புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஏப்., 2015

சேப்பாக்கத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை-பஞ்சாப் அணிகள் இன்று மோதல்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை-பஞ்சாப் அணிகள் சென்னை சேப்பாக்கத்தில் இன்று மோதுகின்றன.


சேப்பாக்கத்தில் கிரிக்கெட் திருவிழா

சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.

இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்றிரவு நடக்கும் லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி (டெல்லி, ஐதராபாத், மும்பை, பெங்களூருக்கு எதிராக), ஒரு தோல்வி (ராஜஸ்தானுக்கு எதிராக) என்று மொத்தம் 8 புள்ளிகளுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளி பட்டியலில் இரண்டாம் இடம் வகிக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சொந்த ஊரில் இதுவரை ஆடியுள்ள 2 ஆட்டங்களிலும்(டெல்லி மற்றும் ஐதராபாத்துக்கு எதிராக) வெற்றி பெற்றுள்ளது. மறுபடியும் ரன்மழை பொழிந்து சென்னை ரசிகர்களை குஷிப்படுத்தும் உற்சாகத்துடன் டோனி படை காத்திருக்கிறது.

பிரன்டன் மெக்கல்லம்

சென்னை அணியின் பிரதான பலமே தொடக்க ஆட்டக்காரர்கள் பிரன்டன் மெக்கல்லமும் (166 ரன்), வெய்ன் சுமித்தும் (202 ரன்) தான். ஆனால் ஐதராபாத் அணிக்கு எதிராக சதம் அடித்த பிறகு மற்ற ஆட்டங்களில் மெக்கல்லம் சோபிக்கவில்லை. அதை உணர்ந்து இந்த முறை பொறுப்புடன் விளையாடுவார் என்று எதிர்பார்க்கலாம். இவர்கள் நல்ல தொடக்கம் அமைத்து தரும் பட்சத்தில், மிடில் வரிசையில் ஆடும் சுரேஷ் ரெய்னா, பாப் டு பிளிஸ்சிஸ், கேப்டன் டோனி, வெய்ன் பிராவோ உள்ளிட்டோர் அணியின் ஸ்கோரை வலுவான நிலைக்கு தூக்கி நிறுத்த முடியும். 

பந்து வீச்சில் யாரும் எதிர்பார்க்காத வகையில் மூத்த பவுலர் ஆஷிஷ் நெஹரா அசத்தி வருகிறார். இதுவரை 10 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கும் நெஹரா, ஓவருக்கு சராசரியாக 6.05 ரன் வீதமே விட்டுக்கொடுத்திருப்பது கவனிக்கத்தக்க அம்சமாகும்.

ஷேவாக்-பெய்லி

சென்னை அணி பலம் வாய்ந்தது என்றால், பஞ்சாப்பும் அதற்கு நிகரானது என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை. கடந்த ஆண்டு ஐ.பி.எல். தொடரில் சென்னை அணி, இதே பஞ்சாப்பிடம் மட்டுமே மரண அடி வாங்கியது. சென்னை அணிக்கு எதிரான மூன்று ஆட்டங்களிலும் பஞ்சாப் அணி 206 ரன், 231 ரன், 226 ரன்கள் வீதம் குவித்து புரட்டியெடுத்தது. அதே அதிரடி சூரர்கள் இப்போதும் அணிவகுத்து நிற்கிறார்கள். போதுமான அளவுக்கு ஒருமித்த அணியாக செயல்படாததால் இந்த சீசனில் பஞ்சாப் அணியால் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த இயலவில்லை.

முதல் 4 ஆட்டங்களில் 3-ல் தோல்வி கண்ட பஞ்சாப் அணி, முந்தைய ராஜஸ்தானுக்கு எதிரான லீக்கில் ‘சூப்பர்-ஓவர்’ வரை போராடி வெற்றி பெற்றது. இந்த வெற்றி அவர்களுக்கு கூடுதல் நம்பிக்கையை கொடுத்திருக்கும். தோள்பட்டை காயத்தால் பஞ்சாப் கேப்டன் ஜார்ஜ் பெய்லி கடந்த ஆட்டத்தில் விளையாடவில்லை. அவர் அணிக்கு திரும்பினால், மேக்ஸ்வெல் அல்லது டேவிட் மில்லர் ஆகிய வெளிநாட்டு வீரர்களில் ஒருவரது இடம் காலியாகும். உடல்தகுதி பெறாவிட்டால் ஷேவாக் அணியை வழிநடத்துவார்.

இதுவரை...

மொத்தத்தில் சென்னை அணியை அசைத்து பார்க்கும் அசாத்திய நம்பிக்கையுடன் பஞ்சாப் அணி வரிந்து கட்டி நிற்பதால் ஆட்டத்தில் சுவாரஸ்யத்திற்கு துளியும் குறைவிருக்காது.

இவ்விரு அணிகளும் இதுவரை 15 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 8-ல் சென்னையும், 6-ல் பஞ்சாப்பும் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டம் ‘டை’யில் முடிந்தது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

சென்னை: வெய்ன் சுமித், பிரன்டன் மெக்கல்லம், சுரேஷ் ரெய்னா, பாப் டு பிளிஸ்சிஸ், டோனி (கேப்டன்), வெய்ன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், மொகித் ஷர்மா, நெஹரா, ஈஸ்வர் பாண்டே.

பஞ்சாப்: முரளிவிஜய், ஷேவாக், ஷான் மார்ஷ், மேக்ஸ்வெல் அல்லது ஜார்ஜ் பெய்லி, டேவிட் மில்லர், விருத்திமான் சஹா, அக்ஷர் பட்டேல், மிட்செல் ஜான்சன், அனுரீத் சிங், ஷிவம் ஷர்மா, சந்தீப் ஷர்மா.

இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ், சோனி செட் மேக்ஸ், சோனி கிக்ஸ் ஆகிய சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

மற்றொரு ஆட்டம்

முன்னதாக மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மாலை 4 மணிக்கு நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்சும், டேவிட் வார்னர் தலைமையிலான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியும் சந்திக்கின்றன.

தொடர்ச்சியான தோல்விகளால்(5 தோல்வி) துவண்டு போயுள்ள மும்பை அணி சொந்த ஊரிலாவது எழுச்சி பெறுமா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர். ‘பிளே-ஆப்’ சுற்றை எட்ட வேண்டும் என்றால் மும்பை அணி எஞ்சிய 8 ஆட்டங்களில் குறைந்தது 7-ல் வெற்றி பெற வேண்டியது அவசியமாகும். 

அதே சமயம் 5 ஆட்டங்களில் 2-ல் வெற்றி கண்டுள்ள ஐதராபாத் அணி, மும்பை அணியின் பலவீனத்தை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் முனைப்புடன் ஆயத்தமாக உள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை 4 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி தலா 2 வீதம் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ad

ad