புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஏப்., 2015

தமிழர்களின் வாழ்வில் விடிவெள்ளியாக திகழ்ந்த தந்தை செல்வா

தமிழர்களின் வாழ்வில் விடி வெள்ளியாகத் தோற்றிய தந்தை செல்வா என்று அவரது மக்களால் அன்புடனும் உரிமையுடனும் அழைக்கப்பட்ட சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் மறைந்து 38 ஆண்டுகள் ஆகின்றன. இந்த கால இடைவெளிக்குள் தமிழர்கள் பட்ட துன்ப துயரங்கள் அனைத்தும் அவர் உயிருடன் இருந்திருப்பின் அவர்களுக்கு ஏற்பட்டிருக்குமா என்று எண்ணிப் பார்க்கிறேன்.
மெலிந்த தோற்றம், தளர்ந்த நடை, உணர்ச்சிபொங்காத ஆனால் ஆழ ஊடுருவிப் பாயும் பேச்சு, நேர்மை மாறாத கொள்கை இவை யாவும் ஒருங்குசேர்த்த தீர்க்கதரிசியான அந்தத் தந்தை வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தோம், பார்த்தோம், பழகினோம் என்பதே பெரும் பாக்கியம். அவரிடமிருந்து அரசியலில் வாழ்க்கையாயிலும் சரி, சொந்த வாழ்க்கையாயினும் சரி கற்றுக்கொள்ளவேண்டியிருந்த பாடங்கள் ஏராளம்.
மலேசியாவின் இப்போ எனும் மாகாணத்தில் 1898 மார்ச் மாதம் 31ஆம் திகதி தந்தை பிறந்தார். அவர் பிறந்த அந்த மாகாணப் பெயரின் (இப்போ) பொருள் மலாய் மொழியில் சுத்தமான நகரம் என்பதாகும். சமகாலத்தில் இலங்கை அரசியலில் அரிதாகிப்போய்விட்ட அந்தத் தூய்மை தந்தையின் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் பற்றிக்கொண்டமை அவர் பிறந்த மாகாணப் பெயரைப்போன்றே அமைந்துவிட்டமை ஆச்சரியமானது. வட-, கிழக்கின் முடிசூடா மன்னன் செல்வநாயகத்தின் நேர்மையை அவரது எதிரிகூட சவாலுக்குட்படுத்தமாட்டான் என்று சிலோன் டெய்லி நியூஸ் பத்திரிகையின் புகழ் பூத்த ஆசிரியராக விளங்கிய மேர்வின் டி சில்வா தனது எழுத்தில் குறிப்பிட்டிருந்தார். பாராளுமன்றத்தில் அஞ்சலியுரையாற்றிய ஜே.ஆர்.ஜயவர்த்தனா, நம்பியவர்களைக் கைவிட்டுவிடுவார் செல்வநாயகம் என்று கூறிய எவரையும் எனது சமூகத்திலோ அல்லது வேறெந்த சமூகத்திலோ நான் சந்தித்ததில்லை என்று கூறியிருந்தார். செல்வநாயத்தின் அரசியல் நேர்மைக்கும் தனிப்பட்ட ஒழுக்கநெறிக்கும் எவரும் நிகரில்லை என கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பீட்டர் கெனமன் தெரிவித்திருந்தார்.
மலேசியாவில் பிறந்த தந்தை செல்வா யாழ்ப்பாணத்திலேயே வளர்ந்தார். ஆரம்பக் கல்வியை தெல்லிப்பழை யூனியன் கல்லூரியிலும் பின் யாழ்.சென்.ஜோன்ஸ் கல்லூரி, கல்கிசை சென்.தோமஸ் கல்லூரி ஆகியனவற்றிலும் தொடர்ந்தார். ஆரம்ப காலங்களில் வண. எஸ். கே. பொன்னையாவின் வழிகாட்டலில் இருந்த தந்தை லண்டன் பல்கலைக் கழகத்தின் வெளிவாரி மாணவனாக 1918இல் ஒரு விஞ்ஞானப் பட்டதாரியானார்.
தனது சகோதரர் கடும் நோய்வாய்ப்பட்டிருந்தபோது அவரைச் சென்று பார்ப்பதற்கு விடுமுறை வழங்காதமையால் கல்கிசை சென்.தோமஸ் கல்லூயில் தான் வகித்துவந்த ஆசிரியர் பதவியை இராஜினாமாச் செய்யவேண்டியதாயிற்று. நியாயத்திற்குப் புறம்பான செயற்பாடுகளை எதிர்ப்பதில் கடும் நிலைப்பாட்டை எடுக்கும் அவரது எதிர்கால அரசியல் வாழ்விற்கு இது கட்டியம் கூறுவதுபோல் அமைந்துவிட்டது.
ஏமிலி கிரேஸ் குமாரகுலசிங்கவுடன் திருமண பந்தத்தில் இணைந்து நான்கு ஆண் பிள்ளைகளும் ஒரு பெண்குழந்தைக்கும் தந்தையானார். பிற்காலத்தில் துணிச்சலான கருத்துக்களுடன் கூடிய அரிய பல தமிழர் அரசியல் வரலாற்று நூல்களுக்கு ஆசிரியாகிவிட்ட பேராதனைப் பல்கலைக்கழக கலாநிதி ஜெயரட்னம் வில்சனின் தந்தையின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது. காலஞ்சென்ற ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் தலைமையில் அரசியலில் பிரவேசித்த தந்தை, அவரது கொள்கையுடன் முரண்பட்டு தமிழர்களின் அரசியல் பயணத்தைச் சரியான பாதையில் கொண்டு செல்வதற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சியினை 1948இல் ஆரம்பித்தார். மலையகத் தமிழரின் வாக்குரிமையைப் பறித்த பிரஜா உரிமைச் சட்டத்திற்கெதிராக வாக்களித்ததுடன் அவரது புதிய அரசியற் பயணம் ஆரம்பித்தது. தமிழர்களுக்கு அரசியல் தெளிவினை ஏற்படுத்தவேண்டுமென்ற எண்ணத்துடன் தனது சொந்தச் செலவில் சுதந்திரன் என்ற பத்திரிகையை ஆரம்பித்து அதனால் தனது சொத்தில் கணிசமான பகுதியை இழந்தபோதும் அது வெளிவருவதற்காக இறுதிவரை அரும்பாடுபட்டார். எம் போன்ற இளைஞர்கள் அரசியலில் தெளிவு பெறுதற்கு அப் பத்திரிகை ஆற்றிய பங்களிப்பை மறக்க முடியாது. 70ஆம் ஆண்டுகளில் ஆசிரியராக இருந்த கோவை மகேசன் அவர்களுக்கு ஒத்திசைவாக பல கட்டுரைகளை இக் கட்டுரை ஆசிரியர் எழுத முடிந்தமை ஈண்டு குறிப்பிடுவது பொருத்தமாகவிருக்கும்.
மெலிந்த உருவமும் தளர்ந்த நடையும் கொண்ட தந்தை தனது சிந்தனையில் மிகுந்த தெ ளிவுடன் செயற்பட்டார். தமிழ் அரசாங்க ஊழியர்கள், 1956இல் கொண்டுவரப்பட்ட தனிச் சிங்களச் சட்டத்தினால் பாதிக்கப்பட்டு அதற்கெதிராக வழக்குத் தொடர்ந்தபோது அச் செயற்பாட்டுக்கு கட்சியினதும் அதன் வளங்களையும் தந்து பூரண ஒத்துழைப்பு நல்கினார். சிங்களம் மட்டும் சட்டம் அரசியலமைப்புக்கு விரோதமானது என்ற நீதிமன்றத் தீர்ப்பினைப் பெற்றுத்தந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்த கோஸ்சுவரன் மொழி வழக்கினை அரசாங்க எழுதுவினைஞர் சங்கம் நடத்தியபோது கட்சி பக்கபலமாக இருந்தது. பின்னாளில் அந்த நீதிமன்றத் தீர்ப்பு எவ்வாறு சிறிமா தலைமையிலான அரசினாலும் கொல்வின் ஆர்.டி.சில்வாவின் கபடத்தனமான செயலினாலும் செயலிழக்கச் செய்யப்பட்டது என்பதனை நாமெல்லாம் அறிவோம்.
சாதாரண அரசியல்வாதிகள் அடுத்த தேர்தலை இலக்காக்கிச் செயற்பட்டுக்கொண்டிருக்க தந்தை இந்த நாட்டில் தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழவேண்டிய செயற்பாடுகள் பற்றிய ஒரே சிந்தனையுடனேயே செயற்பட்டார்கள். நிலமும் மொழியும் இரு கண்கள் என்பதனைத் தீர்க்க தரிசனத்துடன் தெளிவுபடுத்தி அவற்றைப் பாதுகாப்பதற்காக்கத் தீவிரமான செயற்பாடுகளை முன்னெடுத்தார். திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்தார். எவரும் தனிப்பட்ட முறையில் நிலத்தை வாங்கி வடக்கு கிழக்கில் குடியேறுவதில் ஆட்சேபனை இல்லை. ஆனால் திட்டமிட்ட முறையில் அரசாங்கம் தனது வளங்களை வழங்கி அவர்களைக் குடியேற்றி தமிழர்களை அவர்களது பூமியிலேயே சிறுபான்மையினராக்கும் அரசின் முயற்சிகளையே நிறுத்தக் குரல் கொடுத்தார். அதனை இன்றும் சில சிங்கள அரசியல்வாதிகளும் படித்த சிங்கள புத்திஜீவிகளும்கூட வேண்டுமென்றே திரிபுபடுத்திப் பேசிவருகிறார்கள். தமிழர்கள் தென்னிலங்கையில் குடியேறமுடியுமானால் சிங்களவர் ஏன் தமிழர் பகுதிகளில் குடியேற எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள் என்று துவேசத்துடன் பொய்யுரைக் கிறார்கள்.
தனிச் சிங்களச் சட்டம் வர முன்பு அரச சேவையில் சேர்ந்த தமிழர்களின் பதவியுயர்வுக்கு சிங்களம் நிபந்தனையாகப் பார்க்கப்பட்ட மைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அரசாங்க எழுதுவினைஞர் சங்கம் அப்போதைய பொதுநிர்வாக அமைச்சராக விருந்த ரி.பி.இலங் கரத்னாவைச் சந்திப்பதற்காக மு.திருச்செல்வத்தையும் இணைத்துக் கொண்டு சென்றபோது, இலங்கரத்னா வாசலுக்கே எழுந்து வந்து, ஏன் ஐயா நீங்கள் வரவேண்டும், கடிதமே எழுதியிருக் கலாமே என்று வரவேற்றுப் பேசியபோது கட்டுரையாளரும் உடனிருந்தார். அரசியலில் முரண்பட்டிருந்த போதும் தனிப்பட்ட முறையில் தந்தையிடம் இருந்த நேர்மையும், அஞ்சாத் தன்மையும் எதற்கும் விலை போகாத்தன்மை யும். அவரை அனைத்து அரசியல் எதிரிகளும் மிகுந்த உயர்வுடன் பார்க்க வைத்தது.
1972ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தை தமிழர்கள் ஆதரிக்கவில்லை என்பதை எடுத்துக் காட்ட தனது பா.உ. பதவியைத் துறந்து இடைத் தேர்தல் வைக்குமாறு அரசுக்கு சவால் விடுத்தார். மூன்று வருடங்களாக அதனை இழுத்தடித்த அரசு, பின் இடைத் தேர்தலை வைத்தபோது தனது முழு வளங்களையும் வன்முறையையும் பயன்படுத்தி தனது வேட்பாளராக வி.பொன்னம்பலத்தைக் களமிறக்கியது. இருப்பினும் மிகப் பெரும்பான்மை வாக்குகளால் தந்தை வென்றார். தந்தை என்றுமே தமிழரசுக் கட்சியை முடக்கிப்போடவும் இல்லை, மூட்டைகட்டி வைத்து விடவும் இல்லை. கட்சியின் அத்திவாரத்தில் ஏனைய இரு தலைவர்களையும் இணைத்து ஒரு புதிய அரசியல் கலாசாரத்தை தமிழர்களிடையே உருவாக்கினார் என்பதே உண்மை. அதனை உருவாக்கிய மறு ஆண்டே அவர் மறைந்துவிட்டமை தான் தமிழர்களின் துரதிருஷ்டம்.
வடக்கு, கிழக்குத் தமி­ழர்­களை ஒன்­றி­ணைத்தார். முஸ்­லிம்­களை எம்மில் ஒரு அங்­க­மாக்கி தமிழ் பேசும் மக்கள் என்ற சொற்­ப­தத்தை அறி­மு­கப்­ப­டுத்­தினார். உரி­மைக்­காக சத்­தி­யாக்­கி­ரகம், ஸ்ரீ எதிர்புப் போராட்டம், பண்டா –செல்வா ஒப்­பந்தம், டட்லி –செல்வா ஒப்­பந்தம், மறைந்த ஜீ.ஜீ.பொன்­னம்­பலம், தொண்­டமான் ஆகி­யோரை இணைத்து தமிழர் ஐக்­கிய முன்­ன­ணியை உரு­வாக்­கி­யமை போன்ற இப்­படிப்பட்ட அர்ப்­ப­ணிப்பும் நேர்­மையும் மிக்க அந்தப் பெரும் தலைவர் 26 ஏப்ரல் 1977 இல் மறைந்து 38 ஆண்­டுகள் கடந்­து­விட்­டன. இன்றும் அவ­ரது சொற்­களும் செயற்­பா­டு­களும் தற்காலத்திற்கு உகந்தவையாகவே உள்ளன.
சி.இரத்தினவடிவேல், செயலாளர்,
இலங்கைத் தமிழரசுக் கட்சி,
கொழும்பு மாவட்டக் கிளை

ad

ad