புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 மே, 2015

சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்துங்கள்; தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் ஜோன் கெரி வலியுறுத்து


தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலையை தமிழர் தரப்பினர் சரியாகப் பயன்படுத்தி தீர்வினை எட்ட வேண்டும்  என தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு அமெரிக்க இராஜாங்க செயலர் ஜோன்  கெரி வலியுறுத்தியுள்ளார்.
 
இரண்டு நாள் உத்தியோக பூர்வ விஜயம்  மேற்கொண்டு இலங்கைக்கு நேற்று வருகைதந்துள்ள ஜோன் கெரி ஜனாதிபதி, பிரதமர் மற்றும்  வெளிவிவகார அமைச்சர்  உட்பட அரச தரப்பினர் பலரைச் சந்தித்து கலந்துரையாடினார்.
 
அதனையடுத்து இன்றையதினம்  காலை தமிழ்  தேசியக் கூட்டமைப்பின்  தலைவர் சம்பந்தன் செயலாளர் மாவை சேனாதிராசா, உள்ளிட்ட உறுப்பினர்களான சுரேஸ்பிரேமச்சந்திரன், சுமந்திரன், செல்வம்  அடைக்கலநாதன் , வடக்கு முதலமைச்சர் க.வி. விக்கினேஸ்வரன் உள்ளிட்டவர்களைச் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
 
அதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் சந்திப்பில் கூட்டமைப்பு தங்களது கருத்துக்களையும்  செயலருக்கு தெரியப்படுத்தியதுடன்  அழுத்தங்களை வழங்குமாறு தெரிவித்துள்ளனர்.
 
அதற்கமைய இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமைகள் மீறல் குறித்து நம்பகத்தன்மையான விசாரணை நடத்தப்படவேண்டும் என்பதை தமிழ்த்தரப்பு விரும்புகிறது.
 
வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வொன்று பெற்றுக்கொடுக்கப்படவேண்டும் வடக்கில் படைக்குவிப்பு இதுவரை குறைக்கப்படவில்லை. 
 
முன்னர் போர் நடைபெற்ற காலத்தில் விடுதலைப் புலிகளின் தொலைதூர எறிகணைகளைக் காரணம் காட்டி இராணுவத்தினர் அதிகளவான காணிகளை பொதுமக்களிடமிருந்து தம்வசப்படுத்தியிருந்தனர். 
 
தற்போது அப்படியொரு அபாயம் இல்லை. எனவே  பொதுமக்களிள் காணிகளை  இராணுவத்தினர் கையளிக்கவேண்டும் என்றும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் வலியுறுத்திளார். 
 
இராணுவத்தினரே முடிவெடுக்கும் சக்தியாக இருக்கின்றனர். இந்த நிலைமை மாற்றப்பட்டு அரசியல் ரீதியாக தீர்க்கமான முடிவொன்றை இலங்கை அரசு அறிவிப்பதற்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்கவேண்டும். 
 
வடக்கிலிருந்து படைகள் நீக்கப்பட்டு அனைத்து மக்களும் தமது சொந்த இடங்களில் மீள்குடியேறுவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த இலங்கை அரசை அமெரிக்கா கோரவேண்டும் என்றும் அமெரிக்க ராஜாங்க செயலாளரிடம் எடுத்துக்கூறப்பட்டுள்ளது.
 
அவர்களது கருத்துக்களை ஏற்றுக்கொண்ட அவர் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலையை தமிழர் தரப்பினர் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று தெரிவித்தார் என கூட்டமைப்பின்  தகவல்கள் தெரிவிக்கின்றன.

ad

ad