புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 மார்., 2015

தற்போதைய செய்தி எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தன்?


மு.கா., இ.தொ.கா., ம.ம.மு., அ.இ.ம.கா. கட்சிகள் ஆதரவு: ஈ.பி.டி.பி. ஆராய்கிறதாம்
பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து நாட்டில் தேசிய அரசாங்கத்தை அமைத்துள்ளமையால்
பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சித் தலைவர் யார் எனும் கேள்வி ஏனைய கட்சிகளிடையே ஏற்பட்டுள்ளது. கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமாயின் பாராளுமன்றத்தில் மூன்றாவதாக அதிக உறுப்பினர்களைக் கொண்டுள்ள கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கே அப்பொறுப்பு வழங்கப்பட வேண்டும் எனும் கருத்து நிலவி வருகிறது.
எனினும் பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கும், விதிமுறைகளுக்கும் அமைய எதிர்க்கட்சித் தலைவரை சபாநாயகரும், எதிர்க் கட்சிகளும் இணைந்தே தெரிவு செய்ய வேண்டும். இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிர்க் கட்சித் தலைவர் பதவியை வழங் கக் கூடாது என மிதவாதப் போக்குடைய ஒரு தரப்பினரும், அவருக்கே வழங்க வேண்டும் என நாட்டில் இன ஒற்றுமையை விரும்பும் இன்னொரு தரப்பினரும் வாதிட்டு வருகின்றனர்.
பாராளுமன்றத்தில் அங்கம் வகி க்கும் சிறுபான்மை இனக் கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கே இப்பதவி வழங்கப்பட வேண்டும் என்பதுடன் அவரே அப்பதவிக்குப் பொருத்தமானவர் எனவும் தெரிவித்துள்ளன. ஆனால் ஈழமக்கள் ஜனநாயக கட்சி இவ்விடயம் குறித்து தாம் ஆழமாக ஆராய்ந்து வருவதாக அக்கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் நம்பிக்கை தருவனவாக இல்லை எனத் தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா, 1977 இல் தமிழர் ஒருவருக்கு எதிர்க் கட்சித் தலைவர் பதவி கிடைத்த போது நாமெல்லாம் சந்தோசம் அடைந் தோம். ஆனால் அதுவே தமிழினத்தை முள்ளிவாய்க்காலில் முடக்கி அழி வுக்குள்ளாக்கியது என்பதையும் கவனத்திற் கொள்ள வேண்டும். எனவே இது குறித்து தாம் ஆழமாகச் சிந்தித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மு. கா. சார்பில் அதன் செயலாளர் பிரதியமைச்சர் ஹஸன் அலி, இ. தொ. கா. தலைவர் முத்து சிவலிங்கம், மலையக மக்கள் முன்னணி சார்பில் பிரதி அமைச்சர் பெ. இராதாகிருஷ்ணன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் பிரதி அமைச்சர் அமீர் அலி ஆகியோர் தனது ஆதர வான கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.
தனிப்பட்ட முறையில் சில அரசியல்வாதிகள் வழமைபோல தமது இனவாதப் போக்கில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனரே தவிர பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் பெரும்பான்மை இனக் கட்சிகளில் பலவும் இரா. சம்பந்தனுக்கு மேற்படி பதவி கிடைப்பதை வெளிப்படையாக எதிர்க்க வில்லை. அண்மையில் ஊடகவியலாளர் களை அலரி மாளிகையில் சந்தித்துரையாடிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் எதிர்க் கட்சித் தலைவர் பதவியானது பாராளுமன்ற விதி முறைகளுக்கு அமைய வழங்கப்படும் ஒரு பதவி எனத் தெரிவித்திருந்தார். பாராளுமன்ற விதிமுறைகளை மீறி குறைந்த உறுப்பினர்களைக் கொண்டதொரு கட்சியிலிருந்து ஒருவரை எதிர்க் கட்சித் தலைவராக நியமிக்க வேண்டுமாயின் அது சபாநாயகர் மற்றும் சகல எதிர்க் கட்சிகளினதும் அனுமதி பெற்றே செய்யப்பட வேண்டும். பாராளுமன்றத்தில் 14 ஆசனங்களுடன் மூன்றாவது சக்தியாக தமிழ்க் கூட்டமைப்பு இருந்து வருகிறது. ஏனைய சிறு சிறு கட்சிகள் பிரதான இரு கட்சிகளுடன் இணைந்து அவர்களது சின்னத்தில் தேர்தலில் போட்டியிட்டமையால் தனிக் கட்சியாக அடையாளப்படுத்த முடியாத நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை எதிர்க் கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வாவா? தினேஸ் குணவர்த்தனாவா? என்பதை தீர்மானிப்பதற்காக எம்.பிக்கள் மத்தியில் கையெழுத்து வேட்டை மும்முரமாக இடம்பெற்று வருகின்றது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஒற்றுமைப்படுத்த அவசரமாக கூடி தீர்மானிக்கவும் அக்கட்சி முடிவு செய்துள்ளது என்றும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சுதந்திர கட்சியின் நிலைப்பாடு மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சரும் எதிர்க் கட்சியின் பிரதம கெறடாவுமான டள்பியூ. ஜே. எம். செனவிரத்னவிடம் கேட்டபோத ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்தோர் மாற்றுக் கட்சிகளின் கூட்டங்களில் கலந்துகொள்வது தொடர்பாக கட்சியின் மத்திய குழு கூடி தீர்மானம் எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

ad

ad