புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 மார்., 2015

நாடாளுமன்ற தேர்தல் வரும்போது பொறாமையின்றி போட்டி போடுங்கள் ஒருங்கிணைந்த சேவை தேவை - விக்கினேஸ்வரன்

நாடாளுமன்ற தேர்தல்கள் வரும் போது பொறாமை இல்லாமல் போட்டிகளில் பங்குபற்ற நாங்கள் திடசங்கற்பம் பூணவேண்டும். மக்கள் சேவையை முன்வைத்து முன்னேறவேண்டும். 

எங்கள் ஒற்றுமையும் ஒருங்கிணைந்த சேவையும் இங்கிருக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் நல்லதொரு வாழ்க்கையை ஏற்படுத்தும் என்பதை நாம் மறந்து விடக் கூடாது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக் காட்டியுள்ளார்.

புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட மகப்பேற்று, குழந்தைகள் விடுதி மற்றும் பழைய கட்டடத்தில் அமைக்கப்பட்ட பல் சிகிச்சை நிலையம் ஆகியவற்றைத்  நேற்று வியாழக்கிழமை  திறந்து வைத்தும் 24 கட்டில்களைக் கொண்ட விடுதிக்கான அடிக்கல்லை நாட்டிய பின்னர் உரையாற்றுகையிலேயே முதலமைச்சர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், வடமாகாண ஆளுநர் எச்.என்.ஜி.எஸ்.பளிஹக்காரவும் நாங்களும் ஒற்றுமையுடன் செயற்படுவதால் இந்த வடமாகாணத்துக்கு பல நன்மைகள் வந்தடையும் என்பதில் எனக்கு சந்தேகம் எதுவுமில்லை.

ஆளுநருடன் சேர்ந்து மருத்துவ தொகுதியொன்றைத் திறந்து வைக்கும் முதல் நிகழ்வு இது. எவ்வாறு பாதிக்கப்பட்ட எமது மனங்களுக்கு புதிய ஆளுநர்  மன நிம்மதியையும் மகிழ்வையும் கொண்டு வந்தாரோ அதேபோல் போரால் பாதிக்கப்பட்டிருந்த புதுக்குடியிருப்பு பிரதேச வைத்தியசாலையும் நேற்று நடைபெற்றுள்ள நற்காரியங்களின் நிமித்தம் புதுப் பொலிவுடன் விளங்குகின்றது. இந்த வைத்தியசாலையானது முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அடுத்த மிகமுக்கிய வைத்தியசாலையாக இந்தப் பிராந்தியத்தில் விளங்குகின்றது.

சுமார் 42,000 பொதுமக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் மருத்துவமனையாகப் புதுக்குடியிருப்பு பிரதேச வைத்தியசாலை விளங்குகின்றது. மூன்று நிரந்தர வைத்தியர்களையும், தாதிய அலுவலர்களையும் மேலும் 35 பணியாளர்களையும் உள்ளடக்கி சேவை செய்து வருகின்றது இந்த வைத்தியசாலை. ஆளுநர், நாங்களும் போரால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்த இந்தப் பிரதேசங்கள், நொந்து, நொய்ந்து நோவுற்றிருந்த இந்தப் பிரதேசங்கள் புதுப்பொலிவுடன் விளங்க வேண்டும் என்ற பேரவாவுடன் இருக்கின்றோம். வட மாகாண ஆளுநர் நிர்வாகச் செயற்பாடுகளில் பக்கபலமாகவுள்ளார் எமக்கு ஆளுநர் ஒத்தாசையாக விளங்குகின்றார்.

அவருக்கு நாம் எம்மாலான சகல அனுசரணைகளையும் வழங்கி வருகின்றோம். மாகாண நிர்வாகத்தில் தேவையில்லாத குறுக்கீடுகளை தவிர்த்து வரும் எமது ஆளுநருக்கு நாம் எமது நன்றிகளைக் கூறக் கடமைப்பட்டுள்ளோம். போட்டி வேண்டும் பொறாமை கூடாது. போட்டி மனப்பான்மை எம்மை மேலும் மேலும் தொழிற் திறன்மிக்கதாய் அல்லது வினைத்திறன் மிக்கதாய் அல்லது சேவைத் திறன் மிக்கதாய் விளங்க உதவி புரிகின்றது.

பொறாமையானது எம்மை அழிவு வழிக்கு அழைத்துச் செல்கின்றது. மகாபாரதத்தில் பாண்டவர்கள் போட்டி மனப்பான்மை யால் தம்மை விருத்தி செய்திருந்தார்கள் எனில் கௌரவர் தமது பொறாமை மனப்பான்மையால் ஈற்றில் அழிவையே தேடிக் கொண்டனர். நாடாளுமன்ற தேர்தல்கள் இன்று எட்டி பார்த்துக் கொள்ள விழையும் இந்த நேரத்தில் எங்களுக்குள் போட்டிகள் வளரட்டும்.

ஆனால் பொறாமை எழாது இருக்கட்டும். மற்றவர்களை ஊக்குவித்து அதேநேரத்தில் நாமும் ஊக்கமுடன் முன்னேறுவதே போட்டி மனப்பான்னையின் தாற்பரியம். நான் மட்டும் முன்னேற வேண்டும் மற்றையவன் வீழ வேண்டும் என்பது பொறாமை மனோநிலையின் வெளிப்பாடு எனக் கூறினார்
.

ad

ad