புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 மார்., 2015

மேகதாது முற்றுகை போராட்டம் : தேன்கனிக்கோட்டையில் குவியும் தமிழக விவசாயிகள்



 காவிரியில் கர்நாடகா அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து, நாளை மேகதாது முற்றுகைப் போராட்டம் நடக்கிறது. இதற்காக தேன்கனிக்கோட்டையில் தமிழக விவசாயிகள் குவிந்துவருகின்றனர். காவிரி நடுவர் மன்ற தீர்ப்புபடி கர்நாடக அரசு தமிழகத்துக்கு ஆண்டுதோறும் 192 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும். இதை 12 மாதங்களும் பகிர்ந்து வழங்க வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது. ஆனால் கர்நாடக அரசு அதன்படி வழங்காமல், அங்குள்ள அணைகள் நிரம்பியவுடன் உபரி நீரை மட்டுமே தமிழகத்துக்கு விடுகிறது. இதனால் காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. 

இந்நிலையில் தற்போது உபரியாக வரும் தண்ணீரையும் தேக்கி வைக்கும் அளவுக்கு கர்நாடகாவிலேயே மேலும் 2 அணைகளை மேகதாது என்ற இடத்தில் கட்ட முடிவு செய்து அதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்த அணைகள் கட்டப்பட்டால் தமிழகத்துக்கு தற்போது வரும் உபரிநீர் கூட வராது.  எனவே இந்த அணை களை கர்நாடக அரசு கட்டக்கூடாது என தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. கர்நாடகா அணை கட்டுவது காவிரி நடுவர்மன்ற தீர்ப்புபடி தவறானது என தமிழகத்தை சேர்ந்த அனைத்து கட்சிகளும், விவசாய சங்கங்களும் கூறி வருகின்றன.

கர்நாடக அரசு மேற்கொண்டுள்ள அணைகட்டுமான பணிகளை தடுத்து நிறுத்தும் வகையில் நாளை மேகதாதுவில் முற்றுகையிட காவிரி உரிமை மீட்புக்குழு முடிவு செய்துள்ளது. இந்த குழுவில் தமிழக விவசாயிகள் சங்கம், வலிவலம் சேரன் தலைமையிலான விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த சங்கங்களை சேர்ந்த 2 ஆயிரம் பேர் நாளை(சனி) காலை 11 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்டம்  தேன்கனிக்கோட்டை மணிக்கூண்டில் இருந்து பேரணியாக புறப்பட்டு 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மேகதாது சென்றடைந்து முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளனர்.  இதற்காக வலிவலம் சேரன் தலைமையிலான விவசாயிகள் இன்று மாலை வேன், கார், பஸ்களில் தேன்கனிக்கோட்டை செல்கிறார்கள். திருச்சி மாவட்ட தமிழக விவசாயிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் மாவட்ட தலைவர் சின்னதுரை தலைமையில் 500 பேர் இன்று இரவு அல்லித்துறையில் இருந்து 10 பஸ்களில் தேன்கனிக்கோட்டை செல்கிறார்கள். தஞ்சையில் இருந்தும் பல வாகனங்களில் விவசாயிகள் இன்று இரவு  தேன்கனிக்கோட்டை புறப்படுகிறார்கள்.

காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், பேராசிரியர் சின்னசாமி, மதிமுகவை சேர்ந்த மல்லை சத்யா, ஐஜேகே தஞ்சை மாவட்ட தலைவர் சிமியோன் மற்றும் மனித நேய மக்கள்   கட்சி நிர்வாகிகளும் இதில் பங்கேற்கிறார்கள். போராட்டம் குறித்து ஒருங்கிணைப்பாளர் மணியரசன் கூறும்போது, ‘ கர்நாடகம் அணை கட்டுவதை தடுக்க முற்றுகை போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும். இதற்காக நானும், சில நிர்வாகிகளும் நேற்றே  தேன்கனிக்கோட்டை வந்து விட்டோம். 2 ஆயிரம் பேர் திரள்வார்கள் என எதிர்பார்க்கிறோம். நாளை காலை 11 மணிக்கு பேரணி புறப்படும். தேன்கனிக்கோட்டையில் இருந்து 5 கிமீ தொலைவில் தமிழக எல்லை முடிகிறது. எல்லையை தாண்டி கர்நாடகம் சென்று முற்றுகை நடத்துவோம் என்றார்.

ad

ad