புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஏப்., 2015

தென்னிலங்கை மீனவர்கள் வெளியேறாவிட்டால் நாங்கள் வெளியேற்றுவோம்: முல்லை. மீனவர்கள் எச்சரிக்கை


முல்லைத்தீவு, மாத்தளன் பகுதியில் கடற்றொழிலாளர் சங்கத்தின் அனுமதியில்லாமல் கடலட்டை பிடிப்பதற்காக வந்திருந்த வேறு பிரதேச மீனவர்களை நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமைக்குள் வெளியேறுமாறு எச்சரித்திருக்கும் மக்கள், வெளியேற மறுத்தால் வெளியேற்றப்படுவீர்கள் என காட்டமாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் போருக்குப் பின்னர் அதிகரித்திருக்கும் தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறல்களினையடுத்து மாவட்டத்திற்குள் புதிதாக வேறு பகுதி மீனவர்களுக்கு அனுமதி வழங்குவதில்லை என மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்கள் மற்றும் சமாசம் ஆகியன தீர்மானம் எடுத்திருந்தன.
இந்நிலையில் நேற்று மாத்தளன் பகுதியில்,வேறு மாவட்டத்தைச் சேர்ந்த 5 கடற்றொழிலாளர் குழுமங்கள் வந்து மக்களுடைய பகுதியில் வாடிகளை அமைத்து தங்கியிருந்து அட்டை பிடிக்கும் தொழிலை செய்ய முயற்சித்துள்ளனர். இந்நிலையில் இன்றைய தினம் அப்பகுதி மக்கள், கடற்றொழிலாளர் சங்க தலைவர் மற்றும் மாவட்ட சமாசத் தலைவர் ஆகியோர் நேரில் சென்று, குறித்த கடற்றொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போது இதற்கான அனுமதியை யார் கொடுத்தார்கள் என வினவியுள்ளனர்.
இதன்போது குறித்த கடற்றொழிலாளர்கள் தமக்கு அனு மதியை மாவட்டக் கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களம் வழங்கியதாக கூறியிருக்கும் நிலையில் மக்கள் அனுமதி கொடுக்காமல் திணைக்களம், அனுமதி கொடுக்க முடியாது என சுட்டிக்காட்டியிருக்கும் மக்கள் மற்றும் சமாச, சங்க தலைவர்கள் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமைக்குள் வாடிகள் அகற்றப்பட்டு வெளியேறாவிட்டால் மக்களால் வெளியேற்றப்படுவீர்கள் என கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் தாம் வெளியேறுவதாக அவர்கள் கூறியுள்ளனர்.
கவனயீர்ப்பு போராட்டம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மீனவர்கள் மிகமோசமான நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கு காரணமான மாவட்டக் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தை மாவட்டத்திலிருந்து வெளியேற்றக் கோரியும், அத்துமீறியுள்ள சிங்கள மீனவர்களை வெளியேற்றக் கோரியும் விரைவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுப்பதற்கு, முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் சங்கங்களின் சமாசம் மக்களுடன் இணைந்து தீர்மானம் எடுத்துள்ளதாக தெரிவித்துள்ள மாவட்ட கடற்றொழிலாளர் சமாசத்தின் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியராசா குறித்த போராட்டம் மிக விரைவில் மாபெரும் போராட்டமாக அனைத்து தரப்புக்களையும் உள்வாங்கி நடைபெறும் எனவும் கூறியுள்ளார்.
மாவட்டக் கடற்றொழலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள், கடற்றொழிலாளர்கள், மற்றும் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம், சட்ட உதவி ஆணைக்குழு ஆகியன இணைந்து சமாச தலைவர் தலைமையில்  இன்று கடற்றொழிலாளர்களுடைய கருத்தறியும் நிகழ்வினை மாவட்ட கடற்றொழிலாளர் சமாசத்தில் காலை 10 மணிக்கு நடத்தியிருந்தனர்.
குறித்த சந்திப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். விடயம் தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில்,
முல்லைத்தீவு மாவட்டத்தில் சிங்கள மீனவர்களின் அத்துமீறல்களும், சட்டவிரோதமான கடற்றொழில்களில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையும் சமகாலத்தில் அதிகரித்திருக்கின்றது.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக நாங்கள் முறைப்பாடு கொடுத்தபோதும் அவற்றைத் தடுக்காமல் மேலும் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் எங்களுடைய பிரச்சினைகளை அதிகரிப்பதற்கு எமக்கு கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களம் தேவையில்லை.
எனவே சட்டவிரோத மீன்பிடியாளர்களை வெளியேற்றுவதற்கான கோரிக்கையுடன் சேர்த்து கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தையும் வெளியேற்றக் கோரி நாங்கள் போராட்டத்தை முன்னெடுக்க மக்களுடைய கோரிக்கைக்கு அமைவாக நாங்கள் தீர்மானம் எடுத்துள்ளோம். அதனை தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் சட்ட உதவி ஆணைக்குழு ஆகியவற்றுக்கும் தெரியப்படுத்தியிருக்கின்றோம்.
எனவே எமது போராட்டம் எங்கே? எப்போது? எவ்வாறு? நடைபெறும் என்பது தொடர்பாக நாங்கள் சில தினங்களில் அறிவிப்பதுடன் இந்தப் போராட்டம் மிக பிரமாண்டமான அளவில் மாபெரும் முற்றுகை போராட்டமாக நடத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்திருக்கின்றார்.

ad

ad