புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மார்., 2015

தற்கொலை செய்து கொண்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி ரவி மீது பாலியல் புகார்!


ஐ.ஏ.எஸ். அதிகாரி ரவி எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்று பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் கூறி இருப்பது இந்த வழக்கில் தற்போது திடீர் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.பெங்களூருவில் வணிக வரித்துறை கூடுதல் கமிஷனராக இருந்தவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவி. இவர், கோலார் மாவட்டத்தில் ஆட்சியராக இருந்தபோது மணல் கடத்தல்,
சாலைப் பணிகளில் முறைகேடு, புறம்போக்கு நில அபகரிப்பு, ஏரிகள் ஆக்கிரமிப்பு ஆகியவற்றுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்த நேர்மையான அதிகாரி என்று கூறப்பட்டவர்.

ஐ.ஏ.எஸ்.  அதிகாரி ரவி, கடந்த 16 ஆம் தேதி தனது வீட்டில் திடீரென மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை, கொலை செய்யப்பட்டுள்ளார் என்று குற்றச்சாட்டு எழுந்து நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று கர்நாடக அரசியல் கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக சட்டப்பேரவையிலும் இந்த விவகாரம் கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கில் திடீர் திருப்பம் தற்போது ஏற்பட்டு உள்ளது. தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் ஐ.ஏ.எஸ். அதிகாரி ரவியும், அவருடன் ஒன்றாக படித்த மற்றொரு பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியும் தொடர்ந்து தொலைபேசியில் பேசி வந்திருப்பதை, இவ்வழக்கை விசாரித்து வரும் சி.ஐ.டி. போலீசார் கண்டுபிடித்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, சம்பவம் நடந்த நாளில் மட்டும் 44 முறை, ரவி அந்தப் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு செல்போனில் அழைப்பு விடுத்து பேசி உள்ளார்.

மேலும் ரவி, கடைசியாக அப்பெண் அதிகாரியுடன் தான் செல்போனில் 16 விநாடிகள் பேசியுள்ளார். ரவியின் தொலைபேசி தொடர்புகளை ஆய்வு செய்ததில் பலமுறை இருவரும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளது தெரியவந்துள்ளது. பின்னிரவு நேரத்தில் கூட இருவரும் செல்போனில் பேசியுள்ளனர். தற்கொலை செய்து கொள்வதற்கு முதல்நாள் கூட ஒருவருக்கொருவர் 8 முறை செல்போனில் பேசியுள்ளனர்.

அதிகாரி ரவி இறந்த நான்கு மணி நேரத்தில், இந்த வழக்கில் புலனாய்வு துறை அதிகாரியாக நியமிக்கப்பட்ட துணை காவல் ஆணையரை அழைத்த அந்த ஐ.ஏ.எஸ். பெண் அதிகாரி, ''எங்கள் இருவருக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருந்தது. திருமண உறவை முறித்துக்கொள்ளும்படி ரவி என்னை தொந்தரவு செய்தார். ரவியால் நான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டேன், தொடர்ந்து அவர் என்னிடம் பலாத்காரத்திற்கு முயன்றதற்கு நான் உடன்படவில்லை" என்று கூறியுள்ளார்.

பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி கூறியுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள், தற்போது இந்த வழக்கில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும், அந்தப் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி கூறியது குறித்து, சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

ad

ad