புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஏப்., 2015

விசாரணையை நிறுத்தக்கோரி 56 எம்.பிக்கள் ஜனாதிபதிக்கு மகஜர்


வரையறை மீறி ஆணைக்குழு செயற்படுவதாக குற்றச்சாட்டு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான இலஞ்ச ஊழல் மோசடி ஆணைக்குழு விசாரணையை நிறுத்துமாறு கோரி அமைச்சர்கள் அடங்கலாக 56 ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எம்.பிக்கள் நேற்று பிற்பகல் ஜனாதிபதிக்கு மகஜரொன்றை கையளித்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதிக்கு எதிரான விசாரணையை ஆட்சேபித்து நேற்று காலை முதல் சபாமண்டபத்தின் நடுவே அமர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திய ஐ.ம.சு.மு எம்.பிமாரே இவ்வாறு மகஜரை கையளித்துள்ளனர்.
ஐ.ம.சு.மு எம்.பிமார் பாராளுமன்றத்தில் ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பில் எதிர்க்கட்சியின் பிரதம கொரடா ஜோன் செனவிரட்ன தொலைபேசி ஊடாக ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருந்தார்.
இது குறித்து சம்பந்தப்பட்ட எம்.பிக்களின் கையொப்பத்துடன் கோரிக்கை கடிதமொன்றை தனக்கு அனுப்பிவைக்குமாறு ஜனாதிபதி அறிவித்ததற்கு இணங்க ஐ.ம.சு.மு எம்.பிக்களிடம் கையொப்பம் திரட்டப்பட்டது.
புதிய அரசாங்கத்தில் அமைச்சுப் பொறுப்பை வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எம்.பிக்கள் மற்றும் ஐ.ம.சு.மு செயலாளர் சுசில் பிரேமஜயந்த அடங்கலாக 56 எம்.பிக்கள் இதில் கையெழுத்திட்டுள்ளனர்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் சட்ட எல்லையை மீறி சட்டவிரோதமாக மேற்கொள்ளும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துவதற்கு தலையீடு செய்யுமாறும் இந்த மகஜரில் கோரப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அநீதியான வகையில் வேட்டையாட மேற்கொள்ளும் முயற்சியை தடுக்க நடவடிக்கை எடுக்கும் வரை தங்களுடைய உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் எனவும் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த உண்ணாவிரதப்போராட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடொன்று நேற்று பிற்பகல் பாராளுமன்ற குழு அறையில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த பந்துல குணவர்த்தன,
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அரசியல் நோக்கில் செயற்படுகிறது. பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அமைச்சுப் பதவி வழங்கியதை இலஞ்சமாகக் கருதி விசாரணை நடத்துவது இலங்கை வரலாற்றிலே இதுதான் முதற்தடவையாகும். இந்த அநீதியை நிறுத்த ஜனாதிபதி உடனடியாகத் தலையீடு செய்ய வேண்டும். இதற்கு நியாயமான தீர்வு கிடைக்கும்வரை எமது போராட்டம் தொடரும் என்றார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவன்ச, திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு அமைச்சுப் பதவி வழங்கியது இலஞ்சம் என்றால், பெரும்பான்மை பலமில்லாத ஐ.தே.க தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை நடத்தவேண்டும்.
டயஸ்போராக்களை விடுதலை செய்யும் இந்த அரசாங்கம் யுத்தத்தை வெற்றிகொண்ட தலைவருக்கு சிறைச்சாலை தேடுகிறது. அவருக்கு எதிரான வேட்டையை உடனடியாக நிறுத்த வேண்டும். இந்த அநீதிக்கு எதிராக சபாமண்டபத்தில் நாம் போராட்டம் செய்யும் அதேநேரம் பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் இலட்சக்கணக்கான மக்கள் கூடி தமது எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் என்றார்.
இங்கு கருத்துத் தெரிவித்த டலஸ் அழகப்பெரும எம்.பி, ஜனாதிபதிக்குத் தெரியாமலேயே இந்த விடயம் நடந்திருக்கிறது. இதன் பின்னணியிலிருந்து ஐ.தே.கவும் பிரதமருமே செயற்பட்டுள்ளனர். இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அரசியல் ஒழுங்குப் பத்திரத்துக்கு அமைய செயற்படுகின்றமை இதன் மூலம் புலனாகிறது என்றார்.

ad

ad