புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜூன், 2015

சுவிஸில் நடைபெற்ற தமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி


'எமது போராட்டவாழ்வின் உண்மைகளைக் கலை, இலக்கியப் படைப்புக்கள் தரிசித்து நிற்க வேண்டும்." - தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்.
தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு வலுச்சேர்த்த அனைத்துக்கலைஞர்களின் நினைவாக தமிழர் நினைவேந்தல் அகவம் சுவிஸ் நடாத்திய எழுச்சிக்குயில் 2015 தமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி நிகழ்வு மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது. நிகழ்வின்; முதல் அம்சமாக போட்டியில் பங்குபற்றிய அனைத்துக்குயில்களையும், நடுவர்களையும், கலைபண்பாட்டுக்கழக கலைஞர்களையும், அறிவிப்பாளர்களையும் செங்கம்பள வரவேற்புடன் தமிழர் நினைவேந்தல் அகவத்தின் செயற்பாட்டாளர்களும், சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர்களும் இணைந்து தேசியக்கொடி, தேசிய சின்னங்கள் தாங்கியவாறு அரங்கிற்கு அழைத்துவந்த போது வருகைதந்திருந்த மக்கள் இருமருங்கிலும் அணிவகுத்துநின்று கரவொலி எழுப்பி வரவேற்ற காட்சி எல்லோர் மனங்களையும் ஈர்த்திருந்தது.
பொதுச்சுடரேற்றல், தேசியக்கொடியேற்றல் என எழுச்சி நிகழ்வுக்குரிய அனைத்து அம்சங்களுடனும் காலை 10:30 மணிக்கு ஆரம்பமாகிய எழுச்சிக்குயில் 2015 நிகழ்வு காந்தள் எழுச்சிக்குயில், செண்பகம் எழுச்சிக்குயில், வாகை எழுச்சிக்குயில், சிறுத்தை எழுச்சிக்குயில், வளர்ந்தோர் எழுச்சிக்குயில், இணை எழுச்சிக்குயில் என ஆறு பிரிவுகளாக இடம்பெற்றது. மண்டபம் நிறைந்த தமிழ் இன உணர்வாளர்களுடன் கலைபண்பாட்டுக்கழகத்தின் பின்னணி இசையில் நடைபெற்ற எழுச்சிக்குயில் போட்டியில் பங்குபற்றிய அனைத்துப் போட்டியாளர்களுக்கும் நினைவுப்பரிசில்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.
நிகழ்வில் தமிழகத்திலிருந்து ஐரோப்பாவுக்கு வருகைதந்திருந்த தமிழக வாழ்வுரிமைக்கட்சியின் நிறுவனரும், தமிழ் இன உணர்வாளருமாகிய திரு. வேல்முருகன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்ததோடு, அவரின் சிறப்புரையும் இடம்பெற்றது. அவர் தனது உரையில் தமிழீழ விடுதலை என்பது அடுத்த கட்டத்திற்கு நகர்த்தப்படவேண்டுமாயின், எமது இளந்தலைமுறையினர் தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் அவசியத்தை உணர்ந்தவர்களாக வளர்த்தெடுக்கப்படவேண்டும். இத்தகைய எழுச்சி நிகழ்வுகள் மூலம் சாத்தியமாக்கப்படுவதோடு, புதியதொரு நம்பிக்கையையும் தந்திருக்கிறது என்று கூறினார்.
அனைத்துப்பிரிவுகளிலும் பங்குபற்றிய போட்டியாளர்களில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப்பெற்ற வெற்றியாளர்களுக்கு பரிசில்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டதோடு, காந்தள் எழுச்சிக்குயில், செண்பகம் எழுச்சிக்குயில், வாகை எழுச்சிக்குயில், சிறுத்தை எழுச்சிக்குயில், வளர்ந்தோர் எழுச்சிக்குயில் ஆகிய ஐந்து பிரிவுகளிலும் இருந்து தெரிவுசெய்யப்பட்ட வெற்றியாளர்களில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற செல்வி றதுக் ரவிசிங் அவர்கள் எழுச்சிக்குயில் 2015 விருதைப்பெற்றுக்கொண்டார். அவருக்கு எழுச்சிக்குயில் 2015 விருதும், வெற்றிக்கிண்ணமும், தமிழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றத்தை சென்று பார்வையிடுவதற்கான விமானப்பயணச்சீட்டும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.
இறுதியாக தமிழீழத்தேசியக்கொடி இறக்கப்பட்டு, 'தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்" என்ற எமது தாரக மந்திரத்துடன் நிகழ்வு நிறைவெய்தியது.
சுவிஸ் வாழ் தமிழீழ மக்களின் பேராதரவுடன், சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் அனுசரணையுடன் மிகுந்த உணர்வெழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்ற எழுச்சிக்குயில் 2015 நிகழ்விற்கு நிதிஅனுசரணை வழங்கிய வர்த்தகப்பெருமக்களுக்கும் நுண்கலை ஆசிரியர்களுக்கும், ஒத்துழைப்புக்களையும் உதவிகளையும் வழங்கிய தமிழ் இன உணர்வாளர்களுக்கும் தமிழர் நினைவேந்தல் அகவம் சுவிஸ் தனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறது. அத்தோடு, போட்டியில் பங்குபற்றிய அனைத்துப் போட்டியாளர்களுக்கும் வாழ்த்துக்களையும், பெற்றோர்களுக்கு பாராட்டுக்களையும் தெரிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது.

ad

ad