புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஏப்., 2015

கொஞ்சம் கொஞ்சமாக அதிகாரங்கள் வருகின்றன! – முதலமைச்சர் விக்னேஸ்வரன்

சிறிது சிறிதாக அதிகாரங்கள் எம்மை நோக்கி வருகின்றன. என்று தெரிவித்துள்ளார் வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.

விக்னேஸ்வரன்.யாழ். இந்து மகளிர் கல்லூரியில் பட்டதாரி நேற்று ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 
சிறிது சிறிதாக அதிகாரங்கள் எம்மை நோக்கி வருகின்றன. இன்று நல்லாட்சிக்கு வித்திட வேண்டும் என்பதுதான் எங்களதும் மத்தியில் இருக்கும் அரசாங்கத்தினதும் குறிக்கோள் ஆகும். நல்லாட்சி என்பது வெறும் பெயரளவிலான ஒரு கொள்கையாகாது. எமது ஒவ்வொரு நடவடிக்கையும் மற்றவர்கள் பார்வைக்கும், மதிப்பீட்டுக்கும், கணிப்புக்கும் ஆளாகவேண்டிய ஒரு நிலைகூட நல்லாட்சியே. மக்களின் மனமறிந்து, தேவையறிந்து, அவர்களின் சிந்தனை செல்திசையறிந்து மாண்புடன் பயணம் செய்வதும் நல்லாட்சியே. 
ஐக்கிய நாடுகள் எட்டுக் கருத்துக்களை நல்லாட்சிக்குரிய குணாம்சங்கள் என்று அடையாளம் கண்டுள்ளார்கள். அவையாவன 
01. ஐக்கியப்பாட்டுடன் ஆட்சி நடத்துதல். 
02. பங்குபற்றலுடன் ஆட்சி நடத்துதல். 
03. சட்டத்திற்கு அமைவாக ஆட்சி நடத்துதல். 
04. பயன் அளிப்பதாகவுந் திறனுடையதாகவும் ஆட்சி நடத்துதல். 
05. பதிலளிக்குந்தன்மைக்கு அமைவாக ஆட்சி நடத்துதல். 
06. வெளிப்படையான தன்மையுடன் ஆட்சி நடத்துதல். 
07. மக்கள் மனமறிந்து ஆட்சி நடத்துதல். 
08. நேர்மையாகவும் அணைப்புடனும் ஆட்சி நடத்துதல். 
ஐக்கியப்பாட்டுடன் ஆட்சி நடத்துவது என்பது எமது செல்நோக்குகளை, இலக்குகளை எல்லோரும் புரிந்து கொண்டு முன் செல்லல். பட்டதாரிகளான நீங்கள் இதை நன்றாகப் புரிந்திருப்பீர்கள். வடமாகாணம் ஒன்று தான் ஒரேயொரு தமிழ்ப் பேசும் முதலமைச்சரைக் கொண்டு இப்பொழுது இயங்குகின்றது. இம்மாகாண மக்களில் பெரும்பான்மையோர் தமிழ்ப் பேசும் மக்கள். 
ஆகவே எமது செயல்பாடுகளாவன தமிழ் பேசும் எம் மாணவ மாணவியர்க்குத் தமது பாரம்பரியங்கள் பற்றி, தமது சிறப்பியல்புகள் பற்றி, தமது குறைபாடுகள் பற்றி போதியவாறு அறிய நாம் துணைபோவதாக அமைய வேண்டும். ஆட்சியில் ஐக்கியப்பாடு என்னும் போது ஆட்சியின் அலகுகளான நீங்களும் அதனுள் ஏற்கப்படுகின்றீர்கள். 
எமது இலக்கு பொதுவானதாக இருக்க வேண்டும். அந்தப் பொதுத் தன்மையையே நாங்கள் ஐக்கியப்பாட்டுடனான ஆட்சி நடத்தல் என்கின்றோம். அமைச்சர்கள், அலுவலர்கள், ஆசிரியர்கள் என்ற பாகுபாடுகளுக்கு அப்பால் ஒரு திடமான முன்நோக்கை வைத்துப்பயணம் செய்வதையே இது வலியுறுத்துகின்றது. பங்குபற்றல் என்று கூறும் போது எந்த ஒரு முரனான கருத்துடையவர்களையும் புறந்தள்ளி வைக்காது இருத்தலாகும். 
எல்லோர் கருத்தையும் நாம் ஏற்று நடக்க முடியாது. ஆனால் கருத்துக் கூறுபவருக்கு மதிப்பளித்து அதே நேரம் அவரின் கருத்தை மறுதளிக்கலாம். சட்டத்திற்கு அமைவாக ஆட்சி நடத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தேதும் இருக்கத் தேவையில்லை. சட்டம் சமூகத்தின் ஒழுங்கமைப்பையும் ஒழுக்க முறையையும் நிர்ணயிக்கின்றது.அதற்கமைவாக எமது ஆட்சி நடைபெற வேண்டும் என்று கூறுவதால் சமூகத்தில் முரண்பாடுகள் ஏற்படாதவாறு எமது ஆட்சி அமைய வேண்டும் என்றாகிறது. 
எமது ஆட்சி முறை பயனளிப்பதாக இருக்க வேண்டும். திறன் உடையதாகவும் இருக்க வேண்டும். இது ஆசிரியர்களாகப் போகும் உங்களுக்கு முற்றிலும் பொருந்தும். மாணவ மாணவியர்க்குப் பயனளிப்பதாகவும் ஆசிரியத் திறன் உடையதாகவும் உங்கள் சேவை அமைய வேண்டும். பதிலளிக்கும் தன்மை என்பது மிக முக்கியமானதொன்று. நாங்கள் அரச ஊழியர்கள் அல்லது அதிகாரத்தில் உள்ளவர்கள்.ஆகவே எங்களை எவரும் கேள்வி கேட்க முடியாது என்று நடந்து கொள்வது தவறான, பிறழான பல விமர்சனங்களை எம் மக்கள் அரசியல் காரணங்களுக்காகவும், பொறாமையாலும், பொறுக்கமாட்டாத் தன்மையாலும் முன்வைக்க எத்தனிக்கின்றார்கள். 
அதற்காக நாங்கள் எமது பதிலளிக்கும் தன்மையைக் கை விடலாகாது.உண்மை வெல்லும் என்ற நம்பிக்கையுடன் நாம் முன்னேற வேண்டும். வெளிப்படைத்தன்மை தொடக்கத்திற்குரியது என்றால் பதிலளிக்குந்தன்மை முடிந்த பின் எழுவது.நாம் வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்கின்றோம் என்றால் எமது நடவடிக்கைகள் சட்டத்திற்கு அமைவாக, நியாயத்திற்கு அமைவாக சம்பிரதாயங்களுக்கு அமைவாக இருக்க வேண்டும். 
சுயநல நோக்குடன் அமையலாகாது. எப்பொழுது நாங்கள் வெளிப்படைத்தன்மையைப் புறக்கணிக்கின்றோமோ அப்பொழுது ஏதோ ஒரு சுயநலம் கலந்த நன்மையை நாங்கள் பெற உத்தேசித்துள்ளோம் என்று அர்த்தமாகும்.அடுத்த குணாம்சம் மக்கள் மனமறிந்து செயலாற்றுவது. Responsive என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
அதாவது, மறுமொழி கூறுவதும் இதனுள் அடங்கும். ஆனால் பதிலளிக்குந் தன்மை என்பதில் அதை நாங்கள் ஏற்கனவே கூறிவிட்டோம். மக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து கடமையாற்றுவதே இந்தக் குணாதிசயம். அனைத்து முன் செல்வதானால் நாம் நேர்மையாக நடந்து கொள்வது அவசியம். இந்த எட்டு குணாதியசயங்களையும் ஐக்கிய நாடுகள் வலியுறுத்தியுள்ளதென்றால் ஒரு நாட்டின் அரசாங்கம், ஒரு நிறுவனத்தின் ஆட்சி முறை சில சட்டதிட்டங்களுக்கு, கொள்கைகளுக்கு, நடைமுறைகளுக்கு நன்கு கட்டுப்பட்டு நடாத்தப்பட வேண்டும் என்ற கருத்தையே உள்ளடக்கியுள்ளது எனலாம். 
தான்தோன்றித்தனமாக நடந்து கொள்வது பட்டதாரிகளான உங்களுக்கு அழகல்ல. நீங்கள் எங்கள் சமுதாயத்தின் அறிவுசார் அலகுகள். ஆட்சி முறை பற்றியும் அதிலுள்ள அதி சூட்சுமங்கள் பற்றியும் அறிந்திருப்பது அனைவருக்கும் நன்மை பயக்கும் என்ற எண்ணத்தினால்தான் இச்சிற்றுரையை இவ்வாறு அமைத்தேன். 

வடமாகாண பட்டதாரி ஆசிரியர்கள் சகல விதங்களிலும் சிறந்து விளங்க வேண்டும். எமது மாணவ சமுதாயம் உங்கள் தன்னலங்கருதாத சிறந்த சேவை மூலம் நல்ல பெறுபேறுகளைப் பெற வேண்டும். உங்களுக்கான வாழ்க்கை அனுசரணைகள் நன்றாக அமைய வேண்டும் என்றார்.

ad

ad