புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 மே, 2015

சாலைப்போக்குவரத்து - பாதுகாப்பு மசோதா, 
“பசுத் தோல் போர்த்திய புலி’’: கலைஞர்

நாடு முழுதும் எழுந்துள்ள எதிர்ப்பை அடுத்து, மத்திய அரசு சாலைப் போக்குவரத்து மசோதாவைத திரும்பப் பெற பெறவேண்டும் என்று திமுக தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.

இது குறித்த அவரது அறிக்கை:

’’கூட்டாட்சித் தத்துவத்தை மறந்து, மாநில அரசுகளின் உரிமைகளைப் பறித்து, அதிகார ஆக்கிரமிப்புக்கும், அத்துமீறலுக்கும் வழிவகுக்கும் மத்திய அரசின் புதிய சாலைப் போக்குவரத்து - பாதுகாப்பு மசோதாவைக் கண்டித்து, இந்தியாவில் உள்ள அனைத்துத் தொழிற் சங்கங்களின் சார்பில் 30-4-2015 அன்று நடைபெற்ற வேலை நிறுத்தம் பெருமளவுக்குப் பரவலாகவும், வெற்றிகர மாகவும் நிறைவேறியிருக்கிறது. தொழிற் சங்கங்கள் மட்டுமல்லாமல், மாநிலங்களில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களும், தனியார் போக்குவரத்து நிறுவனங்களின் உரிமையாளர்களும், லாரி, ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்களும் தங்களுடைய கடும் எதிர்ப்பை வெளிப்படுத்திடும் வகையில் வேலைநிறுத்த அறப்போரில் பங்கெடுத்துக் கொண்டனர். டெல்லி, பஞ்சாப், அரியானா, சண்டிகர், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட பல் வேறு மாநிலங் களிலும் அரசுப் பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

தமிழகத்தைப் பொறுத்தவரை 30-4-2015 அன்று நடைபெற்ற போராட்டத்தில் ஆளும் அ.தி.மு.க.வின் தொழிற் சங்கத்தைத் தவிர, தி.மு.கழகத்தின் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட அனைத்து தொழிற் சங்கங்களும் ஈடுபட்டன. மூன்றரை இலட்சம் லாரிகள், ஏழாயிரம் டிரைலர் லாரிகள், மூவாயிரம் கேஸ் டேங்கர் லாரிகள் இயக்கப்படவில்லை. தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அலுவலர் சங்கம் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் சங்கம் சார்பில் அலுவலர்கள், ஆய்வாளர்கள், ஊழியர்கள் அனைவரும் மத்தியஅரசின் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

அந்த சங்கங்களின் சார்பில், “மாநில அரசின் அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசு தன்வசம் எடுத்துக்கொண்டு, புதியதாக தேசியப் போக்குவரத்து ஆணையம் மற்றும் மாநிலப்போக்குவரத்து ஆணையம் ஆகிய அமைப்புகளை உருவாக்கச் சாலைப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு மசோதா வகை செய்கிறது. இச்சட்டம் நடைமுறைக்கு வரும்போது, பன்னாட்டு நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களும் மட்டுமே பயன் அடைந்து, பொதுத் துறை நிறுவனங்கள் அனைத்தும் முடக்கப்படும் சூழ்நிலை ஏற்படும்” என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வாகன ஓட்டிகள் அனைவரும் தயாரிப்பு நிறுவனங்களின் பாகங்களை மட்டுமே மாற்றிக் கொள்ள வேண்டும்; அங்கீகரிக்கப்பட்ட சேவை மையங்களில்தான் வாகனங்களைப் பராமரிக்க வேண்டும்; பொது ஏல முறை மூலமாகவே பஸ் பர்மிட்டுகள் வழங்கப்பட வேண்டும்; இரு சக்கர வாகன உதிரி
பாகங்களுக்குக் கூட, தயாரிப்பு நிறுவனத்தின் உதிரி பாகங்களைத்தான் வாங்க வேண்டும்; வாகனம் ஓட்டும்போது நிகழும் சாதாரண தவறுக்கும்கூட அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பன போன்ற எதிர்மறை அம்சங்களே மத்திய அரசின் மசோதாவில் நிறைந்துள்ளன. 

தற்போது நடைமுறையில் இருக்கும் மோட்டார் வாகனச் சட்டம் - 1988 முழுமையான மாறுதல்களுக்கு உள்ளாக்கப்படுவதால், சாலைப் போக்குவரத்துத் தொழிலையே தங்களுடைய
வாழ்வாதாரத்தின் மையமாகக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான ஓட்டுநர்கள், வாகனப் பராமரிப்புப் பணியாளர்கள், சாலைப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஆகியோர் பெரும் பாதிப்புக்கு ஆளாவார்கள். பொதுத் துறை போக்குவரத்துக் கழகங்களின் எதிர்காலமும், அந்தக் கழகங்களில் பணியாற்றி வரும்  இலட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் நிச்சயமற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும். நலிந்த பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ள இலவச பஸ் பாஸ் சலுகைகள் விலகிப் போகும். பாதுகாப்பான சாலைப் பயணம்; விபத்து இல்லாத போக்குவரத்து -என்ற போர்வையில் மத்திய அரசு கொண்டுவர முயற்சிக்கும் சாலைப்போக்குவரத்து - பாதுகாப்பு மசோதா, “பசுத் தோல் போர்த்திய புலி” என்பதைப்போல, தற்போது இந்தியாவில் பல்லாண்டுக் காலமாக இருந்து வரும் சாலைப்போக்குவரத்தின் அடிப்படைக் கட்டமைப்பையே பலியிட்டு, பன்னாட்டு நிறுவனங்களுக்கு இரையாக்கும் கொடுமைக்குப் பாதை அமைத்துக் கொடுத்துவிடும்.

நில எடுப்புச் சட்டம் மற்றும் வட்டி மானியத்தில் மாற்றம் ஆகியவற்றின் மூலம் விவசாயி களுக்கும்; தொழில் திருத்தச் சட்டங்களின் மூலம் தொழிலாளர்களுக்கும்; டாக்டர் மீனாகுமாரி பரிந்துரைகளை ஏற்பதன் மூலம் மீனவர்களுக்கும்; பெரும் பாதிப்பையும், தாங்கொணாத வேதனைகளையும் உருவாக்கி வரும் மத்திய பா.ஜ.க. அரசு; புதிய சாலைப் போக்குவரத்து மசோதாவின் மூலம் கோடிக்கணக்கான போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு நேர்ந்திடவிருக்கும் துன்ப துயரங்களையும், இந்திய நாடு முழுதும் எழுந்துள்ள எதிர்ப்பையும், மாநில உரிமைகளைப் பாதுகாத்திட வேண்டிய அவசியத்தையும் கருத்தில் கொண்டு, மசோதாவை முன்னெடுத்துச் செல்லாமல், திரும்பப் பெற்றிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்! சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினரையும் பகைத்துக் கொண்டு, “மக்களுடன் மத்திய அரசு” என்று பரப்புரை செய்வது
எந்தவிதப் பயனையும் தராது என்பதையும் சுட்டிக்காட்டிட விரும்புகிறேன்!’’

ad

ad