புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மே, 2015

வித்தியா விடயத்தில் நீதி நிலைநாட்டப்படாதுபோனால் மக்களுடன் இணைந்து அரச நிர்வாகங்கள் அனைத்தையும் முடக்கவேண்டிவரலாம் – புங்குடுதீவில் கஜதீபன் தெரிவிப்பு

புங்குடுதீவு படுகொலை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் மிகவும் சுதந்திரமான முறையில் புங்குடுதீவிலிருந்து
வெளியேறி கொழும்புவரை சென்றிருப்பதாகவும், அவர் வெளிநாடு ஒன்றுக்கு தப்பிச்செல்ல இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
அதிலும் குறிப்பாக கொழும்பிலிருந்து திடீரென யாழ்ப்பாணத்துக்கு வந்த பிரபல சட்டத்தரணியும், சட்ட விரிவுரையாளருமான வி.ரி.தமிழ்மாறன் இதில் நேரடியாகவே தலையீடு செய்துள்ளதாக அப்பகுதி மக்கள் பகிரங்கமாக தன்னிடம் குற்றம் சுமத்தியுள்ளனர் என வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்தார்.
இன்று 19.03.2015 செவ்வாய்க்கிழமை புங்குடுதீவு சர்வோதயத்தில் இடம்பெற்ற பொலிசாருக்கும், பொது மக்களுக்கும் இடையிலான சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் இந்நாட்டின் நீதித்துறை இவ்வளவு தானா? என்கின்ற மிகப்பெரிய கேள்வியை மக்கள் மிகவும் அங்கலாய்ப்புடன் கேட்டுக்கொண்டுள்ளனர்.நடந்த கொடுமை உலகில் யாருக்கும் நடக்கக்கூடாத கொடுமை.
அப்படியான ஒன்றுக்காக இதை இழைத்தவர்கள் மனிதர்களே அல்ல என மக்கள் கொந்தளிக்கும் நிலையில், இந்த கொடூரமான குற்றமிழைத்தவர்கள் என அடையாளம் காணப்பட்டவர்களுக்காக சட்டத்தரணிகள் எவருமே ஆஜராகக்கூடாது என்பதான கோஷங்கள் பல்வேறு தரப்பிலிருந்தும் பெருமளவில் எழ ஆரம்பித்திருக்கும் இந்த நேரத்தில், அந்த மண்ணிலேயே பிறந்ததாக கூறப்படும் பிரபல சட்டத்தரணியான இவர், என்ன நோக்கத்துடன் இவ்வாறான இழிசெயலுக்குத்துணை போகிறார் என அப்பகுதி மக்கள் கோபத்துடன் தெரிவித்துள்ளதுடன், அவர் கட்டாயம் இதற்கான பதிலை வழங்க வேண்டும் என கொந்தளிப்புடன் என்னிடம் வலியுறுத்தியுள்ளனர்.
இப்போது பிரதிப்பொலிஸ்மா அதிபர், சம்பந்தப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர், நாட்டைவிட்டு செல்லமுடியாதவாறு தடுக்கப்பட்டு கொழும்பில் கைது செய்யப்பட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார். அவர் உடனடியாகவே யாழ்ப்பாணத்துக்கு கொண்டுவரப்பட்டு சரியான முறையில் நீதி விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர். அது நிறைவேற வேண்டும்.
இக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படாது போனால் மக்களுடன் இணைந்து அரச நிர்வாகங்கள் அனைத்தையும் ஸ்தம்பிக்கச்செய்யவேண்டிய துர்ப்பாக்கியமான ஒரு சூழ்நிலை ஏற்படலாம் அதற்கு இடங்கொடுக்காமல் நீதி நிலைநாட்டப்படவேண்டும் என வேண்டுகோளை விடுக்க விரும்புகின்றேன். என அவர் தெரிவித்தார்.

ad

ad