புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஏப்., 2015

இது கடவுள் கொடுத்த நாடு இதனை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது: துரைராஜசிங்கம்


இது கடவுள் கொடுத்த நாடு இதனை யாரும் யாருக்கும் சொந்தம் கொண்டாடவும் முடியாது யாரிடம் இருந்தும் பறிக்கவும் முடியாது. இங்கு எல்லோரும் சம உரிமைகளுடன் வாழலாம்.
ஆனால் அவ்வாறான நிலை இந்த நாட்டில் இருக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட சித்தாண்டி மாவடிவேம்பு விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
விளையாட்டின் முக்கிய போதனையே இங்கு தோல்வி கிடையாது என்பது தான். இவ்வாறான மனோநிலை மாணவர்கள் மத்தியில் எழ வேண்டும். இங்கு முயற்சி மாத்திரமே முதன்மை பெறுகின்றது.
எடுக்கின்ற முயற்சியை சிறப்புற முடிக்க வேண்டும். கல்வியின் மிகச் செழுமையான பெறுமானம் மனப்பாங்கு வளர்ச்சியே. எடுத்த காரியத்தை முடிக்க வேண்டும் என்ற மனப்பாங்கு அனைவருக்கும் தோன்ற வேண்டும். பாடசாலைகளில் மாணவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டியது அறிவு, திறன், மனப்பாங்கு இவைகளே.
ஒரு கல்லை சிறந்த சிற்பமாக்குவது எவ்வாறு சிற்பியின் கடமையாகின்றதோ அதுபோல் கல்லாக இருக்கும் மாணவர்களை சிற்பங்களாக்கும் பொறுப்பு ஆசிரியர்களுக்கே இருக்கின்றது.
அதற்கு மாணவர்களும் ஒத்துழைத்து படிக்க வேண்டும். இஷ்டத்துடன் படிக்க வேண்டும். விருப்பத்துடன் மேற்கொள்ளும் காரியங்கள் ஒருபோதும் வீணாவதில்லை.
மாணவர்கள் படித்து எதிர்காலத்தில் சமூகம் சொல்லும் அளவிற்கு ஒரு நல்ல நிலைக்கு வருவதுதான் பெற்றோர்களுக்கு அவர்கள் கொடுக்கும் பரிசு.
குளிக்கப் போய் சேறு பூசக்கூடாது என்பார்கள். அதுபோல் பாடசாலைக்குச் சென்று அதனை வீணடிக்காமல் நன்கு படிக்கவேண்டும் உத்வேகத்துடன் படித்து தனக்கும், பெற்றோருக்கும் எமது சமுகத்திற்கும் பெருமை சேர்த்து தரவேண்டும்.
இந்த நாடு மிகவும் அழகான, வளம்கொண்ட நாடு. இந்நாட்டில் உள்ள அனைத்து மக்களும் சிறந்த சொத்துக்கள். ஆனால் 60 ஆண்டுகளாக சிறுபாண்மை மக்கள் பல பாதிப்புகளை அடைந்து வந்துள்ளனர்.
இது கடவுள் கொடுத்த நாடு இதனை யாரும் யாருக்கும் சொந்தம் கொண்டாடவும் முடியாது யாரிடம் இருந்தும் பறிக்கவும் முடியாது. இங்கு எல்லோரும் சம உரிமைகளுடன் வாழலாம். ஆனால் அவ்வாறான நிலை இந்த நாட்டில் இருக்கவில்லை.
இந்த நாட்டில் சிறுபாண்மை இனம் வாழ முடியாது என்ற சூழ்நிலையின் ஆரம்ப கட்டம் மலையக மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டமையேயாகும்.
வெளிநாடுகளில் சுமார் ஐந்து வருடங்களுக்கு மேல் இருந்தாலே அவர்களுக்கு நிரந்தர வதிவிடம் வழங்கப்பட்ட காலகட்டத்தில் எம் நாட்டில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வந்த எமது மலையக தமிழ் மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டதை முதலில் எதிர்த்தவர் எமது தந்தை செல்வா.அன்றே அவர் தெரிவித்தார் இன்று மலையக மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டுள்ளது.

அதுபோல் எமது மொழி உரிமையும் பறிக்கப்படும் போது எமது நாட்டில் இருக்கின்ற வடக்கு கிழக்கு மக்கள் இந்த பெரும்பாண்மை அரசுக்கு எதிராக போராட வேண்டிய நிலை வரும் என தெரிவித்தார்.
அதுபோலவே அவரின் தீர்க்க தரிசனம் பலித்து பல ஆண்டுகளாக நாம் அனைத்திலும் புறக்கணிக்கப்பட்டு இன்று வரையும் போராடிக் கொண்டிருக்கின்றோம்.
எமது நாடு சுதந்திரம் அடைந்தது தொடக்கம் எமது கல்விக் கொள்கையில் தமிழ், ஆங்கிலம், சிங்களம் என்கின்ற மூன்று மொழிகளும் இடம்பெற்றிருந்தால் எமது மக்களும் ஆங்கிலத்தில் தேர்ச்சியைக் கண்டிருப்பார்கள்.
ஆனால் சுயநல எண்ணம் கொண்டு சிங்களம் மாத்திரம் வேண்டுமென்றே திணிக்கப்பட்டது. எமக்கும் சகோதர மொழியினைக் கற்க ஆசைதான் ஆனால் அவை கொள்கை அடிப்படையில் செயற்படுத்தப்பட்டிருந்தால் கற்றிருக்கலாம்.ஆனால் அவை திட்டமிட்டு திணிக்கப்பட்டமையாலேயே பிரச்சினை ஏற்பட்டது.
ஆனால் இன்று அவ்வாறான நிலைமைகள் மாற்றப்படும் சூழ்நிலை சற்றே மலர்ந்து வருகின்றது. தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டமை, நாங்கள் தாழ்த்தப்பட்டிருக்கின்றோம் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றோம்.
எமக்கென்று ஒரு தனி அந்தஸ்து இருக்கின்றது உரிமை இருக்கின்றது, அபிலாசைகள் இருக்கின்றது அவற்றை வழங்க வேண்டும் என்பன தொடர்பில் தற்போது பெரும்பாண்மை அரசியல் சக்திகளே தெரிவித்து அதற்காக செயற்பட முனையும் காலமும் வந்துள்ளது.
இது நீடிக்க வேண்டும். தேசிய அரசாங்கத்தில் இலங்கையின் இனங்களுக்கிடையில் ஒரு உறவு ஏற்பட்டு எல்லோரும் இன உணர்வுடன் செயற்பட வேண்டும்.

ஆங்கிலம், தமிழ், சிங்களம் சரளமாக கற்பிக்கும் நிலை தோன்றினாலே எமது நாட்டின் அரைவாசிப் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும்.
இந்த நாடு அனைவருக்கும் சொந்தம் என்ற நிலை ஏற்பட வேண்டும். நாம் மிகவும் அவதானமாக இருந்து யாருக்கும் எவ்வித பிரச்சினைகளும் ஏற்படாத வண்ணம் எமது நடவடிக்கைகள் நகர்த்த வேண்டும்.
ஒரு இனத்தின் உரிமை பறிக்கப்படுகின்ற போது இன்னுமொரு இனத்தின் தலைமைகள் எழுந்து தட்டிக் கேட்கும் நிலை எப்போது தோன்றுகின்றதோ அப்போது தான் இந்த நாடு சிறந்த நாடாக மாறும் என்றும் அவர் தெரிவித்தார்.

ad

ad