புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மார்., 2015

நியூசிலாந்துவெற்றி . அரையிறுதிக்கு தகுதி: ஏமாற்றத்துடன் வெளியேறியது மேற்கிந்திய தீவுகள் (வீடியோ இணைப்பு)



மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான உலகக்கிண்ண காலிறுதிப் போட்டியில், நியூசிலாந்து 143 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று
அரையிறுக்கு முன்னேறியுள்ளது.
நியூசிலாந்தின் வெலிங்டனில் நடைபெற்ற உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடரின் நான்காவதும் இறுதியுமான காலிறுதிப் போட்டியில் நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இன்று மோதின.
இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக மெக்குல்லம் மற்றும் குப்டில் ஆகியோர் களமிறங்கினர்.
ஜெரோம் டெய்லரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்து ஓட்டங்கள் குவிப்பை தொடங்கினார் குப்டில். மறுமுனையில் தலா ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்த மெக்குல்லம் (12), ஹோல்டரின் அசத்தலான ‘கேட்ச்சில்’ பெவிலியன் திரும்பினார்.
பின் குப்டிலுடன் இணைந்த வில்லியம்சன், சற்று தாக்குப்பிடித்த போதும் 33 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றினார். 4 ஓட்டங்களில் சாமுவேல்சிடம் தப்பிப் பிழைத்த குப்டில், ஒருநாள் அரங்கில் 23வது அரைசதம் எட்டினார்.
தொடர்ந்து இந்த ஜோடி, மேற்கிந்திய தீவுகளின் பந்துவீச்சை எளிதாக எதிர்கொண்டு ஓட்டங்கள் சேர்த்தது.
சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்த குப்டில், உலகக்கிண்ணத் தொடரில் தொடர்ந்து இரண்டாவது முறையாக சதம் அடித்தார்.
மூன்றாவது விக்கெட்டுக்கு 143 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் ராஸ் டெய்லர், 42 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஆண்டர்சன் (15) நீடிக்கவில்லை.
தொடர்ந்து அசத்திய குப்டில், தனது 152வது பந்தில் இரட்டை சதம் அடித்து அசத்தினார். இது உலகக்கிண்ணத் தொடரில் அடிக்கப்பட்ட இரண்டாவது இரட்டை சதம்.
இதற்கு முன் மேற்கிந்திய தீவுகளின் கெய்ல் (215), ஜிம்பாப்வே அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்த சாதனை படைத்தார். தவிர, ஒருநாள் அரங்கில் அடிக்கப்பட்ட 6வது இரட்டை சதம்.
பின்னர் வந்த எலியோட் (27) தன் பங்கிற்கு 2 சிக்சர் விளாசி வெளியேறினார். இவரைத் தொடர்ந்து ரொன்சி (9) நடையை கட்டினார்.
இதனால் நியூசிலாந்து அணி 50 ஓவரில், 6 விக்கெட்டுக்கு 393 ஓட்டங்கள் எடுத்தது. குப்டில் 163 பந்துகளில் 237 ஓட்டங்களுடனும் (11 சிக்சர், 24 பவுண்டரி), வெட்டோரி 8 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
மேற்கிந்திய தீவுகள் சார்பில், ஜிரோம் டெய்லர் 3, ஆண்ரூ ரசல் 2 விக்கெட்டை வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் சார்லஸ் (3) ஏமாற்றம் அளித்தார்.
ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த நிலையில் சிம்மோன்ஸ் (12) வெளியேறினார். அதிரடியாக விளையாடிய சாமூவேல்ஸ் (27) வெட்டோரியின் அசத்தலான் கேட்சில் ஆட்டமிழந்தார். ரம்தின் (0) டக்-அவுட்டாக நடையை கட்டினார்.
மறுமுனையில் அதிரடியாக விளையாடிய கெய்ல், நியூசிலாந்தின் பந்துவீச்சை சிக்சரும், பவுண்டரியுமாய் சிறடித்தார். அரைசதம் கடந்த கெய்ல் (61) மில்னே பந்தில் பவுல்ட் ஆனார். இவர் 8 சிக்சர், 2 பவுண்டரி விளாசினார்.
டெரன் சமி அதிரடியாக 16 பந்துகளில் 27 ஓட்டங்கள் குவித்து வெளியேறினார். கார்டர் தன் பங்கிற்கு 32 ஓட்டங்களும், ரசல் 20 ஓட்டங்களும் குவித்து அவுட் ஆகினர்.
இதைத் தொடர்ந்து வந்த அணித்தலைவர் ஹோல்டர் (42) அதிரடியாக விளையாடி அணியின் ஓட்டங்களை உயர்த்தினார். பின்னர் அவரும் ஆட்டமிழக்க, அடுத்து வந்த டெய்லரும் (11) வெளியேறினார்.
இமாலய இலக்கை அதிரடியால் எட்ட நினைத்து மேற்கிந்திய தீவுகள் வரிசையாக விக்கெட்டை பறிகொடுத்தது. இதனால் 30.3 ஓவர்களிலே மேற்கிந்திய தீவுகள் அணி 250 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. பென் (9) ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதன் மூலம் 143 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அரையிறுதிக்குள் நுழைந்தது.
நியூசிலாந்து தரப்பில், பவுல்ட் 4, சவுத்தி, வெட்டோரி தலா 2, மில்னே, ஆண்டர்சன் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இரட்டை சதம் விளாசிய குப்டில் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

ad

ad