புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 மே, 2015

ஜெ.விடுதலையில் மேல் முறையீடு செய்ய தாமதம் ஏன்? புதிய தகவல்கள்!


மிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விடுதலை தொடர்பாக மேல்முறையீடு செய்வதில் கர்நாடக அரசு தாமதம் செய்து வருவதற்குப் பின்னணியில் புதிய காரணங்கள் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த 18 ஆண்டுகளாக பல்வேறு நீதிமன்றங்களில் நடந்து வந்த ஜெயலலிதா மற்றும் அவரின் தோழி சசிகலா உள்ளிட்டோர் மீதான வருவாய்க்கு
அதிகமாக சொத்துக்குக் குவித்த வழக்கு, சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் இறுதி நிலையை எட்டியது.வழக்கை விசாரித்த நீதிபதி டி.குன்ஹா ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும்  சிறைத்தண்டனையும்  அபராதமும் வழங்கி தீர்ப்பளித்தார். 

தீர்ப்பு வழங்கப்பட்ட நாளான கடந்த 2014 ஆண்டு செப்டம்பர்  மாதம் 27 ஆம் தேதி அன்றே முதல்வர் பதவியை இழந்தார் ஜெயலலிதா.அதனைத் தொடர்ந்து 40 நாளுக்கும் மேலாக பரப்பன அக்ரஹார சிறையில் அவர் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் 219 நாட்களாக தனது போயஸ் கார்டன் இல்லத்திலேயே இருந்துவந்தார். தொடர்ந்து சட்டப்படி மேல்முறையீடு செய்து பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் நீதிபதி குமாரசாமி முன்னிலையில் தன் மீதான வழக்கினை எதிர்கொண்ட  ஜெயலலிதா, சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். 

இதனால் கடந்த 23 ஆம் தேதி தமிழக முதல்வராக மீண்டும் பதவி ஏற்றுக்கொண்டார். இந்த விவகாரங்கள் தமிழக அரசியலில் கடந்த 8 மாதங்களாக பல்வேறு அதிர்வுகளை எற்படுத்தி வந்தன.ஜெயலலிதா சிறைக்குள் அடைக்கப்பட்ட காலத்தில் தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். பன்னீர்செல்வத்தின் பதவி காலத்தில் தமிழக அரசின் செயல்பாடுகள் வெகுவாக முடங்கிப் போயின.இது தொடர்பாக தமிழகத்தின் எதிர்க் கட்சிகள் பல்வேறு முறை விமர்சனங்கள் செய்து வந்தன.ஆனாலும் அதில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது.முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் அவருடைய அமைச்சரவையின் முக்கிய இலக்கு ஜெயலலிதாவின் விடுதலை என்பதாகவே இருந்ததை நாடு அறியும்.

அதேபோல ஜெயலலிதா விடுவிக்கப்பட்டார். மீண்டும் தமிழகத்தின் முதல்வருமானார்.  இந்நிலையில்,சொத்துக் குவிப்பு வழக்கினை நடத்தி வந்த கர்நாடக அரசு, உச்ச நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்ற குரல்கள் எழத்தொடங்கின. தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சிகள்   அனைத்தும்  கர்நாடகம் மேல் முறையீடு செய்யவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன. அதே சமயம் மேல்முறையீடு தேவையில்லை என கர்நாடக காங்கிரஸ் தரப்பிலேயே சிலர் கூறி வந்தனர். 

இந்நிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டு 14 நாட்கள் ஆகியும் கர்நாடகம் மேல்முறையீடு செய்யவில்லை.மேல் முறையீடு செய்ய 3 மாதம் கால அவகாசம் இருந்தாலும் அது குறித்த முடிவை அறிவிக்க அம்மாநில அரசு தாமதித்து வருகிறது. அதே நேரத்தில் தயங்கியும் வருகிறது  என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.
முதலில் கடந்த 21 ஆம் தேதியன்று கர்நாடக அமைச்சரவை கூடி மேல்முறையீடு குறித்து முடிவெடுக்கும் என்று கூறப்பட்டது. இதனால் ஜெயலலிதா முதலமைச்சராக பதவியேற்பதே, கர்நாடக அரசின் மேல்முறையீட்டை பொறுத்து அமையலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் 21 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த கர்நாடக அமைச்சரவைக் கூட்டம் 25 ஆம் தேதிக்கு ( நேற்றைக்கு ) ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திலும் மேல் முறையீடு குறித்து விவாதிக்கப்படவோ, முடிவெடுக்கப்படவோ இல்லை. பின்னர் முடிவெடுக்கப்படும் என கர்நாடக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேல்முறையீடு செய்வது குறித்து கர்நாடக அரசு தாமதம் செய்துவருவது ஏன் என்பது குறித்த சில பின்னணி காரணங்கள் தற்போது வெளியாகி உள்ளன. 

விரைவில் பெங்களூரு மாநகராட்சிக்கான  தேர்தல் நடைபெறவிருக்கிறது.அதனால் ஆளும் காங்கிரஸ் அரசு அதில் முழு கவனமும் செலுத்தி வருகிறது. மத்தியில் பாஜக தலைமையில் ஆட்சி நடந்துவருவதால், எந்தத் தேர்தலாக இருந்தாலும் கர்நாடகத்தைப் பொறுத்தவரையில் காங்கிரஸ் தோல்வியைப் பெற்று விடக்கூடாது என்பதில் அம்மாநில முதல்வர் சித்தாரமையா உறுதியாக இருக்கிறார். இதன்   காரணமாகவே நேற்று நடைபெற்ற கர்நாடக அமைச்சர்களின் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா வழக்கின் மீதான மேல்முறையீடு குறித்த எந்த விவாதங்களும் நடைபெறவில்லை என்று செய்திகள் வெளியாகின.அவற்றை கர்நாடக அரசும் மறுக்கவில்லை. 

பெங்களூருவில் தமிழர்கள் கணிசமான அளவில் வசிக்கிறார்கள்.மொத்தமுள்ள வாக்களர்களில் 20 சதவீதம் பேர் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் வெற்றித் தோல்வியைக் கணிக்கும் சக்தியாக தமிழர்கள் இருப்பதால், அம்மாநில அரசியல் கட்சிகள் தமிழர்களை இழுப்பதில் போட்டிப் போட்டு வேலை செய்து வருகின்றன. இந்நிலையில், ஆளும் கட்சியான காங்கிரஸ்  கட்சி, ஜெயலலிதா வழக்கில் அவசரப்பட்டு மேல்முறையீடு செய்வதன் மூலம் பெங்களூரு தமிழ் வாக்களர்களின் அதிருப்தியை சம்பாதித்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாகவும், இதன் காரணமாகவே மேல்முறையீட்டில் இழுபறி நிலை நீடிப்பதாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஜெயலலிதா விவகாரத்தில் மேல் முறையீடு செய்வதில் கர்நாடக அரசு தாமதம் செய்து வருவதற்கு தமிழக எதிர்க்கட்சிகள் மத்தியில்  கடும் எதிர்ப்பு எழுந்துள்ள சூழலில், தற்போது தமிழர்களின் வாக்கு வங்கியைத் தக்கவைத்துக் கொள்வதில் கர்நாடக காங்கிரஸ் குறியாக இருப்பது குறித்து அக்கட்சிகள் மேலும் அதிருப்தி அடைந்துள்ளன. 

ad

ad