திங்கள், ஏப்ரல் 06, 2015

அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகரின் யாழ் விஜயம்!: முதலமைச்சர் உட்பட பலருடன் பேச்சுவார்த்தை


வடமாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவுஸ்திரேலியா நாட்டின் உயர் ஸ்தானிகர் ரூபின் மூடி தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் யாழ். ஆயர் தோமஸ் சௌவுந்தரநாயகம், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், மற்றும் வடமாகாண ஆளுநர் பளிகக்கார, யாழ். அரசாங்க அதிபர் வேதநாயகன் ஆகியோரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
யாழ். ஆயர் தோமஸ் சௌவுந்தரநாயகத்துடனான சந்திப்பு காலை 10மணியளவில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக ஆயர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், ஆட்சிமாற்றத்தின் பின்னர் தமிழ் மக்களுக்கு எவ்வாறான நன்மைகள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன என அவுஸ்திரேலிய குழுவினர் எங்களிடம் கேட்டார்கள்.
அதற்கு நாம் கூறியிருக்கின்றோம், ஆட்சி மாற்றத்தின் பின்னர் தமிழ் மக்களுக்கு எதிர்பார்த்தளவு நன்மைகள் எவையும் கிடைக்கவில்லை. ஆனாலும் சில செயற்பாடுகள் நம்பிக்கையளிக்கின்றன. குறிப்பாக மீள்குடியேற்றம், மற்றும் ஆளுநர் மாற்றம் போன்றன நன்மைளிக்கும் விடயங்களாக அமைகின்றன என்பதை நாங்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றோம்.
மேலும் அவர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின்  வருகை தொடர்பாக கேட்டிருந்தார்கள். அதில் குறிப்பாக வடக்கிற்கு பிரதமருடைய வருகை மிக வரவேற்கத்தக்கது என்பதனையும். அவர் இங்கே மக்களை சந்தித்து மக்களுடைய பல்வேறு தேவைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறிந்து சென்றிருக்கின்றார்.
குறிப்பாக படையினர் இங்கே நிலைகொண்டிருப்பதுடன் அவர்கள் மக்களுடைய பல வேலைகளை செய்துகொண்டிருப்பதையும், படைக்கட்டமைப்பையும் பார்வையிட்டுச் சென்றுள்ளதுடன், அத்துடன்  படையினர், படையினருடைய வேலைகளைச் செய்யவேண்டும் என்பதையும் வலியுறுத்தியிருக்கின்றார். முக்கியமாக கிளிநொச்சியில் பிரதமரிடம் முன்னாள் போராளிகள் தாங்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் மற்றும் அச்சுறுத்தல்கள் தொடர்பாக சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள்.
அதனடிப்படையில் அவ்வாறான பிரச்சினைகள் இனிமேல் இடம்பெறாது என பிரதமர் கூறியிருக்கின்றார். எனவே பிரதமருடைய வருகை நன்மையளிக்கும் விடயம் என்பதை சுட்டிக்காட்டியிருப்பதுடன் பிரதமருடைய வருகையின்போது வடமாகாண முதலமைச்சருடன் அவர் பேசியிருக்கவில்லை. அவர் அவ்வாறு பேசி சில விடயங்களை செய்திருக்கவேண்டும். ஆனால் அவ்வாறு நடக்காமை கவலைக்குரிய விடயம் என்பதையும் நாங்கள் கூறியிருக்கின்றோம்.
இதேவேளை வட மாகாண முதலமைச்சருடனான சந்திப்பு இன்றைய தினம் காலை 11மணிக்கு இடம்பெற்றிருந்தது. இந்தச் சந்திப்பின் நிறைவில் முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், ரூபின் மூடி அவர்கள் என்னோடு அதிகளவான பிரச்சினைகள் தொடர்பாக பேசியிருந்தார். எனினும் அதில் பல விடயங்களை அவர்கள் வெளியிட விரும்பியிருக்கவில்லை எனவே அவை குறித்து கூறமுடியாது.
ஆனால் ஆட்சிமாற்றத்தின் பின்னர் தமிழ் மக்கள் எதிர்பார்த்த நன்மைகள் எவையும் கிடைக்கவில்லை. எமக்கு கூறப்பட்ட பல நன்மையளிக்கும் விடயங்களை நாம் செயற்பாட்டில் காணமுடியாத நிலையில் இருக்கின்றோம். என்பதை நாங்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றோம், மேலும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி செயற்றிட்டங்கள் தொடர்பாக பேசியிருந்தார்கள் என்றார்.