புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 மார்., 2015

கணினி உலகில் சீரழியும் தமிழ்: ராமதாஸ் கவலை!


கணினி உலகில் மொழி சீரமைப்பு என்ற பெயரில் சிலர்  தமிழ் மொழியைச் சீரழிக்கும் முயற்சிகளில்  ஈடுபட்டு
வருவதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கவலை தெரிவித்துள்ளார். மேலும் இந்த முயற்சிகளை  தடுத்து நிறுத்த தமிழக அரசு உடனடி நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," தரணியில் வளர்ந்த தமிழ் கணினியிலும் வளருவதற்கு தமிழ் ஒருங்குறியை (Tamil-Unicode) வளர்த்தெடுக்க வேண்டியது இன்றியமையாதது என்பதால், அதை மேம்படுத்துவதற்கான  முயற்சிகளில் தமிழறிஞர்கள் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தமிழுடன் சற்றும் தொடர்பில்லாத சிலர் தமிழ் ஒருங்குறியை சீரமைப்பதாகக் கூறிக் கொண்டு சீரழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ் ஒருங்குறியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை என்றால் அது தமிழ் மொழியிலுள்ள 247 எழுத்துக்களையும் ஒருங்குறியில் சேர்ப்பதாகத்தான் இருக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக தனித்தமிழ் பயன்பாட்டாளர்களால் ஏற்கப்படாத 5 கிரந்த எழுத்துக்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிட்டு தமிழ் ஒருங்குறியில் திணிக்கப்பட்டன.
அப்போது இது பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் அதை தடுக்க முடியாமல் போய்விட்டது. அதன்பின்னர் 2010 ஆம் ஆண்டில் 26 கிரந்த எழுத்துக்களைத் திணிக்க சதி நடைபெற்றது. ஆனால், இதற்கு எதிராக தமிழறிஞர்கள் கொதித்து எழுந்ததையடுத்து, இச்சிக்கலில் தலையிட்ட அப்போதைய தமிழக அரசு கிரந்த எழுத்துத் திணிப்பை தடுத்து நிறுத்தியது.
எனினும், தமிழ் ஒருங்குறியை சீரழிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள சக்திகள், இப்போது   தமிழ்நாட்டின் தொன்மையான பின்னங்கள், வாணிபக் குறியீடுகள், அளவைகளின் குறியீடுகள் போன்ற 55 வகையான குறியீடுகளை பிழையாக தமிழ் ஒருங்குறியில் சேர்க்க முயன்று வருகின்றன. இதற்கான பரிந்துரைகள் ஒருங்குறி சேர்த்தியத்திற்கு (Unicode- consortium) அனுப்பப்பட்டிருக்கிறது.
இவை பழந்தமிழ் குறியீடுகள் என்பதால் இவை கண்டிப்பாக ஒருங்குறியில் சேர்க்கப்பட வேண்டும் என்று அந்த சக்திகள் சார்பில் விளக்கம் அளிக்கப்படுகிறது. தொல்லியியல், நாணயவியல் மற்றும் வரலாற்றுத் துறையைச் சேர்ந்த வல்லுனர்கள் இந்த பரிந்துரையை வழங்கியிருந்தால் அதை ஏற்பதில் எந்த தடையும் இல்லை. மாறாக இப்பரிந்துரைகளை வழங்கியவர்கள் சிறீரமண சர்மா என்ற சமஸ்கிருத  ஆய்வாளரும், அவருடன் இணைந்து செயல்படும் சில தனியார் நிறுவனங்களும் ஆகும்.
இவர்களில் சிறீரமண சர்மா ஒருங்குறி சேர்த்தியத்துடன் தமக்கு உள்ள தொடர்பை பயன்படுத்திக் கொண்டு தமிழ் ஒருங்குறியை சீரழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்கு முன் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய 26 கிரந்த எழுத்துக்களை ஒருங்குறியில் சேர்க்கும் பரிந்துரையை செய்தவர் இவர் தான்.
வழக்கமாக இத்தகைய பரிந்துரைகளுக்கு தமிழக அரசின் தமிழ் இணையக் கல்விக் கழகம் (Tamil Virtual University) ஏற்பளிப்பு வழங்கினால்தான் அவை ஒருங்குறி சேர்த்தியத்தால் ஏற்கப்படும். சிறீரமண சர்மாவின் பரிந்துரைகள் தமிழ் இணையக் கல்விக் கழகத்திற்கு வந்த போது, வரலாற்று  ஆய்வாளர்கள், தொல்லியல் அறிஞர்கள் உள்ளிட்டோரைக் கொண்ட குழுவை அமைத்து ஆராய்ந்துதான் ஏற்பளிப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், குற்றவாளியையே நீதிபதி ஆக்கியதைப் போல, சிறீரமண சர்மாவையே இதற்கான குழுவின் உறுப்பினராக்கி அவரது பரிந்துரைக்கு அவரையே ஏற்பளிப்பு வழங்க வைத்திருக்கிறது இணையக் கல்விக் கழகம். சிறீரமண சர்மா செய்தது குற்றம் என்றால், இணையக் கல்விக் கழகம் செய்தது பெருங்குற்றமாகும். இரண்டுமே கண்டிக்கத்தக்கவை.
இந்தப் பிழையான பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டால்  தமிழ்க் கல்வெட்டுகள் உள்ளிட்ட தமிழின் பழைய ஆவணங்களைக் கணினிமயம் செய்யும்போது பல வரலாற்றுத் திரிபுகள் ஏற்படும் ஆபத்து  உள்ளது. இது கணினியுலகில் தமிழை வளர்ப்பதற்கு மாற்றாக வீழ்த்தி விடும் என்பதை ஆட்சியாளர்கள் உணரவேண்டும். எனவே, இந்த பிழையான ஒருங்குறிச் சேர்ப்புப் பரிந்துரையைத் திரும்பப் பெறவேண்டும்.
அத்துடன் தமிழ் ஒருங்குறியில் தனியார்களும், வெளிநாட்டினரும் தலையிட்டுக் குழப்பம் செய்வதை  தடுக்கவும், தமிழ்மொழி சார்ந்த குறியீடுகளை, கல்வெட்டு, வரலாற்றுத்துறை, ஓலைச்சுவடி, நாணயவியல் அறிஞர்கள் என்ற அனைவரும் கூடி ஆய்வு செய்த பின்னரே ஒருங்குறிச் சேர்த்தியத்திற்கு அனுப்பவும் தேவையான நெறிமுறைகளை அரசு உடனடியாக உருவாக்க வேண்டும்.
இதன் மூலம் கணினியுலகில் தமிழ் சீரழிவதைத் தடுத்து தமிழ் மரபின் தொன்மையை தமிழக அரசு காக்க வேண்டும் " என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ad

ad