புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 மே, 2015

சம்பந்தன், சுமந்திரன் சார்பிலோ நான் இந்தக் கருத்தை வெளியிடவில்லை- அரச பயங்கரவாதிகளை நினைவு கூர முடியுமா? அரசிடம் சுரேஷ் எம்.பி கேள்வி,
சுரேஷ் எம்.பிஇவ்வருடம் யுத்த வெற்றி விழா கொண்டாடப்பட மாட்டாது. மாறாக பிரிவினைக்கு எதிரான தினமே கொண்டாடப்படுமென
அரசு அறிவித்துள்ளதெனில், நாளை மறுதினம் 19 ஆம் திகதி மாத்தறையில் அரசு என்ன விழாவைக் கொண்டாடவிருக்கிறது என யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இவ்வருடம் யுத்த வெற்றி விழா கொண்டாடப்பட மாட்டாது என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளமை குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் அவர் கூறுகையில்,
அமைச்சர் கரு ஜயசூரிய பயங்கரவாதிகளை நினைவு கூர முடியாதென்று கூறியுள்ளார். அவ்வாறாயின் எமது கேள்வி அரச பயங்கரவாதிகளை நினைவு கூர முடியுமா? என்பதேயாகும்.
கண்மூடித்தனமாக எத்தனையோ ஆயிரம் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அரசாங்கம் வெற்றி விழா கொண்டாடுகிறார்களா? இல்லையா? என்பதல்ல கேள்வி.
தமிழ்மக்கள் மரணித்துப்போன தமது உறவுகளை – சொந்தங்களை வருடாவருடம் நினைவு கூருவதை யாரும் தடை செய்யாமல் இருப்பதே உண்மையான சுதந்திரமாகும்.
மரணித்துப்போன எமது உறவுகள் அரசாங்கத்துக்கும் அமைச்சர்களுக்கும் பயங்கரவாதிகளாகத் தோற்றலாம். ஆனால் தமிழ் மக்களுக்கு அவர்கள் சொந்த இரத்தம், அவர்களது உறவுகள், இறந்து போன போராளிகள், தமது இனத்துக்காகப் போராடியவர்கள். அவர்களை நினைவு கூருவது தமிழ் மக்களுடைய உரிமைகளாகும்.
இதை கடந்த அரசாங்கம் கடுமையாக தடை விதித்து வந்தது. இன்றைய அரசாங்கம் இறந்து போன தமது உறவுகளை நினைவு கொள்ள அனுமதித்திருப்பது வரவேற்கத்தக்க விடயமாகும்.
தேசியக்கொடியை ஏற்றுள்ளோம். தேசிய கீதத்தை இசைக்கலாம் என்பது எல்லாம் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விடயமல்ல. ஒரு சிலர் அதை ஏற்றிருக்கலாம்.
ஆனால், இரா.சம்பந்தனின் சார்பிலோ, சுமந்திரனின் சார்பிலோ நான் இந்தக் கருத்தை வெளியிடவில்லை.
இது தமிழர்கள் கொண்டாடும் நாள் அல்ல. இது சிறிலங்கா இராணுவத்தினரின் கொண்டாட்டத்துக்குரிய நாளாக இருக்கலாம், ஆனால், இதனை தமிழ்மக்களால் கொண்டாட முடியாது.
தனிப்பட்ட ரீதியாக, மாத்தறையில் நடைபெறும் நிகழ்வில் நான் பங்கேற்கப் போவதில்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் நடைபெறும் இராணுவ அணிவகுப்பு நிகழ்வில் பங்கேற்குமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும், வடக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கும் சிறிலங்கா அரசாங்கம் அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மாத்தறையில் 19ம் திகதி நடைபெறவுள்ள வெற்றி விழாவுக்கு நீங்கள் போகிறீர்களா என தொலைபேசியில் சிலர் கேட்டார்கள். நான் இல்லையென பதிலளித்தேன்.
அப்படியாயின் இதன் கருத்தென்ன? மாத்தறையில் வெற்றி விழா கொண்டாடப்படவுள்ளதா? அல்லது பிரிவினைக்கு எதிரான தினம் கொண்டாடப்படவுள்ளதா என்று புரியவில்லை.
அரசாங்கம் வெற்றி விழா கொண்டாடுகிறதா? அல்லது நினைவு தினம் கொண்டாடுகிறதா? என்பதற்கு அப்பால் தமிழ் மக்களும் தமது இறந்து போன உறவுகளை நினைவுபடுத்தி அஞ்சலி செலுத்த விரும்புகின்றார்கள் என்பதை அரசாங்கமும் அமைச்சர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதுதான் எமது நிலைப்பாடாகும் என்றார்.

ad

ad