புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 மார்., 2015

சம்பந்தனை எதிர்க்கட்சி தலைவராக்க முயற்சி! அரசின் பங்காளிக் கட்சிகள் சீற்றம்


ஜனாதிபதித் தேர்தலில் வழங்கிய ஆதரவுக்கு நன்றிக் கடனாக நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சிப் பதவியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கி, சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவராக்க மைத்திரி ரணில் அரசு முயற்சிக்கின்றது என்று தெரிவித்து அதற்குக் கடும் எதிர்ப்பை வெளியிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக்  கட்சிகள், முன்னாள் அமைச்சர் தினேஷ் குணவர்தனவை எதிர்க்கட்சித் தலைவராக்க வேண்டும் என்றும் ஏகமனதாகக் குரல் எழுப்பின.
 
நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலைகளுக்கமைய நாடாளு மன்றத்தின் எதிர்க்கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனூடாக இலங்கையில் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராக முடியாதா என்ற கேள்வி சர்வதேச ரீதியில் எழுப்பப்படும் என்று தெரிவித்ததுடன், எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்பது பிரதமர் பதவிக்கான அடித்தளமாகும் என்றும் தெரிவித்தன.
 
கொழும்பிலுள்ள தேசிய நூலகத்தில் நேற்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சிகள் மேற்கண்டவாறு தெரிவித்தன.
 
முன்னாள் அமைச்சர்களான மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்தன, ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ ஆகிய எம்.பிக்களும், மேல் மாகாண சபை உறுப்பினரும், புதிய யஹல உறுமயவின் தலைவருமான உதய கம்மன் பிலவும் இந்த ஊடகச் சந்திப்பில் பங்கேற்றனர்.
 
இதன்போது கருத்து வெளியிட்ட மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில,
"நாட்டுக்கு வெளியிலிருந்து அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு, நாடு பெரும் சிக்கலான நிலைமையை எதிர்கொள்ளவேண்டிய சந்தர்ப்பமொன்று ஏற்படும் போதுதான் தேசிய அரசொன்றை அமைக்கவேண்டிய நிலை ஏற்படும். ஆனால், நமது நாட்டில் அவ்வாறானதொரு நிலை உருவாகவில்லை. 
 
1987இல் இலங்கையை இந்தியா ஆக்கிரமித்தபோது தேசிய அரசொன்று உருவாக்கப்படவில்லை; 2004ஆம் ஆண்டு ஆழிப்பேரலைத் தாக்குதலுக்கு முகங்கொடுத்தபோது தேசிய அரசொன்று உருவாக்கப்படவில்லை; புலிகளுக்கு எதிராக யுத்தம் செய்தபோது தேசிய அரசொன்று உருவாக்கப்படவில்லை. அப்படியானால் இப்போது ஏன் இந்தத் தேசிய அரசு உருவாக்கப்பட்டுள்ளது.
 
ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து தேசிய அரசொன்று உருவாக்கப்பட்டுள்ளது. அப்படியானால், நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாகும் நிலை ஏற்படும். 
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் சர்வதேசத் தின் மத்தியில் கேள்வி எழும் வாய்ப்புண்டு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராகும் நிலை உருவாகும். அத்துடன், சம்பந்தன் தமிழர் என்பதால் எதிர்க்கட்சித் தலைவராக முடியாதா என்ற கேள்வியும் எழுப்பப்படும்.
 
எதிர்க்கட்சித் தலைவரின் கருத்துக்கு சர்வதேச ரீதியில் செல்வாக்குள்ளது. 1983ஆம் ஆண்டு கலவரத்தின்போது 231 தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஆனால், சிங்கள மக்களால் பல இலட்சம் தமிழர்கள் காப்பாற்றப்பட்டனர். சிங்கள மக்களால் பல இலட்சம் தமிழர்கள் காப்பாற்றப்பட்ட விடயம் சர்வதேசத்திற்கு செல்லவில்லை. 
 
231  தமிழர்கள் கொல்லப்பட்ட விடயமே சர்வதேசத்துக்கு சென்றது. அப்போதைய எதிர்க் கட்சித் தலைவராக தமிழர் விடு தலைக் கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கம் இருந்ததே அதற்குரிய காரணமாகும். 
 
எதிர்க்கட்சித் தலைவர் என்பவர் அடுத்த பிரதமர். மஹிந்த ராஜபக்­ எதிர்க்கட்சித் தலைவராக இருந்துதான் பிரதமரானார். ரணில் விக்கிரமசிங்கவும் எதிர்க் கட்சித் தலைவராக இருந்துதான் பிரதமரானார். இவ்வாறான நிலையிலேயே சம்பந்தனுக்கு பெரும் கதவு திறக்கப்பட்டுள்ளது.
 
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான சர்வதேச விசாரணை இடம்பெற்றுள்ள நிலையிலும் நாடுகடந்த தமிழீழ அரசை ருத்திரகுமாரன் நிறுவியுள்ள நிலையிலும் இன அழிப்புப் பிரேரணை வடக்கு மாகாணத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையிலும் தமிழ்ப் பிரிவினைவாதிகளுக்கு மேலும், வாய்ப்பளிக்கும் வகையிலும் இந்தச் செயல் இடம்பெற்று வருகின்றது. 
 
ஜனாதிபதித் தேர்தலில் தமக்கு வழங்கிய ஆதரவுக்கு நன்றிக்கடனாகவே மைத்திரி? ரணில் அரசு இதைச் செய்கிறது'' என்றார்.
 
இதையடுத்து கருத்து வெளியிட்ட முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, "எதிர்க்கட்சித் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன நியமிக்கவேண்டும் என்று நான் கூறுகின்றேன்'' என்றார். 
 
தினேஷ் குணவர்தனவை எதிர்க்கட்சித் தலைவராக்க விமல் வீரவன்ஸ, உதய கம்மன்பில் ஆகியோரும் இதன்போது இணக்கம் தெரிவித்தனர்.

ad

ad