புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 மே, 2015

ஐ.ம.சு. முன்னணி பிளவுபடுவது நிச்சயம்



ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அடுத்த சில வாரங்களில் கட்டாயம் பிளவுபட்டு விடும் அந்த முன்னணியின் உட்தரப்பு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்ற யோசனை ஒன்றை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ராஜபக்ச ஆதரவு கட்சிகள் முன்னணியின் நிறைவேற்றுச் சபையில் முன்வைக்க தீர்மானித்துள்ளன.
முன்னாள் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கி வரும் முன்னணியின் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அதற்கான முதற்கட்ட பணிகளை தற்போது ஆரம்பித்துள்ளனர்.
எனினும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் தன்னால் இணைந்து செயற்பட முடியாது எனவும், அவருடன் இணைந்து அரசியல் பயணத்தை மேற்கொள்ள தான் எண்ணவில்லை எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அண்மையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்களை அழைத்து உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
மைத்திரி – மகிந்த அரசாங்கத்திற்கு தாம் முழுமையான ஆதரவை வழங்குவதாக முன்னணியின் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் இதன் போது ஜனாதிபதியிடம் கூறியிருந்தனர்.
எனினும் அப்படியான கூட்டணி தமக்கு தேவையில்லை என ஜனாதிபதி உறுதியாக கூறியிருந்தார். மகிந்த வாக்குச்சீட்டினால் செய்ய முடியாது போனதை தோட்டாவில் செய்ய முயற்சித்து வருகிறார் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமராக்கும் முயற்சி தோல்வியடைந்தால், மகிந்த தலைமையில் புதிய அரசியல் கூட்டணியை ஏற்படுத்தி எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதை தவிர வேறு வழியில்லை என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய ஆதரவாளருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக இறுதியாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நிறைவேற்றுச் சபை ஊடாக மகிந்தவை பிரதமர் வேட்பாளராக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நிறைவேற்றுச் சபையிலும் மகிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்ற யோசனை நிராகரிக்கப்படும் என்றே தெரியவருவதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் மகிந்த ராஜபக்ச ஆதரவு கட்சிகள் அதில் இருந்து விலகி மகிந்த தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்கும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

ad

ad