல் 8-ந் தேதி ஆஜராக உத்தரவு

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில் ஏப்ரல் 8-ந் தேதி ஆஜராகுமாறு மன்மோகன் சிங்குக்கு தனிக்கோர்ட்டு
உத்தரவிட்டது. 
புதுடெல்லி
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், கடந்த 2006–2009 ஆண்டுகளில் நிலக்கரித்துறை மந்திரி பொறுப்பையும் சேர்த்து வகித்தார்.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல்
அப்போது, கருப்புத்தங்கம் என்றழைக்கப்படுகிற இயற்கை வளமான நிலக்கரியை வெட்டி எடுப்பதற்கு, மத்திய அரசுக்கு சொந்தமான நிலக்கரி சுரங்கங்கள், பல்வேறு தரப்பினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்த ஒதுக்கீட்டில் ரூ.1.86 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளதாக தலைமை கணக்கு தணிக்கையர் (சி.ஏ.ஜி.) அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டது. இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில், சி.பி.ஐ. விசாரணை நடந்து வருகிறது.
தலபிரா சுரங்க ஒதுக்கீடு
பல்வேறு நிறுவனங்கள் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து, அந்த விசாரணை, டெல்லியில் சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் நடந்து வருகிறது.
இதில் ஒரு முக்கிய வழக்கு, 2005–ம் ஆண்டு, ஒடிசாவில் உள்ள தலபிரா இரண்டாவது நிலக்கரி சுரங்கத்தை, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தேர்வுக்குழு நிராகரித்தும் தொழில் அதிபர் குமாரமங்கலம் பிர்லாவுக்கு சொந்தமான ஹிண்டால் கோவுக்கு ஒதுக்கீடு செய்தது தொடர்பானதாகும்.
வழக்கை மூட நடந்த முயற்சி
இந்த ஊழலில் நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் பி.சி.பரேக், தொழில் அதிபர் குமாரமங்கலம் பிர்லா, ஹிண்டால்கோ நிறுவனம் மற்றும் பெயர் குறிப்பிடப்படாத நபர்கள் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது.
ஆனால் பின்னர் இதில், முறைகேடு நடக்கவில்லை என கூறி, இந்த வழக்கை மூடி விடுவதாக கோர்ட்டில் சி.பி.ஐ. அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையை கோர்ட்டு நிராகரித்துவிட்டது.
விசாரணை நடத்த உத்தரவு
மேலும் இந்த வழக்கு தொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் 16–ந் தேதி சி.பி.ஐ. கோர்ட்டு ஒரு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. அதில், ஊழல் நடந்த காலகட்டத்தில் நிலக்கரி துறை மந்திரி பதவி வகித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், அப்போதைய பிரதமரின் முதன்மைச் செயலாளர் டி.கே.ஏ.நாயர், அந்தரங்க செயலாளர் பி.வி.ஆர்.சுப்பிரமணியம் உள்ளிட்ட பிரதமர் அலுவலகத்தின் முக்கிய அதிகாரிகளிடம் விசாரணை நடத்தும்படி உத்தரவிடப்பட்டது.
அதன்படி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டவர்களிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தி அது தொடர்பான அறிக்கையை சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் தாக்கல் செய்தது.
மன்மோகன் சிங்குக்கு சம்மன்
இந்த நிலையில் அவற்றை பரிசீலனை செய்த சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு நீதிபதி பரத் பரஷார், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கு அடிப்படை ஆதாரம் இருப்பதாக கருதி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தொழில் அதிபர் குமாரமங்கலம் பிர்லா, நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் பி.சி.பரேக், ஹிண்டால்கோ நிறுவனம், அதன் அதிகாரிகள் சுபேந்து அமிதாப், டி.பட்டாச்சார்யா ஆகியோர் அடுத்த மாதம் 8–ந் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பும்படி உத்தரவிட்டார்.
இது தொடர்பாக நீதிபதி, 73 பக்க உத்தரவு பிறப்பித்தார்.
அடிப்படை ஆதாரம்
அதில், முக்கியமாக கூறி இருப்பதாவது:–
இந்த வழக்கில் இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 120 (பி), 409 மற்றும் ஊழல் தடுப்புச்சட்டம் பிரிவு 13(1)(சி) மற்றும் 13 (1)(டி)(3) ஆகியவற்றின் கீழ் ஹிண்டால்கோ, சுபேந்து அமிதாப், டி.பட்டாச்சார்யா, குமாரமங்கலம் பிர்லா, மன்மோகன் சிங் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரம் தெளிவாக இருக்கிறது.
சுபேந்து அமிதாப், டி.பட்டாச்சார்யா, குமார மங்கலம் பிர்லா, ஹிண்டால்கோ ஆகியோர் இணைந்து சதித்திட்டம் தீட்டி இருக்கிறார்கள். அதை பி.சி.பரேக்கும், பின்னர் அப்போதைய நிலக்கரித்துறை மந்திரி டாக்டர் மன்மோகன் சிங்கும் தொடர்ந்து செய்து முடித்துள்ளார்கள்.
கூட்டு முயற்சி
பரேக்கும், மன்மோகன் சிங்கும் மாறுபட்ட பங்களிப்பை செய்திருந்தாலும், எப்படியாவது ஹிண்டால்கோவுக்கு தலபிரா 2–வது நிலக்கரி சுரங்கத்தை வழங்கி விட வேண்டும் என்பதில் ஒருமுகப்படுத்தப்பட்ட கூட்டு முயற்சி இருந்துள்ளது. இது சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தெரிந்துள்ள பொதுவான முக்கிய நோக்கமாக இருந்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கருத்து
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழலில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கோர்ட்டு சம்மன் அனுப்ப உத்தரவிட்டு இருப்பது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியும், பாரதீய ஜனதா கட்சியும் கருத்து தெரிவித்துள்ளன. அது வருமாறு:–
காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய சட்டமந்திரியுமான வீரப்ப மொய்லி, ‘‘மன்மோகன் சிங் ஒன்றும் அறியாதவர். நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் அனுப்பப்பட்டுள்ள சம்மனுக்கு அவர் பதில் அளிப்பார். ஒருவருக்கு சம்மன் அனுப்புவதற்கு கோர்ட்டுக்கு முழு உரிமை உள்ளது’’ என கூறினார்.
காங்கிரஸ் ஊடகத்துறை பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா, ‘‘மன்மோகன் சிங்கின் நேர்மையும், வெளிப்படைத்தன்மையும் குறை கூற முடியாததாகும். அவர், அவரது நேர்மையால் அறியப்பட்டவர். நீதிமன்ற நடவடிக்கையை பாரதீய ஜனதா அரசியல் ஆக்க முயற்சிப்பதை கண்டிக்கிறோம்’’ என்றார்.
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சஞ்சய் ஜா, ‘‘கோர்ட்டு சம்மன் அனுப்பி விட்டாலே ஒருவரை குற்றவாளி ஆக்கி விட முடியாது. இது அடிப்படை சட்ட அம்சம். நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ஏல முறையை வலியுறுத்தியவரே மன்மோகன் சிங்தான். அவர் வெளிப்படையான தன்மையைத்தான் நாடினார்’’ என்றார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், சுப்ரீம் கோர்ட்டு வக்கீலுமான கபில் சிபல், ‘‘நாங்கள் சட்டத்தை மதிக்கிறோம். ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசியல் சட்டம் தந்துள்ள உரிமை இருக்கிறது. அதை நாங்கள் காப்போம்’’ என கூறினார்.
பாரதீய ஜனதா
பாரதீய ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய சுற்றுச்சூழல் மந்திரியுமான பிரகாஷ் ஜவடேகர் கருத்து தெரிவிக்கையில், ‘‘இந்த ஊழல் அரங்கேறிய போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சிதான் நடந்தது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை இந்த நிலைக்கு அந்த கட்சிதான் கொண்டு வந்து விட்டுள்ளது. காங்கிரசுடன் இருக்கிற கட்சிகள் இப்போது தங்கள் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்வார்கள் என நம்புகிறேன்’’ என கூறினார்.
மத்திய ரசாயனம், உரங்கள் துறை ராஜாங்க மந்திரி ஹன்ஸ்ராஜ் ஆஹிர், ‘‘இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலின் பேரில், சி.பி.ஐ.தான் விசாரணை நடத்தி வருகிறது. இறுதி வரை விசாரணை நடத்தப்பட வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்’’ என்று கூறினார்.
சரத் யாதவ், பிரசாந்த் பூஷண்
ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத் யாதவ், ‘‘நாட்டின் இயற்கை வளங்களுக்கு அப்போதைய பிரதமர் என்ற முறையில் மன்மோகன் சிங்தான் பொறுப்பு. அவருக்கு கோர்ட்டு சம்மன் பிறப்பித்ததில் தவறு ஒன்றும் இல்லை’’ என கூறினார்.
ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும், சுப்ரீம் கோர்ட்டு வக்கீலுமான பிரசாந்த் பூஷண், ‘‘நாட்டின் சட்ட அமைப்பு ஆரோக்கியமாக இருக்கிறது என்பதை இது எடுத்துக்காட்டுகிறது’’ என குறிப்பிட்டார்.
முதன் முதலாக...
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழலில் கோர்ட்டு சம்மன் அனுப்பியுள்ளதின் மூலம், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முதல் முறையாக கோர்ட்டு படியேறி, குற்றவாளி கூண்டில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad