புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 மே, 2015

தி.மு.க. போட்டியிடாதது ஏன்? மு.க.ஸ்டாலின் பேச்சு


திருவள்ளூர் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அ.தி.மு.க. அரசின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து திருவள்ளூரில் உள்ள ஐ.சி.எம்.ஆர். வளாகம் அருகே மாவட்ட செயலாளர் நாசர் தலைமையில் வியாழக்கிழமை இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,

ஆர்.கே. நகரில் ஜூன் 27-ஆம் தேதி தேர்தல் என்று அறிவித்திருக்கிறார்கள். அந்த அறிவிப்பு வெளியானவுடனே தலைவர் கலைஞர் அவர்கள் தி.மு.க. சார்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் தி.மு.க போட்டியிடாது என்று தெரிவித்திருக்கிறார். பயந்தோ, அஞ்சியோ, நடுங்கியோ அல்ல. நாம் திருவரங்கத்தில் போட்டியிடவில்லையா? எல்லா இடைத்தேர்தல்களிலும் தி.மு.க. போட்டியிட்டிருக்கிறது. திமுக ஆட்சியில் அ.தி.மு.க-தான் ஐந்தாறு இடைத்தேர்தல்களில் போட்டியிடவில்லை. இந்த தேர்தலில் தான் தி.மு.க போட்டியிடவில்லை. அதற்கு காரணம் இன்னும் ஏழு எட்டு மாதங்களில் பொதுத்தேர்தல் வரவிருக்கிறது. அதுமட்டுமல்ல, இந்த இடைத்தேர்தல் எந்த நிலையில் வந்திருக்கிறது என்பதையும் நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். 
18 ஆண்டுகள் நடந்த வழக்கில் 100 கோடி ரூபாய் அபராதமும், 4 ஆண்டு சிறைதண்டனையும் அம்மையார் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டது. ஒரு வாரத்தில் அவர் ஜாமீனில் வெளியே வந்துவிடுகிறார். வந்தவுடனேயே 3 மாதத்தில் அப்பீல் வழக்கை முடிக்க வேண்டுமென்று உத்தரவிடுகிறார். ஒரு தனி நபருக்கான நாடகம் நடத்தப்படுகிறது. 

பின்னர், கர்நாடகா உயர்நீதிமன்றத்தால் ஜெயலலிதா விடுதலை செய்யப்படுகிறார். அதன் பிறகு அவசர அவசரமாக அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கூட்டம் கூட்டப்பட்டு பினாமி முதல்வராக இருந்த ஓ.பி அவர்கள் ராஜினாமா செய்கிறார். அதைத்தொடர்ந்து அம்மையார் ஜெயலலிதா சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்தக் கடிதத்தை கவர்னரிடம் கொண்டு கொடுக்கிறார்கள். மறுநாள் பதவியேற்பு. 

கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் (2015-16)-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது ஓ.பி-தான் முதல்வர். நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, 5 நாட்கள் விவாதம் நடத்தப்பட்டு சட்டமன்ற கூட்டத்தொடர் முடிக்கப்பட்டது. எப்போதுமே, நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட வேண்டும். மானிய கோரிக்கைகளில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, காவல் துறை, சட்டத்துறை, நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சித்துறை என பல துறைகள் இருக்கின்றன. இந்த துறைகளுக்கு உரிய திட்டங்களை தாக்கல் செய்து அதற்குரிய நிதியை சட்டமன்றத்தில் வைத்து, அதன் மூலமாக அதற்கான அனுமதியை அவர்கள் பெற வேண்டும். மற்ற துறைகளுக்கு உரிய மானியக்கோரிக்கைகளுக்கு இந்த கூட்டம் நடந்ததா என்றால் இல்லை. வழக்கமாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டால் சனி ஞாயிறு விடுமுறை தவிர்த்து தொடர்ந்து 3௦ நாட்கள் கூட்டம் நடைபெறும். ஆனால், ஐந்தே நாட்களில், கூட்டம் முடிக்கப்பட்டு, அதை தடைசெய்து மானிய கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை. இப்போது ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் இரண்டு மூன்று நாட்களாக புதுசு புதுசா அறிவிப்புகள் எல்லாம் வந்துகொண்டிருக்கின்றன. 

110 அறிக்கையை சட்டமன்ற விதியைப் பயன்படுத்தி தாக்கல் செய்தார்களே. அதில் 5 சதவிகிதமாவது நிறைவேற்றியிருக்கிறார்களா என்றால் இல்லை. அப்படி அவர்கள் நிறைவேற்றிதாக நிரூபித்தால் நான் அரசியல் வாழ்விலிருந்து விலகிப் போக தயார். 

ஜெயலலிதா அவர்கள் 6 மாதத்துக்குள் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தேடுக்கப்பட வேண்டும். அப்படி இல்லையென்றால், அவர் முதல்வர் பதவியில் தொடர முடியாது. அதற்காக ஆர்.கே. நகர் எம்.எல்.ஏ-வை தேடிப்பிடிக்கிறார்கள். அவர் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு சட்டமன்ற செயலரை சந்தித்து தான் ராஜினாமா செய்வதாக எழுதிக்கொடுக்கிறார். இதுபற்றி 11 மணிக்கெல்லாம் கெஸட்டில் செய்திக்குறிப்பு வெளியாகிவிட்டது. ஆனால், ஜெயலலிதா பதவி பறிபோனபோது, அந்தப் பொறுப்பு காலியாக இருக்கிறது என்று சட்டமன்ற செயலர் உடனே செய்தி வெளியிட்டரா என்றால் இல்லை. இப்போது வெளியிட்டிருக்கிறார். அதேபோல், அப்போது 10 நாளில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதா? இல்லை. அதுவே இப்போது 10 நாளைக்குள் இடைத்தேர்தல் அறிவிக்கப்படுகிறது. 

இதைவைத்து பார்க்கும்பொழுது உயர்நீதிமன்றம் மட்டுமல்ல, தேர்தல் கமிஷனும் அவர்களுக்கு துணை நிற்கிறதோ என்ற அச்சம் இன்று மக்கள் மத்தியில் இருக்கிறது. அதனால் இந்த இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தலைவர் கலைஞர் விளக்கமாக அறிக்கை வெளியிட்டார். 

ஆக, இப்படிப்பட்ட ஆட்சிதான் இன்று நடந்துகொண்டிருக்கிறது. இந்த ஆட்சியில் மாற்றுத்திறனாளிகள் சத்துணவு ஊழியர்கள், அரசு ஊழியர்கள், போக்குவரத்துத்துறை ஊழியர்கள், ஆசிரியர்கள்,  அறநிலையத்துறை ஊழியர்கள், மக்கள் நலப்பணியாளர்கள்  என எல்லோரும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.  அரசியல் கட்சியை சேர்ந்த நாம் ஒரு பக்கம் போராடிக் கொண்டிருக்கிறோம்.  அது மட்டுமல்லாமல் மக்களே குடி நீருக்காக, சாலை வசதிக்காக, மின்சாரப் பிரச்சனைக்கு சாலைமறியல் போராட்டம் நடத்தும் அவலம் இன்று தமிழ்நாட்டில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.  

தி.மு.க. ஆட்சியில் ஒரு மாத காலத்தில் எந்த தேதியிலும் ரேஷன் கடைக்கு சென்று எந்தப் பொருளையும் பெற்றுக்கொள்ளலாம். ஆனால், இன்றைய ஜெயலலிதா ஆட்சியில், குறிப்பிட்ட 3 நாளைக்கு மட்டும்தான் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். அதற்கு பிறகு போனால் அந்தப் பொருள்களும் கிடையாது. 

முதியோர் உதவி திட்டத்தை கலைஞர் அவர்கள் கொண்டு வந்து நிறைவேற்றினார். இன்றைக்கோ அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் மையமாக வைத்து மக்கள் இன்று சாலைக்கு வந்து போராடிக்கொண்டிருக்கிறார்கள். அந்த போராட்டங்களுக்கெல்லாம் மதிப்பளிக்கக்கூடிய ஆட்சி இன்று தமிழகத்தில் இல்லை. உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் இந்த ஆட்சியை கண்டிக்கின்றன. சகாயத்தை நியமிக்காததற்கு 10,000 ரூபாய் அபராதம் விதித்தது உயர்நீதிமன்றம். 
அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ்நாட்டை மின்வெட்டு இல்லாத மாநிலமாக மாற்றுவேன் என்று சட்டமன்றத்தில் ஜெயலலிதா சொன்னார்.  ஆனால் அப்படி நிகழ்ந்ததா என்றால் இல்லை. வீடு கட்ட 1 லட்சம் மானியம் 1 லட்சம் ரூபாய் என்று ஜெயலலிதா அறிவித்தாரே யாருக்காவது அது கொடுக்கப்பட்டதா. இல்லை. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு 20 லிட்டர் குடிநீர் இலவசம் என்று அறிவித்தார்களே யாருக்காவது கொடுத்தார்களா இல்லை. இந்தியாவிலேயே குடிநீர் விற்கக்கூடிய அரசு வேறு எங்கும் கிடையாது. ஆனால் இங்கு அம்மா என்ற பெயரில் 10 ருபாய்க்கு குடிநீர் விற்றுக் கொண்டிருக்கிறார்கள். இந்த குடிநீரிலிருக்ககூடிய வெட்கக்கேடான ஒரு சூழல் ஜெயலலிதா ஆட்சியில் தான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட அக்கிரம ஆட்சிக்கு ஓராண்டுக்குள் வரவிருக்கும் தேர்தலில் நீங்கள் வழங்க வேண்டிய தீர்ப்பு பாடம் புகட்ட, புத்தி புகட்ட வேண்டும். அதற்கு நீங்கள் அத்தனை பேரும் துணை நிற்க வேண்டும் என்று உங்களையெல்லாம் நான் அன்போடு கேட்டுக் கொண்டு, இந்த நல்ல வாய்ப்புக்கு நன்றி கூறி, விடைபெறுகிறேன். நன்றி! வணக்கம்!!

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

ad

ad