புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஏப்., 2015

தமிழர்கள் படுகொலை: உயிர் தப்பியவர் மனித உரிமை கமிஷன் முன்பு ஆஜராகிறார்!


ஆந்திராவில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக டெல்லியில் மனித உரிமை கமிசன் முன்பு உயிர் தப்பி வந்தவர் ஆஜராகிறார்.


திருப்பதி வனப்பகுதியில், 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் மனித உரிமை மீறல் நடந்து இருப்பதை உறுதிபடுத்தும் நேரில் பார்த்த ஒரே சாட்சியாக கண்ணமங்கலத்தை சேர்ந்த சேகர் கருதப்படுகிறார்.

திருத்தணியில் இருந்து திருப்பதிக்கு மரம் வெட்ட பஸ்சில் சென்றபோது ஆந்திர போலீசாரின் பிடியில் இருந்து இவர் அதிர்ஷ்டவசமாக தப்பி வந்தார். இவருடன் சென்ற 7 பேரும் ஆந்திர போலீசாரின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகி விட்டனர்.

ஆந்திர போலீசார் நடத்திய திட்டமிட்ட அட்டூழியத்துக்கு நேரில் பார்த்த சாட்சியான சேகரை மனித உரிமை ஆர்வலர்கள் தங்கள் பாதுகாப்பில் வைத்துள்ளனர். இவர் மூலம் ஆந்திர போலீசார் நடத்திய கொலை வெறி சதி திட்டத்தை வெளியில் கொண்டு வர மனித உரிமை ஆணைய ஆர்வலர்கள் தீவிரமாக உள்ளனர்.

இதற்காக கண்ணமங்கலம் சேகரை டெல்லிக்கு அழைத்து செல்ல அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இன்று அல்லது நாளை அவர்கள் டெல்லி செல்ல உள்ளனர். இதற்கான திட்டம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் வரும் செவ்வாய்க்கிழமை  தேசிய மனித உரிமை கமிஷன் முன்பு சேகர் ஆஜராக உள்ளார். மனித உரிமை கமிஷன் தலைவரான முன்னாள் நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனிடம் சேகர் வாக்குமூலம் அளிப்பார்.

20 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் என்னென்ன நடந்தது என்பதை அவர் மனித உரிமை கமிஷனில் விளக்கமாக தெரிவிப்பார். சேகர் அளிக்கவுள்ள இந்த வாக்குமூலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட தகவல் வெளியான உடனேயே தேசிய மனித உரிமை ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்தது. அதோடு இதுபற்றி ஆந்திர மாநில அரசு விளக்கம் அளிக்க நோட்டீஸ்  அனுப்பியது.

இந்த விவகாரத்தில் வரும் 23 ஆம் தேதி ஆந்திர மாநில தலைமை செயலாளரும், போலீஸ் டி.ஜி.பி.யும் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர். அதன்பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்று தேசிய மனித உரிமை கமிஷன் உறுப்பினர் முருகேசன் கூறினார்.

இதற்கிடையே 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் திட்டமிட்ட சதி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருப்பதால் அதுபற்றி தனியே விசாரணை நடத்த தேசிய மனித உரிமை கமிஷன் உத்தரவிடும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ad

ad