புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 மார்., 2015

"சட்டத்தால் தடை செய்யப்படாத வருமானம் அனைத்தையும் ஏற்கத்தான் வேண்டும்!” ஜெ. தரப்பு இறுதி விளக்கம் முழு விபரம்

க்ளைமாக்ஸை நெருங்கிவிட்டது ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு மேல் முறையீட்டு விசாரணை!

கடந்த ஜனவரி 5-ம் தேதி தொடங்கியது மேல்முறையீட்டு விசாரணை. ஜெ. வழக்கறிஞர் நாகேஸ்வரராவும், சசிகலா வழக்கறிஞர் பசந்தும் தலா 9 நாட்களும், சுதாகரன், இளவரசி வழக்கறிஞர் சுதந்திரம் 8 நாட்களும், கம்பெனி வழக்குகள் 2 நாட்களும் நடந்து, ஜெ. தரப்பு இறுதி வாதம் நிறைவு பெற்றது.
தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை சார்பாக வாதிட்ட அரசு வழக்கறிஞர் பவானி சிங் கடந்த மார்ச் 6-ம் தேதியோடு தன் வாதத்தை நிறைவு செய்தார். இப்படி ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி குமாரசாமி தலைமையில் மொத்தம் 38 நாட்களோடு நிறைவு பெற்றது. சுப்பிரமணியன் சுவாமியின் எழுத்துப்பூர்வ வாதமும், ஜெ. தரப்பின் எழுத்துப்பூர்வ வாதமும் மட்டுமே இன்னும் பாக்கி. அதுவும் இந்த இதழ் உங்கள் கைகளில் தவழும் நேரத்துக்குள் நிறைவாகி இருக்கும். அதன் பிறகு தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும்.
ஜெயலலிதா சார்பாக வழக்கறிஞர்கள் குமார், மணிசங்கர், அசோகன், செந்தில், பன்னீர்செல்வம், செல்வகுமார், பரணிகுமார், திவாகர், குலசேகரன், கருப்பையா, நாகராஜன், முத்துகுமார், அம்பிகைதாஸ், சுந்தரபாண்டியனும் இவர்களோடு கோவை நாடாளுமன்ற உறுப்பினர் நாகராஜனும், தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை சிறப்பு பணி அமர்த்தல் ஐ.ஜி., குணசீலன், டி.எஸ்.பி., சம்பந்தமும் இவர்களின் சார்பாக அரசு வழக்கறிஞர் பவானி சிங் மற்றும் அவரின் தற்காலிக உதவியாளர் சதீஷ் கிரிஜியும் ஆஜராகி வருகிறார்கள்.
''வெளிநாடு வாழ் இந்தியர் சுதாகரன்...!'
அரசு வழக்கறிஞர் பவானி சிங் தொடர்ந்து வாக்குமூலங்களை வாசித்தார்.
பெயர்: சிவா
தந்தை பெயர்: சொக்கலிங்கம்
கிராமம்: 18/13ஆ, திருநகர், வில்லிவாக்கம்
தாலுக்கா: சென்னை40
வயது: 53
''1994-ம் ஆண்டு அண்ணாநகரில் வசித்த நான் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தேன். வடசென்னை பதிவாளர் ராஜகோபாலைத் தெரியும். 1994-ல் அவரை சந்தித்தேன். அவர், 'வெளிநாடு வாழ் இந்தியருக்கு 1,000 முதல் 1,500 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. குறைந்த விலையில் கிடைத்தால் சொல்...’ என்றார். அதையடுத்து நான் பேப்பரில் விளம்பரம் கொடுத்தேன்.
அந்த விளம்பரத்தைப் பார்த்து பாண்டியநேசன் என்பவர் வெள்ளகுளம், சேரன்குளம், வீரன்குளம் பகுதிகளில் நிறைய நிலங்கள் இருப்பதாகச் சொன்னார். அதையடுத்து, அவரோடு நான் திருநெல்வேலிக்குச் சென்றேன். 1 ஏக்கர், 2,000 ரூபாய்க்கு நிலம் இருக்கு. புரோக்கர் கமிஷன் ரூ.500, பட்டா, சிட்டா மற்றும் பேக்குவரத்துக்காக ரூ.1000 என்றார். இதை சென்னைக்கு வந்த பிறகு ராஜகோபாலுக்கு போன் பண்ணி சொன்னேன். ராஜகோபால் என்னை தோட்டக்கலை ஆபீஸர் ராதாகிருஷ்ணனுக்கு அறிமுகம் செய்து வைத்தார். ராதாகிருஷ்ணன், 'இவர்தான் வெளிநாட்டு வாழ் இந்தியர் சுதாகரன்’ என்று எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். சுதாகரன் இயக்குநராக இருந்த ரிவர்வே அக்ரோ ஃபாரம் கம்பெனிக்கு திருநெல்வேலி, துத்துக்குடி, காஞ்சிபுரம், ஊத்துக்கோட்டை, திருவாரூர், தஞ்சை என பல மாவட்டங்களில் 2,850 ஏக்கர் நிலங்களை வாங்கிக் கொடுத்தேன்.'
''ஜெ. வீட்டு பணியாளர் கோடி கணக்கில் பணத்தை போட்டிருக்கிறார்!'
நீதிபதி: நிலங்கள் வாங்கியது உண்மை என்றுதான் அவர்களும் சொல்கிறார்கள். ஆனால் ஜெயலலிதாவிடம் நேரடியாக மற்றவர்களுக்குப் பணம் போனதற்கான ஆதாரங்கள் என்ன இருக்கிறது?
பவானி சிங்: இந்த வழக்கில் நேரடி ஆதாரங்கள் கிடையாது. ஆனால், மறைமுக ஆதாரங்கள் இருக்கின்றன. ஜெயலலிதா வீட்டில் வேலை பார்த்த  ஜெயராமன் அடிக்கடி பல வங்கிகளில் 10 லட்சம், 20 லட்சம், 50 லட்சம், 1 கோடி என போட்டிருக்கிறார். எந்த முகவரியில் இருந்து யார் பணத்தை வங்கிகளில் போடச் சொன்னார்கள் என்பதையும் தன் வாக்குமூலத்தில் கூறி இருக்கிறார். வங்கி அதிகாரிகளின் சாட்சியமும் இதை உறுதி செய்கிறது.
நீதிபதி: நேரடி ஆதாரங்கள் இல்லாமல் எப்படி இது ஜெயலலிதாவின் பணம் என்று கூற முடியும்?
பவானி சிங்: இதுபோன்ற வழக்குகளில் நேரடி ஆதாரங்கள் கிடைக்காது. தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அதிகாரிகள் மறைமுக ஆதாரங்களையும், ஆவணங்களையும் கொண்டு ரூ.66.65 கோடி சொத்துக் குவிக்கப்பட்டுள்ளதாக வழக்கு போட்டுள்ளனர். அவர்கள் கொடுத்த ஆவணங்களைக் கொண்டே நான் வாதிடுகிறேன். கீழமை நீதிமன்றமும் விசாரித்துத் தண்டனையும் கொடுத்திருக்கிறது.
நீதிபதி: ஜெயலலிதா பணத்தில் ரூ.9 கோடி டெபாஸிட் செய்துள்ளதாக சொல்கிறீர்கள். எந்தெந்த நாளில் எவ்வளவு பணம் டெபாஸிட் செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரங்கள் எங்கே?
மணிசங்கர்: (குறுக்கிட்டு...) ஜெயலலிதா அக்கவுன்ட்டில் இருந்து ஒரு சிங்கிள் பைசாகூட சசிகலாவுக்கோ சுதாகரனுக்கோ, இளவரசிக்​கோ கம்பெனிகளுக்கோ போகவில்லை. ஜெயா பப்ளிகேஷன், சசி எண்டர் பிரைசஸ் கம்பெனிகள் வழக்கு காலகட்டத்துக்கு முன்பு பார்ட்னராக ஜெயலலிதா இருந்தார். நமது எம்.ஜி.ஆர் நிறுவனம் 1990-ல் தொடங்கப்பட்டது. இந்த வழக்கு முழுக்க முழுக்க பொய்யான வழக்கு.  
நீதிபதி: உங்கள் மீது போட்டப்பட்டுள்ள சார்ஜ் என்ன?
மணிசங்கர்: 120(பி) கூட்டுச் சதி.
நீதிபதி: (பவானி சிங்கை பார்த்து) எப்படி 120(பி) போட்டீர்கள்?
பவானி சிங்: கூட்டுச் சதி உறுதி செய்த நோக்கத்தில்தான் ஐ.பி.சி., 120(பி) பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. கூட்டுச் சதி செய்துதான் நிலங்களையும், சொத்துகளையும் வாங்கிக் குவித்துள்ளார்கள்.
நீதிபதி: ஒருவர் மீது 120(பி) வழக்குப்போட வேண்டுமானால் அவர் எப்படி கூட்டுச் சதியில் ஈடுபட்டார். சதி குறித்து எங்கு தீர்மானிக்கப்பட்டது. எந்தெந்த நாட்களில் பணப் பரிமாற்றம் நடைப்பெற்றது. அதில் யார் யார் ஈடுப்பட்டார்கள் என்ற அனைத்து அடிப்படை ஆதாரங்களையும் திரட்டி மிக நீண்ட விசாரணைக்குப் பின் உண்மை என்று உறுதி செய்தால் மட்டுமே 120(பி) வழக்கு பதிவுசெய்ய வேண்டும். ஆனால், இந்த வழக்கில் 120(பி) பதிவுசெய்த பிறகுதான் ஆதாரங்கள் தேடியது போல தெரிகிறது.
மணிசங்கர்: கூட்டுச்சதிக்கான சாட்சியங்கள் எதுவும் இல்லை. ஒரே வீட்டில் இருந்தார்கள் என்பதற்காகக் கூட்டுச் சதியில் ஈடுபட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். இது தவறு.
போயஸ் கார்டன் மொத்தம் 21,000 சதுர அடி!
பவானி சிங்: போயஸ் கார்டன், போயஸ் கார்டன் கூடுதல் கட்டடம், ஐதராபாத் திராட்சை தோட்ட பங்களாக்களில் மிக உயர்ந்த மார்பிள்ஸ் பதிக்கப்பட்டன.
நீதிபதி: எதை வைத்துச் சொல்கிறீர்கள்?
பவானி சிங்: மும்பையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. ப்ளஸ் கிரானைட் சப்ளை செய்த மாடசாமியும் தன் வாக்குமூலத்தில் கூறியிருக்கிறார்.
நீதிபதி: போயஸ் கார்டன் எத்தனை சதுர அடி?
செந்தில்: மொத்தம் 21,000 சதுர அடி. புனரமைப்பு செய்தது 8,000 சதுர அடி. போயஸ் கார்டனில் 2 கட்டடங்கள் உள்ளன.
நீதிபதி: ஜெயலலிதாவிடம் வருமானவரித் துறை கேட்ட 80 கேள்விகளைக் கொடுங்கள்?
(மணிசங்கர் அதை எடுத்துக் கொடுத்தார்)
பவானி சிங்: ஜெயலலிதா வீட்டிலிருந்து தங்க, வைர நகைகள் கைப்பற்றப்பட்டிருகிறன.
மணிசங்கர்: (குறுக்கீடு) தங்க, வைர நகைகள் வழக்கு காலகட்டத்துக்கு முன்பு வாங்கியவை.
குமார்: தங்க, வைர நகைகள் வழக்கு காலகட்டத்துக்கு முன்பு வாங்கப்பட்டுள்ளது. அதற்கு சொத்து வரி கட்டப்பட்டுள்ளன.
பவானி சிங்: சுதாகரனின் திருமணம் மிகப் பிரமாண்டமாக செய்யப்பட்டது. அந்தத் திருமணம் ஜெயலலிதா பணத்தில்தான் நடைப்பெற்றது. வெள்ளித் தட்டுகளோடு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது.
நீதிபதி: திருமணத்துக்கு வெள்ளித் தட்டுகள் யார் கொடுத்தது?
குமார்: சுதாகரனின் சகோதரர் பாஸ்கரன்தான் வெள்ளித் தட்டுகள் கொடுத்தார். அதை அவர் வருமானவரித் துறையிலும் காண்பித்து இருக்கிறார்.  
பவானி சிங்: இதேபோல பேங்க் வரவு செலவுகள், கட்டடங்களுக்குப் பதிக்கப்பட்ட கிரானைட், மார்பிள்ஸ் மும்பையில் இருந்து மிக உயர்ந்த விலையில் வாங்கப்பட்டன.
நீதிபதி: (குமாரைப் பார்த்து) கிரானைட், மார்பிள்ஸ் உங்கள் விலைக்கும் தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை போட்ட விலைக்கும் எவ்வளவு வேறுபாடு வருகிறது?
குமார்: ஒரு சதுர அடி ரூ.5 ஆயிரம் முதல் ரூ.7 வரை போட்டிருக்கிறார்கள்.
நீதிபதி: 1994-ல் மார்பிள்ஸ், கிரானைட் விலை எனக்கு நன்றாகத் தெரியும். ஒரு சதுர அடி மார்பிள்ஸ் எவ்வளவு அதிகப்படியான விலையாக இருந்தாலும் ரூ.150 தான் இருக்கும்!
குமார்: உதாரணத்துக்குச் சொல்கிறேன் யுவர் ஹானர். ஒரு சதுர அடி குளோரின் மார்பிள்ஸ் 8,000 ரூபாய் என்று போட்டிருக்கிறார்கள்.
தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறைக்கு காமன்சென்ஸ் இல்லாமல் மார்பிள்ஸ், கிரானைட் மற்றும் கட்டட கட்டுமான விலையை அதிகப்படுத்தி பதிவு செய்திருக்கிறார்கள்.
நீதிபதி: கட்டட மதிப்பீடு தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் எவ்வளவு போட்டிருக்கிறார்கள், நீங்கள் எவ்வளவு சொல்கிறீர்கள்.
குமார்: ஜெயலலிதாவுக்குச் சொந்தமான போயஸ் கார்டன், போயஸ் கார்டன் கூடுதல் கட்டடம், ஹைதராபாத் திராட்சைத் தோட்ட பங்களா என 3 கட்டடங்களுக்கு ஆன செலவு ரூ.3.62 கோடிதான். ஆனால், தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் ரூ.13 கோடி என்று போட்டிருக்கிறார்கள். அதேபோல ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 4 பேரில் மொத்த கட்டட கட்டுமான செலவு ரூ.10 கோடி. ஆனால் தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் ரூ.28 கோடியாக பதிவு செய்திருக்கிறார்கள்.  
முடித்துவிட்டேன் யுவர் ஹானர்!
(மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு வந்த பவானி சிங் ஆவணக் கட்டுகளோடு நின்றார்.)
நீதிபதி: முடித்துவிட்டீர்களா?
பவானி சிங்: ஆமாம். முடித்து விட்டேன் யுவர் ஹானர்! மேலும் எங்கள் தரப்பு வாதங்களை எழுத்துப் பூர்வமாகக் கொடுக்கிறேன் (300 பக்கங்களுக்கும் மேற்பட்ட  எழுத்து பூர்வமான ஆவணத்தை தாக்கல் செய்தார்.) ''குற்றவாளிகள் தரப்பு ரூ.66.65 கோடி வருமானத்துக்கு அதிகம் சொத்து சேர்த்துள்ளதாகக் குற்றம்சாட்டி அதற்கான ஆதாரம் சிறப்பு நீதிமன்றத்தில் கொடுத்தோம். நீதிமன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பில் சில தவறுகளைக் காட்டி ரூ.11 கோடி தள்ளுபடி செய்து ரூ.55 கோடி வருமானத்துக்கு அதிகம் சொத்து சேர்த்ததாக உறுதிப்படுத்தி குற்றவாளிகளுக்கு தீர்ப்பளித்துள்ளது.
அந்த நீதிமன்றத்தில் கொடுத்த ஆவணங்களையும், ஆதாரங்களையும் இங்கும் சமர்ப்பிக்கிறேன். கீழமை நீதிமன்றம் வழங்கிய அதே தீர்ப்பை இந்த நீதிமன்றமும் உறுதி செய்து நீதியை நிலைநாட்ட வேண்டும். இல்லையேல் இந்த மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும். (பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி  ஆகியோர் மீதான ஊழல் வழக்குகள் மற்றும் உச்ச நீதிமன்ற வழக்குகளையும் மேற்கோள்காட்டி தனது மனுவை பவானி சிங் கொடுத்திருக்கிறார்.)
''ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையே பாதிக்கப்பட்டிருக்கிறது!'
பவானி சிங் தன் வாதத்தை நிறைவு செய்ததும் டெல்லியில் இருந்து வந்திருந்த ஜெயலலிதா வழக்கறிஞர் நாகேஸ்வரராவ் தன் நிறைவு  தொகுப்புரை வழங்கினார்.
நாகேஸ்வரராவ்: ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 1 ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டு எப்படி இவ்வளவு சொத்துகள் வந்தது என்று குற்றம் சுமத்துகிறார்கள். கீழமை நீதிமன்றமும் அவருக்கு 13(1)இ படி தண்டனையும் வழங்கி உள்ளது. ஆனால் 13(1)இ சட்டத்தில் என்ன சொல்கிறது என்றால் சட்டத்தால் தடை செய்யப்படாத எந்த ஒரு வருமானமும் அனுமதிக்கப்படுகிறது. அதை வருமானமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படித்தான் ஜெயலலிதாவுக்கு சட்டப்படி பல ஆதாரங்கள் மூலம் வருமானம் வந்தது. அதன் அடிப்படையில் சொத்துகளை வாங்கினார். ஆனால் வருமானத்தை ஊழல் தடுப்பு போலீஸார் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. ஜெயலலிதாவின் பணத்தில்தான் மற்ற 3 பேரும் சொத்துகளை வாங்கினார்கள் என்ற குற்றச்சாட்டு தவறானது. ஜெயலலிதா வருமானம் குறித்து வருமானவரித் துறை ஏற்றுக்கொண்டுள்ளது. வருமானவரித் துறை அளித்துள்ள ஆவணங்களே இந்த வழக்கின் உண்மையான ஆதாரங்களாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
நமது எம்.ஜி.ஆர்., நிறுவனத்தில் 14 கோடி சந்தா வசூலிக்கப்பட்டதற்கு அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பித்து இருக்கிறோம். இந்தியாவில் உள்ள பத்திரிகைகள் சலுகை திட்டங்களை அறிவித்து சந்தா பிடிப்பது வழக்கம்தான். ஹைதராபாத் திராட்சை தோட்ட பங்களாவின் கட்டுமான செலவு ரூ.5.72 லட்சம். ஆனால், தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை ரூ.52 லட்சமாகப் பதிவு செய்துள்ளது. இரண்டுக்குமான வேறுபாடு 46.71 லட்சம். ஹைதராபாத் திராட்சை தோட்டம்
1968-ம் ஆண்டு வாங்கப்பட்டது. ஜெயலலிதா முதல்வர் ஆனதும் முதல் வருடம் அவருடைய 44வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. தலைவர்களின் பிறந்தநாளில் கிஃப்ட் கொடுப்பது வழக்கமான ஒன்றுதான். அப்படி கிஃப்ட் கொடுத்தவர்களுக்கு ஏதாவது சலுகை கொடுத்திருந்தால்தான் தவறானது. அதனால், கிஃப்ட் முறையாக வழங்கப்பட்டதுதான். அவர்களுக்கு எந்த சலுகையும் கொடுக்கவில்லை.
மார்பிள்ஸ், கிரானைட் மும்பையில் ஒரு சதுர அடி 80 ரூபாய்க்கு வாங்கப்பட்ட கற்களுக்கு 8,000 ரூபாய் வரை காண்பித்து இருக்கிறார்கள். இதேபோன்றுதான் ஒவ்வொரு செலவுகளின் மதிப்பையும் அதிகப்படுத்தி காட்டி இருக்கிறார்கள். தங்க, வைர நகைகள் ஜெயலலிதாவிடம் 1977-78- லேயே 21.280 கிராமும், சசிகலாவிடம் 1900 கிராமும், நினைவுப்பரிசு 3365 இருந்தன. அனைத்தும் வழக்கு காலகட்டத்துக்கு முன்பே வாங்கப்பட்டவை.
இப்படிச் செலவுகளை அதிகப்படுத்தியும், வருமானங்களைக் குறைத்தும் கணக்கீடு செய்திருக்கிறார்கள். இதை அனைத்தும் கீழமை நீதிமன்றம் கவனத்தில் கொள்ளாமல் சட்டத்துக்கு உட்பட்டு தீர்ப்பு வழங்கவில்லை. எங்கள் கட்சிக்காரர்களை அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்கத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆவணங்களையும், ஆதாரங்களையும் கவனத்தில் கொள்ளாமல் அனுமானத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இதனால் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையே மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆவணங்களையும், ஆதாரங்களையும் பரிசீலித்து நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும். நீங்கள் நல்லதொரு தீர்ப்பை வழங்குவீர்கள் என்று நானும் என்னுடைய சகாக்களும் நம்புகிறோம்!' என்று முடித்தார்.

ad

ad