புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஏப்., 2015

“ஜெயலலிதா விடுதலையாக வாய்ப்பு இருக்கிறது"


''அரசியல் கட்சித் தலைவர் ஒருவர் ஊழல் குற்றத்துக்காகத் தண்டிக்கப்பட்டால், அந்தச் சூழலைப் பயன்படுத்திக்கொண்டு
மக்கள் ஆதரவைப் பெறக்கூடிய பலமான எதிர்க்கட்சி எதுவும் இங்கு இல்லை. காரணம், எதிர்க்கட்சித் தலைவர்களும் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி நீதிமன்றத்துக்கு நடையாக நடக்கிறார்கள். இங்கே, ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு எப்படி வேண்டுமானாலும் வரலாம். அவர் விடுதலையாகவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், தீர்ப்பு எப்படி வந்தாலும், தமிழகத்தில் பெரிய மாற்றங்கள் நிகழாது' - அதிரடியாக ஆரம்பிக்கிறார் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு.
'தமிழகத்தில் நிழல் முதலமைச்சர், நிஜ முதலமைச்சர் என இரு முதலமைச்சர்கள் இருக்கிறார்களே?'
'அரசியல் சட்டப்படி, ஆளுநருக்கு ஆலோசனை வழங்கக்கூடிய ஒரு முதலமைச்சரின் தலைமையில் அமைச்சரவை இயங்க வேண்டும். ஆனால், பல மாநிலங்களில் பலம்வாய்ந்த அரசியல் தலைமைகள் சிறைக் குற்றவாளி ஆக்கப்பட்ட பின், அவர்களது நெருங்கிய உறவினரை முதலமைச்சர் ஆக்கிவிட்டு கட்சி அலுவலகத்தில் இருந்து ரிமோட் கன்ட்ரோலில் ஆட்சி நடத்தியதைப் பார்த்தோம். உதாரணம்,  பீகார். ஆனால், தமிழ்நாட்டில் மட்டும்தான் ஓர் அசல் முதலமைச்சரும் அவரது பின்னணியில் ஒரு நிழல் முதலமைச்சரும் செயல்படுவதைப் பார்க்கிறோம். ரிமோட் கன்ட்ரோலுக்குப் பதிலாக, பதவி விலகிய முதலமைச்சரின் நேரடி ஆட்சி வேறு எங்கும் நடைபெற்றது இல்லை.'
'ஓ.பன்னீர்செல்வத்தின் ஆட்சி எப்படி உள்ளது?'
'இந்த ஆட்சி, அரசியல் சட்டப்படி நடைபெறவில்லை. அரசியல் சட்டப்படி, பதவியில் அமர்த்தப்பட்ட முதலமைச்சர் இன்னும் செயல்படாதவராகவே உள்ளார். முதலமைச்சர் ஆசனத்தில் உட்காருவதற்கே இதுநாள் வரை தயக்கம் காட்டிய அவரால், எந்தவித முடிவையும் எடுக்க முடியவில்லை. அவரது கைகள் கட்டப்பட்டுள்ளன. 'மக்கள் முதல்வர்’, 'மக்கள் தலைமைச் செயலாளர்’, 'மக்கள் காவல் துறை அதிகாரி’ இவர்கள் கொண்ட குழுதான் இன்று தமிழகத்தில் ஆட்சி நடத்திவருகிறது. இது பெரும் தவறு.'
'தமிழக அமைச்சர்கள், அவர்களின் துறை சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதைக் காட்டிலும், ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என பிரார்த்தனை செய்வதில்தான் கவனம் செலுத்தி வருகிறார்களே?'
'இந்தியாவின் தலைசிறந்த வழக்குரைஞர்களை மிகுந்த பொருட்செலவில் அமர்த்தி வழக்கு நடத்திக்கொண்டிருக்கும் நிலையில் ஏன் இந்த ஏற்பாடுகள் எனத் தெரியவில்லை. அமைச்சரவை, எந்த முக்கிய முடிவையும் எடுப்பது இல்லை. உதாரணமாக, சென்னை மெட்ரோ ரயில் திட்டம் முடிவடைந்து தயார் நிலையில் இருப்பதாகவும், ஜெயலலிதா வந்து தொடங்கிவைக்க வேண்டும் என்பதற்காகக் காத்திருப்பதாகவும் சொல்கிறார்கள். இதுபோல ஏராளமான திட்டங்கள், தொடக்க விழாக்கள் அனைத்தும் தேக்க நிலையில் காத்திருக்கின்றன. இது ஒரு டம்மி அமைச்சரவை; செயல்பாடு இல்லாத அமைச்சரவை. இந்தத் தவறான போக்கை அனுமதிக்கவே முடியாது.'
'நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவரின் பெயரும் புகைப்படமும், அரசின் அதிகாரபூர்வ அறிவிப்புகளில் தொடர்ந்து இடம்பெறுகின்றன. இது சம்பந்தமாக நீதிமன்றமும் அமைதிகாக்கிறதே?'
'நீதிமன்றம் தன்னிடம் வரும் அரசியல் தொடர்பான வழக்குகளில் முறையான தீர்ப்பு வழங்கத் தயங்குவதும் அல்லது பிரச்னையைத் தட்டிக்கழிக்க முயல்வதுமே இதற்கான காரணம். 'இது அரசின் கொள்கை முடிவு’ எனச் சொல்லி, அரசைப் பற்றி புகார் கூறும் மனுக்களில் அரசையே முடிவெடுக்கும்படி நீதிமன்றம் உத்தரவிடுவது கொடுமையிலும் கொடுமை.
ஜெயலலிதாவின் புகைப்படத்தைப் பயன்படுத்தும் வழக்கில், 'நான்கு வாரங்களுக்குள் தமிழக அரசு முடிவு எடுக்க வேண்டும்’ என நீதிமன்றம் சொன்னது. நான்கு மாதங்களைக் கடந்தும் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இப்போதும் அவரது புகைப்படங்கள்தான் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்றன. இப்போது நீதிமன்றம், தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு தொடுக்குமா என்ன? டிராஃபிக் ராமசாமி போன்றோர் பேனரைக் கிழிக்கும்போது 'நீங்கள் சட்டத்தைக் கையில் எடுக்கக் கூடாது’ எனச் சொல்கிறார்கள். சரி, அவர் எடுக்க வேண்டாம். ஆனால், நீதிமன்றமே சட்டத்தைக் கையில் எடுக்கவில்லை என்றால் எப்படி? இது மிக மிக மோசமான உதாரணம். நீதிமன்றம் தனது பொறுப்பைத் தட்டிக்கழிக்கிறது.'
'கிரானைட் கொள்ளை விசாரணையில் சகாயத்துக்கு அரசின் நெருக்கடி, சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி அதிகாலையில் கைது... போன்ற சம்பவங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?'
'நமது மக்கள், தங்களை இன்னல்களில் இருந்து பாதுகாக்க அவதாரப் புருஷர்கள் உருவாக வேண்டும் என நினைக்கிறார்கள். அதற்கான வடிவங்கள்தான் சகாயமும் டிராஃபிக் ராமசாமியும். தனிப்பட்ட உத்தமர்கள் ஒருசிலரால் பிரச்னைகள் முழுமையாகத் தீராது. விழிப்படைந்த மக்கள், தங்கள் உரிமையை நிலைநாட்ட தடைகளை மீறி முன்வரும்போதுதான், பிரச்னைகளுக்குத் தீர்வு கிட்டும்.
மதுரையில் கிரானைட் கொள்ளையர்களால் துன்பம் அடைந்த லட்சக்கணக்கான மக்களை, இதுவரை வாய்மூடி மௌனிகளாக வைத்திருக்கும் சக்தி எது? கண் எதிரில் நடைபெற்ற கிரானைட் கொள்ளையை எதிர்த்து மக்கள் ஏன் இதுநாள் வரை கொதித்து எழவில்லை? 'சான்றோரும் உண்டுகொல்’ எனச் சொல்ல, ஒரு கண்ணகி இல்லாமல்போனது ஏன்?''
'தமிழக எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன?'
'தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாகச் செயல்படக்கூடிய கட்சியைப் பற்றி மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டுவிட்டது. ஆளும் கட்சியை கைநீட்டிக் குற்றம் கூற முடியாத அளவுக்கு, பதவியில் இருக்கும்போது  அவர்களும் அனைத்துவிதமான முறைகேடுகளிலும் ஈடுபட்டிருந்தனர். அதனால், மக்கள் அல்லல்பட்டு, அழுது, கண்ணீர் வடித்தாலும், ஆளும் கட்சியைத் தோற்கடிக்கும் படையாக அதை மாற்றும் வலிமை எதிர்க்கட்சிகளுக்கு இப்போது இல்லை.'
'ஆம் ஆத்மி கட்சி வெற்றியை எப்படிப் பார்க்கிறீர்கள்?'
'காங்கிரஸ், பா.ஜ.க அல்லாத மாற்று கட்சிக்கு அரசியலில் இடம் இருப்பதைத்தான் டெல்லித் தேர்தல் முடிவு காட்டுகிறது. தமிழகத்திலும் இரண்டு கழகங்களுக்கும் மாற்றாக ஒரு மாற்று அரசியல் சாத்தியமே. ஆனால், அந்தக் கனி கிட்டுவதற்கு வெகுகாலம் காத்திருக்க வேண்டும்.'
'மோடி ஆட்சி?'
'மோடி மஸ்தான்களால் பாம்பைப் படமெடுத்து ஆடச் செய்யத்தான் முடியுமே தவிர, பாம்புகளின் எண்ணிக்கையைக் குறைக்க முடியாது. காங்கிரஸ் ஆட்சியின் ஜெராக்ஸ் போலத்தான் நடக்கிறது மோடி ஆட்சி.'
' 'மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு, அ.தி.மு.க அரசின் ஆதரவு மறைமுகமாக எதையோ உணர்த்துகிறது’ என கருணாநிதி குற்றம் சுமத்தி இருக்கிறாரே?'
'தி.மு.க ஆட்சியில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்க, 33 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலத்தை அடிமாட்டு விலையில் பிடுங்கியதை எவரும் மறக்க முடியாது. 2ஜி அலைக்கற்றை ஊழல், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் இவற்றை எல்லாம் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு, நிலம் கையகப்படுத்தும் சட்டத்தைப் பயன்படுத்தி பல மாநிலங்களின் அரசியல் குண்டர்கள் கோடிக்கணக்கான ரூபாய் சுருட்டி இருப்பதை, முறையான ஒரு விசாரணை  கமிஷன் அமைத்தால் கண்டுபிடிக்க முடியும். அதே சமயம், இந்தச் சட்டத்தை காங்கிரஸ் கொண்டுவந்தபோது எதிர்த்த அ.தி.மு.க., இப்போது பா.ஜ.க-வை ஆதரிக்கிறது என்றால், அந்தக் கட்சிக்கு வேறு நிர்பந்தங்கள் இருக்கலாம்.'
'66கி ரத்து பற்றி?'
'தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் திருத்தம் மூலம் கொண்டுவந்த இந்தப் பிரிவு, கருத்துச் சுதந்திரத்தைப் பறிப்பதாகவும், அப்பாவிகளை சிறையில் தள்ளும்படியும் இருந்தது. பலமான அரசியல்வாதிகள் சமூக வலைதளங்கள் மூலம் தங்கள் செல்வாக்கைப் பெருக்கிக்கொள்ளும் வேளையில், தங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களைப் பயமுறுத்தும் வகையில் காவல் துறையைப் பயன்படுத்துவதும் நடைபெற்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள இந்தத் தீர்ப்பு, வரலாற்று சிறப்புமிக்கது.'
'சமூகம் சார்ந்த பிரச்னைகளில் நீதிமன்றமே முன்வந்து வழக்கை எடுத்துக்கொள்வது அண்மைகாலமாகக் குறைந்துவருகிறதே?'
'இந்தக் கருத்து தவறானது. இன்றும் பல பிரச்னைகளில் நீதிமன்றங்கள் தாமே முன்வந்து வழக்குகளை எடுத்து விசாரித்துத் தீர்ப்பளிக்கின்றன. ஆனால், அதற்கும் ஓர் எல்லை உண்டு. அப்படி எடுக்கும்போது, அது சில தனிப்பட்ட நீதிபதிகளின் விருப்பு வெறுப்புகளைச் சார்ந்தவையாக இருக்கக் கூடாது. அண்மையில்கூட கல்லூரிகளில் அழகிப் போட்டிகளைத் தடைசெய்த நீதிமன்ற உத்தரவு, தானாக முன்வந்து விசாரித்ததுதான். அதேசமயம் மேற்குவங்கத்தில் வன்புணர்ச்சிக்கு ஆளான அருட்சகோதரியின் வழக்கை, உச்ச நீதிமன்றம் தானாகவே எடுத்து விசாரிக்க விரும்பவில்லை.'
'காவல் துறைபோல, சட்டக் கல்லூரி மாணவர்கள் மீதும், வழக்குரைஞர்கள் மீதும் பொது மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறதே?'
'சிவில் வழக்குகளை விசாரிப்பதில் ஏற்படும் கால தாமதத்தைத் தவிர்க்க, அவற்றை கிரிமினல் வழக்குகளாகப் பதிவுசெய்யும் போக்கு இந்தியா முழுவதும் அதிகரித்துள்ளது. அப்படி கிரிமினல் வழக்கைப் பதிவுசெய்வதற்கு காவல் துறையின் உதவியை வழக்குரைஞர்களின் ஒரு சாரார் நாடுவதும், மற்றொரு சாரார் எதிர்ப்பதும், இதனால் காவல் துறைக்கும் வக்கீல்களுக்கும் மோதல் உண்டாவதும் தொடர்கின்றன. மேலும், சட்டக் கல்லூரி மாணவர்களும் வழக்குரைஞர்களும், தாங்களும் சட்டத்துக்குக் கட்டுப்பட்டவர்களே என நினைக்காமல், தங்களுக்கு விசேஷ அதிகாரங்கள் இருப்பதாகப் பாவித்துக்கொள்வதாலும் பல பிரச்னைகள் எழுகின்றன. இவற்றை பொதுமக்கள் என்றைக்கும் ஆதரிப்பது இல்லை என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.''
'மரண தண்டனை குறித்து இன்றும் குழப்பம் இருக்கிறதே?'
'அரிதிலும் அரிதான காரணங்களுக்கு மரண தண்டனை வழங்கலாம் எனக் கூறும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, சரியான வழிகாட்டுதலை வழங்காததால் தவறான பல தீர்ப்புகள் வருகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை பெரும்பாலான நேரங்களில், முறையான வக்கீலை வைத்துக்கொள்ள முடியாதவர்களுக்கும், சாதி கட்டுமானத்தின் கீழ்நிலையில் உள்ளவர்களுக்குமே மரண தண்டனை வழங்கப்பட்டுவருகிறது. இதைத் தவிர்க்க ஒரே வழி, மரண தண்டனைக்கு மரண தண்டனை விதிப்பதே!'

ad

ad