புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 மார்., 2015

தமிழீழத்தின் உயிர் காத்த உத்தமனின் இறுதிப் பயணம்..... - சென்று வருக மருத்துவப் பெருமானேவைத்திய கலாநிதி கெங்காதரனின் இறுதி நிகழ்வுகள்


வைத்திய கலாநிதி கெங்காதரனின் இறுதி நிகழ்வுகள் இன்றைய தினம் யாழ்.தட்டாதெரு ஐயனார் கோவிலடியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.
பெரும் திரளானோரின் பங்கேற்புடன் பூதவுடன் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அன்னாரின் இறுதிச்சடங்களில் அரசியல் கட்சிகளை சார்ந்தவர்கள், பொதுமக்கள் மற்றும் வைத்தியர் கெங்காதரனால் உருவாக்கப்பட்ட வைத்தியர்கள், வைத்திய தொண்டர்கள், பொதுமக்கள் என பெருமளவானவர்கள் கலந்து கொண்டனர்.
முள்ளிவாய்க்கால் போர் உச்சம் பெற்றிருந்த காலப்பகுதியிலும் கிளிநொச்சியிலும், முல்லைத்தீவிலும் இருந்து வைத்திய கலாநிதி கெங்காதரன் மருத்துவப் பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்று வருக மருத்துவப் பெருமானே!
 உழைப்பாளன் ஒருவன் உறங்கிக்கிடக்கின்றான்
எண்ணற்ற இதங்களின் இதயத் துடிப்பின் ஓசைகளை கேட்டு
உயிரின் பயணத்துக்கு பக்குவம் சொன்ன கங்காதரன்
பயணம் ஒன்றுக்கு தயாராகிவிட்டார்.
பூமித்தாயின் இதயத்தில்
பூவில் உறைந்திருக்கும் காற்றில்
மூங்கில் காட்டில்
இன்று டெதஸ்கோப் வைத்துப் பார்த்தேன்
கண்ணீர்துளிகள் சொட்டும் ஓசை.
 ஈழத்தமிழனின் புறநானூற்றுப் பயணத்தில்
விழுப்புண்களுக்கு மருந்திடும் வித்தை தெரிந்தவர்கள்
களத்திலே காயங்களுடன் குருதி சிந்தவரும்
வீரனுக்கு மடியிலே வேதம் சொல்லி
விடியலை காட்டும் கால வைத்தியன்கள் கடவுள்தான்.
மாமனிதன் கங்காதரன் கடவுள்.
புன்னகையும் பொறுமையும் மென்மையும்
வேகமும் தாகமும் கொண்ட உயிரின் காவலன்.
விடுதலைப்பயணத்துக்காக அறுபது கடந்த பின் கங்காதரன்
இளைஞனாய் பிறப்பெடுத்தார்.
 நந்திக்கடல் வீதிகளிலும் வன்னிக்கானகத்தின் படை
வீடுகளிலும் நொந்துபோனவர்களின்
வருடலாய் திரியும் மருத்துவப்படையின்
வழியாய் விழியாய் விரிந்தது கங்காதரம்.
கங்;காதரனின் யாக சாலை அற்புதமானது.
எப்பொழுதும் திறந்திருக்கும் இதயமாய் இருந்தது.
அவர் கைபட்டதுமே காய்ச்சல் மாறியவன் எத்தனை பேர்
அவர் பெயர் சொன்னதும் வலிகுறைந்து மகிழ்ந்த
சுகப்பிரசவங்கள் எத்தனை எத்தனை
நீ மருந்திடுவாயெனில் மேனி முழுக்க களத்தில்
காயம் தாங்குவேன் என்று கங்கணம் கட்டியன் எத்தனை பேர்
கங்காதரனின் குளிசைகள் மனதுகளுக்கு
கற்பூரமும் ஊதிபத்திகளும் போல பரவசமானவை.
 எல்லாம் வாசல்களும் மூடப்பட்ட வன்னிக்குள் உள்ளதை வைத்து
உயிர்காத்த வல்லமை முன் மண்டியிடும் தருணம் இது.
ஒரு கையில் டெதெஸ்கோப்பும் மறுகையில்
காட்டு மூங்கிலுமாக வாழ்வுக்கு அர்த்தம் சொன்ன கங்காதரா
உன் ஆவிக்கொரு மருத்துவம் இல்லை என்பதும்
உன் கற்பூர தேகத்தை காவிச்செல்லும்
அந்த கந்தர்வதேவர்கள் இம்மண்ணில் மௌனித்து இருப்பதும் கால நியதி.
 தாயகம் முழுதும் தோளில் சுமந்து அஞ்சலிக்க வேண்டிய
சந்தணமேனி பூமியின் ஒரு மூலையோடு அடங்கிடுமோ ஐயகோ!
வீழ்ந்தவர்கள் கண்ட கனவு வென்று
வேங்கைக்கொடி பறக்கும் தேசத்தில் உன் ஆவி பிரிந்திருந்தால்
இன்று ஓடி வந்திருப்பான் முதலில் கரிகாலன்
உனக்குரிய உயர்ந்த கௌரவத்தை கொடுத்திருப்பான்.
 போரின் உக்கிர காலத்தில் வாழ்ந்த ஒவ்வொரு
தமிழனுக்குள்ளும் கங்காதரனின் விம்பம் கடவுளாய் இருக்கின்றது.
மானுட தேகத்தின் சூட்சுமங்கள் பற்றிய
கங்காதரனின் கணக்கை கற்றவர்கள்
இப்பொழுது எந்த நாட்டில் இருந்தாலும்
வைத்தியத்துறை அவர்களுக்கு வசியப்பட்டிருக்கும்.
இசையும் ஒரு மருத்துவம் என்பதாலோ என்னவோ
புல்லாங்குழல் ஏந்திய பெருமானாகவும் கங்காதரன்
நம் மண்ணில் உலவி உள்ளம் சிலிர்க்கவைத்தார்.
இது உண்மையில் உதடுகளை பிரிந்து
தவித்துக் கொண்டிருக்கும் புல்லாக்குழலுக்கும் சேர்த்து
எழுதும் அஞ்சலியின் பல்லவி
எம் தாய் பெற்றெடுத்த வண்ணங்களில்
ஒன்று வானவில்லாகி கரைகின்றது.
எம் மண்ணை வருடித்திரிவதே வாழ்கையென்றிருந்த
காற்றொன்று நேற்றோடு கங்காதரன் வடிவில் நின்றிற்று.
உன் வாழ்கையில் நாடி நரம்புகளை ஒவ்வொன்றாய் எழுதலாம் ஐயனே!
ஒவ்வொன்றிலும் மண் வாசமும் மகத்துவமும் ஒட்டியிருக்கும்.
அன்பனே!
விண்ணைத் தாண்டியும் விடைபெற்றுப்போகலாம்.
அங்கேயும் காத்திருக்கும் நீ கைநாடி பிடிக்க ஆசுவாசப்பட ஒரு உலகம்.
சென்று வருக மருத்துவ பெருமானே!
பொன்.காந்தன்

ad

ad