புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 மே, 2015

20ஆவது திருத்தம் மலையக பிரதிநிதித்துவத்தில் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்தும்


அரசியலமைப்பின் 20ஆவது தேர்தல் திருத்தச் சட்டம் மலையக மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தில் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்துமென்றும் இரண்டு முதல் மூன்று பாராளு மன்ற உறுப்பினர்களே பாராளு மன்றத்துக்கு தெரிவு செய்யும் நிலைமை ஏற்படும் என்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்தது.
40 ஆண்டுகளாக வாக்குரிமையற்றிருந்த மலையக மக்கள் 1977ஆம் ஆண்டு நடைபெற்ற
தேர்தலில் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி அமரர் செளமியமூர்த்தி தொண்டமான் மாத்திரமே பாராளுமன்றம் சென்றார். அவ்வாறானதொரு நிலைமை மீண்டும் ஏற்பட்டுள்ளதென்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் முத்துசிவலிங்கம் எச்சரிக்கை விடுத்தார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான செளமியபவனில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
புதிய தேர்தல் திருத்தமானது மலையக மக்களை பாதிக்குமென்று தொடர்ச்சியாக நாம் தெரிவித்து வந்தோம். இந்த தேர்தல் திருத்தமானது ஒரு பிரதேசத்தில் பெரும்பான்மையின்றி வாழும் மக்களுக்கு பாரிய விளைவை ஏற்படுத்தும். அது சிங்கள மக்களாக இருந்தாலும் சரி, தமிழர்களாக இருந்தாலும் இரு சமூகங்களுக்கும் பாதகமாகவே அமையும்.
குறிப்பாக ஒரு பிரதேசத்தில் தமிழர்கள் அதிகமாக இருக்கும் போது அந்தப் பிரதேசத்தில் சிங்களவர்கள் சிறுபான்மை மக்களாக இருக்கலாம். அவ்வாறே, சிங்களவர் பெரும்பான்மையாக உள்ள பிரதேசங்களில் தமிழர்கள் சிறுபான்மை யினராக வாழும் நிலை ஏற்படலாம். இதன்போது அந்த தொகுதிகளில் தமிழர்கள் வாழும் பிரதேசங்கள் பலவற்றை ஒன்றிணைத்து ஒரு தொகுதியாக மாற்றும் போது அந்தப் பிரதேசத்தில் இருந்து ஒருவர் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யும் வாய்ப்பு ஏற்படும். அவ்வாறே சிங்களவர்கள் சிறுபான்மையாக வாழும் பிரதேசங்களை ஒன்றிணைத்து ஒரு தொகுதியை ஏற்படுத்தும் போது அவர்களில் இருந்தும் ஒருவர் பாராளுமன்றத்துக்கு தெரிவாகலாம். இரு சமூகங்களுக்கும் நன்மை பயக்கும்.
நாம் இவ்வாறன காரணங்களை முன்வைத்தே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், தேர்தல் ஆணையாளருக்கும் அறிக்கையொன்றை நேற்று சமர்ப்பித்தோம்.
இந்த அறிக்கையில் மலையக மக்களின் பிரதிநிதித்துவத்தில் ஏற்படக்கூடிய பாதிப்பு தொடர்பாகவும் தமிழர்கள் பரந்து வாழும் பிரதேசங்களை ஒன்றிணைத்து ஒரு தொகுதியாக அதிகரிப்பது குறித்தும் தெளிவுபடுத்தியுள்ளோம்.
அவ்வாறில்லையானால் எமது பாராளுமன்ற பிரதிநிதித்துவம் பாரிய அளவில் குறைவடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. 1947ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மலையக மக்களை பிரதிநிதித்து வப்படுத்தி 8 பேர் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டனர். ஆனால், மலையக மக்களின் வாக்குரிமையும், பிரஜாவுரிமையும் பறிக்கப்பட்ட பின்னர் 1977ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மலையக மக்களை பிரதிநிதித்துவப் படுத்தி அமரர் செளமியமூர்த்தி தொண்டமான் மாத்திரமே பாராளுமன்றம் சென்றார்.
40 வருடமாக வாக்குரிமை இழந்திருந்த மலையக மக்களுக்கு வாக்குரிமை பெற்றும் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாத நிலைமை அன்று ஏற்பட்டது. இதே ஆபத்து புதிய சட்ட மூலத்தினால் ஏற்படும். நுவரெலியாவில் மத்திரமே பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். பதுளை, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி ஆகிய பிரதேசங்களில் இருந்து எவரும் தெரிவு செய்வதற்கான வாய்ப்பில்லை.
குறிப்பாக நுவரெலியா மஸ்கெலியா தொகுதியில் 3 பாராளுமன்ற உறுப்பினர்களே பாராளுமன்றம் செல்ல முடியும். ஆனால் இங்கு ஒரு இலட்சத்து 62ஆயிரம் தமிழர்கள் வாழ்கிறார்கள். நாம் இவற்றை நான்கு தொகுதிகளாக பிரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளோம். அவ்வாறே பதுளையில் 180,000 மக்கள் வாழ்கிறார்கள். அங்கிருந்து எவரும் பாராளுமன்றத்துக்கு செல்ல முடியாத நிலை இருக்கிறது.
இதற்காக பண்டாரவளை, ஹல்துமுல்லை ஆகிய பிரதேசங்களை ஒன்றிணைத்து ஒரு தொகுதியாகவும் பதுளை, மடுல்சீமை ஆகிய பிரதேசங்களையும் கம்பளை, நாவலப்பிட்டி ஆகிய பிரதேசங்களை ஒன்றிணைத்து ஒரு தொகுதியும், மாத்தளை, பன்விலை, கண்டி ஆகிய பிரதேசங்களை இணைத்து ஒரு தொகுதியும் இரத்தினபுரி, பலாங்கொடை ஆகிய பிரதேசங்களை ஒன்றிணைத்து தொகுதி உருவாக்குவது தொடர்பாகவும் நாம் யோசனை தெரிவித்துள்ளோம்.
இதன் மூலம் மலையக மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் தக்கவைக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

ad

ad