புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஏப்., 2015

எம்முன்னோர்களின் தீர்க்கதரிசனமே எம் இனத்தின் இருப்புக்குக்காரணமாகும். - சிவலைபிட்டி ச ச நிலைய விழாவில் வடமாகணசபை உறுப்பினர் பா.கஜதீபன் (படங்கள் -தர்சனானந்த் .ப.-நன்றி )



















எம் முன்னோர்களின் தீர்க்கதரிசனமான செயற்பாடுகளே எமது இனம் பல்வேறு நெருக்கடிகளையும், வார்த்தைகளால் வர்ணித்து விட முடியாத
கொடூரங்களையும் தாண்டி இன்றும் யாருக்கும் அடிபணியாமல் தலைநிமிர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பதற்குக்காரணமாகும் என வடமாகாணசபை உறுப்பினர் பா,கஜதீபன் தெரிவித்தார். புங்குடுதீவு சிவலப்பிட்டி சனசமூகநிலைய 55ஆவது ஆண்டுவிழாவும், தமிழ்ப்புத்தாண்டு விழாப்போட்டிகளில் வெற்றிபெற்றோருக்கான பரிசளிப்பு விழாவும் கடந்த 14.04.2015 செவ்வாய்க்கிழமை நிலையத்தலைவர் ந.அன்பழகன் தலைமையில் இடம்பெற்றது. அதில் பிரதம விருந்தினராகக்கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் “ எமது தமிழினம் தோன்றிய காலத்தைப்பற்றி ஒவ்வொரு ஆராய்ச்சியாளர்களும் ஒவ்வொரு விதமாகக்குறிப்பிட்டு வருகிறார்கள். எது எவ்வாறு இருந்தாலும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே தோன்றிவிட்ட பண்பாட்டுச்செழுமையும், பாரம்பரியமும் மிக்க எமது இனம் பல்வேறு நெருக்கடிகளுக்களையும் தாண்டி பல சவால்களுக்கும் முகம் கொடுத்துதனது இருப்பைக் கொண்டுள்ளதுக்குக்காரணம் எமது இனத்தின் முன்னோர்களின் தீர்க்கதரிசனமும், தியாகத்தொண்டுகளும் தான். அவ்வாறான செயற்பாடுகளுக்கு பாரிய பங்கை இவ்வாறான சனசமூக நிலையங்கள் வழங்கி வந்துள்ளன. மக்களை ஒன்றுதிரட்டி காலமாற்றத்துக்கு ஏற்றாற்போல் கருத்துக்களை அவர்களது உள்ளங்களில் விதைத்து, அவர்களது இனஉணர்வுகள் மங்கிவிடாமல் , எனது இனத்தின் தொடர்ச்சியான இருப்பை முன்னகர்த்தும் பாரிய பணியை ஒவ்வொரு ஊர்களிலுமுள்ள சனசமூக நிலையங்கள் செய்து வருகின்றன. அந்தவகையில் இந்த சிவலைப்பிட்டி சனசமூக நிலையமானது தனது பணியை 55 ஆண்டுகாலமாக சிறப்பாக ஆற்றி வருகின்றது. அதன் ஆரம்பகாலத்தலைவர்கள் இம்மேடையில் இன்று பாராட்டுப்பத்திரம் வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளனர். இன்றைய இளைஞர்களுக்கு மிகப்பெரிய கடமை இருக்கின்றது. என்ன நோக்கத்திற்காக இம்மூத்தவர்கள் தங்களை அர்ப்பணித்து இவ்வாறான கருமங்களை அன்றைக்கு முன்னெடுத்தார்களோ, அவற்றிலிருந்து வழுவாது நாமும், அந்த இலட்சியங்களை அவர்கள் விட்ட இடத்திலிருந்து முன்னெடுத்துச்சென்றே ஆக வேண்டும். வெறுமனே மூத்தவர்கள் செய்த சாதனைகளை மாத்திரம் சொல்லி காலம் கடத்திக்கொண்டிருக்காமல், இளைஞர்கள் ஒவ்வொருவரும் தங்களை சாதனையாளர்களாக மாற்றுவதற்கு களம் அமைக்கும் இவ்வாறான அமைப்புகளில் ஒன்றுதிரண்டு செயற்பட்டு, தமக்கும், தமது ஊருக்கும், ஒட்டுமொத்த எமது இனத்துக்கும் பயனுள்ளவர்களாகப் பணிகளை ஆற்றிட முன்வரவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். இந்நிகழ்வில் புதுவருட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பெறுமதிமிக்க பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன், கல்வியில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பதக்கங்களும் அணிவிக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர். இந்நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் பிரதம விருந்தினராகக்கலந்துகொண்டதுடன், சிறப்பு விருந்தினர்களாக தீவக வலயக்கல்விப்பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ், ஓய்வுபெற்ற அதிபர் எஸ்.கே.சண்முகலிங்கம், கிராம சேவையாளர்களான வ.கோகிலதாஸ், ப.தர்சானந், மற்றும் அதிபர்களான ச.கணேஸ்வரன், திருமதி .ம.கணேசன், மக்கள் வங்கி உத்தியோகத்தர் ஜெயபிரதாப், உபதபாலதிபர் க.சதீபன் ஆகியோரும் கலந்துகொண்டதுடன் , கிராம மக்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.








ad

ad