புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஜூன், 2015

சென்னை விமான நிலையத்தில் 5 கோடி தங்கத்தை கொள்ளையடிக்க முயற்சி



சென்னை சவுகார் பேட்டை திருப்பள்ளி தெருவில் ஜெய் மாதா கூரியர் சர்வீஸ் என்ற நிறுவனம் செயல்படுகிறது. சவுகார் பேட்டையைச் சேர்ந்த நகை வியாபாரிகள் இந்த நிறுவனம் மூலம் மும்பைக்கு தங்கம் அனுப்பி வைப்பது வழக்கம்.

வழக்கம் போல் நேற்று இரவு 10 கிலோ தங்கம் மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சவுகார்பேட்டை கூரியர் அலுவலகத்தில் இருந்து மாருதி காரில் மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர். 10 கிலோ தங்கத்தை ஒரு பெட்டியில் வைத்து பார்சலாக கட்டி இருந்தனர். அதற்கு உரிய ஆவணங்களும் கொண்டு சென்றனர்.

சவுகார்பேட்டையைச் சேர்ந்த டிரைவர் வீரேந்திரர் காரை ஓட்டினார். அவருடன் பாதுகாப்புக்காக ரத்தன், சந்தீப் ஆகியோர் சென்றனர். இவர்கள் அனைவரும் கூரியர் நிறுவனத்தில் பணி புரிபவர்கள்.

நள்ளிரவு 11.15 மணி அளவில் கார் சைதாப்பேட்டையில் சென்று கொண்டு இருந்தது. அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் வந்து கார் மீது மோதி வழிமறித்து நிறுத்தினர். அவர்கள் டிரைவரிடம் சென்று ஏன் சிறுமி மீது மோதி விட்டு நிற்காமல் வந்தாய்? என்று கூறி தகராறு செய்தனர். திடீர் என்று டிரைவரை சரமாரியாக தாக்கினார்கள்.

உடனே காரில் இருந்த மற்ற 2 பேர் இறங்கி வந்தனர். அவர்களையும் கும்பல் தாக்கியது. 6 பேரும் கொள்ளை கும்பல் என்பதை உணர்ந்த டிரைவர் வீரேந்தர்சிங் போலீசுக்கு தகவல் கொடுத்தார். அப்போது ரோந்துப் பணியில் ஈடுபட்ட சைதாப்பேட்டை சப்–இன்ஸ்பெக்டர் தேவேந்தர், போலீஸ்காரர் விக்ரம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

அதே சமயம் கொள்ளையர்கள் காரில் இருந்த 10 கிலோ தங்கத்தை பெட்டியுடன் தூக்கிச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்குள் போலீஸ் அங்கு வந்து விட்டது. போலீசைப் பார்த்ததும் கும்பல் தப்பி ஓடியது. அவர்களில் ஒருவனை போலீசார் துரத்திச் சென்று மடக்கி பிடித்தனர்.

 அவன் சூளைமேட்டைச் சேர்ந்த செந்தில் என்று தெரிய வந்தது. விசாரணையில் பாரிமுனையைச் சேர்ந்த கவுசிக் என்ற அகமது தலைமையில் செயல்படும் கும்பல்தான் இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து செந்தில் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் இரவோடு இரவாக செயல்பட்டு வடபழனி செல்வகுமார், சூளை அசோக்குமார், கோடம்பாக்கம் பிரசாத், மணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

தொடர்ந்து கும்பல் தலைவன் கவுசிக்கும் போலீசில் சிக்கினான். இந்த கும்பலைச் சேர்ந்த டக்ளஸ் என்பவன் தப்பி விட்டான். அவனை போலீசார் தேடி வருகிறார்கள்.

இதற்கிடையே காரில் தங்கத்துக்கு பாதுகாப்பாக வந்த சந்தீப் என்பவனும் தலைமறைவாகி விட்டது தெரிய வந்தது. அவனுக்கும் கொள்ளை கும்பலுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

சந்தீப்தான் தங்கம் கொண்டு செல்லப்படும் தகவலை கொள்ளை கும்பலுக்கு ரகசியமாக தெரிவித்து இருக்கிறான். அதன்படி சினிமா பாணியில் 6 பேர் கும்பல் வந்து தாக்குதல் நடத்தி கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.   இரவு ரோந்து போலீசார் தக்க சமயத்தில் துரிதமாக அங்கு வந்து விட்டதால் 10– கிலோ தங்கம் தப்பியது. அதன் மதிப்பு ரூ.5 கோடி இருக்கும்.

கும்பல் பிடிபட்ட தகவல் கிடைத்ததுமே கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் ஆபாஷ்குமார், தென்சென்னை இணை கமிஷனர் அருண், அடையாறு துணை கமிஷனர் கண்ணன் ஆகியோர் நள்ளிரவில் சம்பவ இடத்துக்கு வந்து தப்பிய மற்ற கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

ad

ad