புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஏப்., 2015

எதிர்க்கட்சித் தலைவர் யார்? இன்று பதில் கூறுவார் சமல்


எதிர்கட்சித் தலைவர் யார் என்ற நீண்ட சர்ச்சைக்கு இன்று விடை தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. சபாநாயகர் சமல் ராஜபக்ச­,
நாடாளுமன்றத்தில் இன்று எதிர்கட்சித் தலைவர் யார் என்பதைத் தெரிவிப்பார்.
 
ஜனாதிபதி மைத்திரிபால தலைமையிலான புதிய அரசு பதவியேற்ற பின்னர், எதிர்கட்சித் தலைவராக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா நியமிக்கப்பட்டார். ஆனால், அதன் பின்னர் தேசிய அரசு அமைக்கப்பட்டது.
 
தேசிய அரசில், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்களும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்தவர்களும் உள்வாங்கப்பட்டிருந்தனர். அதனால் எதிர்கட்சித் தலைவர் யார் என்ற பிரச்சினை எழுந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கே வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. 
 
ஆனாலும் சிங்கள பெரும்பான்மை கட்சிகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தன. நிமல் சிறிபால டி சில்வா தானே தொடர்ந்தும் எதிர்கட்சித் தலைவர் என்று தெரிவித்திருந்தார். 
 
ஆனால், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 58 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையயழுத்திட்டு, தினேஷ் குணவர்த்தனவை எதிர்கட்சித் தலைவராக நியமிக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். 
 
இதேவேளை, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டால் அதனை ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ளது.
 
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேசிய அரசில் பங்கெடுத்துள்ளது. அதனால், அந்தக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரையும் எதிர்கட்சித் தலைவராக நியமிக்க முடியாது என்று ஜே.வி.பி. சபாநாயகருக்குச் சுட்டிக்காட்டியுள்ளது.
 
எதிர்கட்சித் தலைவர் தொடர்பில், சபாநாயகர் நாடாளுமன்றதில் இன்று பதிலளிப்பார் என்று தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்ற சம்பிரதாயங்கள், நடைமுறை, மரபு, விதிமுறைகளை அடிப்படையாக வைத்தே எதிர்கட்சித் தலைவர் யார் என்பதை சபாநாயகர் நாடாளுமன்றத்தில் தெரிவிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad