புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 மார்., 2015

அரசு போட்ட தடை : திருமாவளவன் ஆவேசம்



விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆவேச அறிக்கை:
 
’’சைதாப்பேட்டையிலுள்ள அரசு மாணவர் விடுதியில் 24.03.2015 இன்று நடைபெறுவதாக இருந்த ஆண்டு விழாவில் நான் பங்கேற்கக்கூடாது என திடீரென அரசு தடைவிதித்துள்ளது. 

நூற்றுக்கணக்கான காவலர்களை இறக்கி விடுதி மாணவர்களுக்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது காவல்துறை. அத்துடன், வேளச்சேரியில் நான் தங்கியுள்ள அலுவலகத்தைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கான காவல்துறையினரை இறக்கி வெளியில் செல்லவிடாமல் முற்றுகையிட்டனர். 

காவல்துறையின் உயர் அதிகாரிகள் நேரிலே வந்து அவ்விழாவில் பங்கேற்கக் கூடாது என்று எழுத்துப்பூர்வமாக அனுமதி மறுப்பு ஆணை வழங்கினர்.

மாணவர்கள் விடுதியில் அரசியல் தலைவர்கள் கலந்துகொள்ளக் கூடாது என ஆதிதிராவிட நலத்துறையைச்சார்ந்த அதிகாரிகள் காவல்துறைக்கு அறிவிப்புச் செய்ததையடுத்து இவ்வாறு தடைவிதிக்கப்பட்டதாக கூறினார்கள். 

அரசியல் கட்சித் தலைவர்கள், பள்ளி, கல்லூரி ஆண்டு விழாக்கள், விடுதிகளின் ஆண்டு விழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது வழக்கமான நடைமுறையே ஆகும். இன்றைக்கு (24.03.2015) விக்டோரியா மாணவர் விடுதியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் ஆளுங்கட்சியைச் சார்ந்த அரசியல்வாதிகள் கலந்துகொண்டுள்ளனர். ஆளுங்கட்சியினர் பங்கேற்பதற்கு தடைவிதிக்காத அரசு, அல்லது காவல்துறை எனக்கு மட்டும் தடைவிதித்திருப்பது அரசியல் காழ்ப்புணர்வே காரணமாகும். இது சனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் கொடூரமான செயலாகும். ஆளுவோரின் இம்மலிவான அரசியலை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறது.

10.03.215 அன்று வில்லிவாக்கம் விடுதி ஆண்டு விழாவிலும் 18.03.2015 அன்று கோடம்பாக்கம் விடுதி ஆண்டு விழாவிலும், 23.03.2015 அன்று இராயபுரம் முதுகலை மாணவர் விடுதி ஆண்டு விழாவிலும் கலந்துகொண்டு உரையாற்றினேன். மிகவும் அமைதியாகவும் சிறப்பாகவும் அவ்விழாக்கள் நடந்தேறின. இராயபுரம் விடுதி ஆண்டு விழாவில் பங்கேற்கக்கூடாது என்று வாய்மொழியாகக் காவல்துறையினர் கூறினர்.

 எழுத்துப்பூர்வமாக காவல்துறை தடைவிதிக்கவில்லை. ஆனால், எம்.சி.இராசா மாணவர் விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவிற்குத் தடைவிதித்தனர். அந்த விடுதியின் பழைய மாணவர் என்கிற முறையில் எனக்கு மாணவர்கள் விடுத்த அழைப்பை ஏற்று அதில் பங்கேற்க ஒப்புதல் அளித்தேன். ஆனால், அரசு இதற்குத் தடைவிதித்திருப்பது இதற்கு முன் யாருக்கும் நடந்திராத நிகழ்வாகும்.

அரசின் இந்த ஓரவஞ்சனைப் போக்கையும் மாணவர்களின் உரிமையைப் பறித்த அடக்கு முறையையும் மிக வன்மையாகக் கண்டிக்கிறோம். ஆளுவோரின் அடாவடிப் போக்குக்கு எதிராக சனாயகத்தைப் பாதுகாப்பதற்காக, நீதிமன்றத்தை அணுகுவோம் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.’’

ad

ad