புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஜூன், 2015

புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் புலிகள் அல்லர் : இலங்கையின் வளர்ச்சிக்கு பங்காற்ற அவர்களும் ஆவலாக இருக்கின்றனர் : சம்பந்தன்


புலம்பெயர் தமிழர்கள் அனைவருமே புலிகளும் அல்லர். அவர்களில் முதலீட்டாளர்கள், கல்விமான்களும் இருக்கின்றனர். அவர்கள் எமது நாட்டில் முதலீடு செய்வதற்கு  தமது அறிவு, புலமை, நீதி ஆகியவற்றைப் பயன்படுத்துவதற்குத் தயாராக இருக்கின்றனர். 
 
வடக்கில் மட்டுமல்லாது முழு நாட்டிலும் முதலீடுகளை செய்து இந்நாட்டினை அபிவிருத்தி செய்ய அவர்கள் விரும்புகின்றனர். என்று  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார். 
 
புலம்பெயர் தமிழர்கள், ஐக்கிய இலங்கைக்குள் செயற்படவே விரும்புகின்றனர். ஆனால், அவர்களைப் புலிகள் என்று சித்தரித்து அவர்கள் இலங்கைக்கு திரும்புவதையும் முதலீடுகளை மேற்கொள்ள முற்படுவதையும் தடுக்கிறீர்கள்.
 
 சமூகப் பொறுப்புள்ளவர்களை இந்நாட்டிற்குள் அனுமதிக்க மறுக்கின்றீர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
 
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தால் வெளியிடப்பட்டதான சர்வதேச பாதுகாப்பு தொடர்பில் 2014ஆம் ஆண்டுக்கான அறிக்கை குறித்து பேராசிரியர் ஜி. எல். பீரிஸினால் கொண்டு வரப்பட்ட ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். 
 
அவர் மேலும் கூறுகையில்இ 
 
சர்வதேச ரீதியில் இன்னும் புலிகள் இயங்கி வருவதாகக் கூறுகின்றனர். இது ஒரு புதிய விடயமல்ல. இதனை நாமும் அறிந்தே வைத்திருக்கின்றோம். இருந்த போதிலும் பிரிக்கப்படாத ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கு தீர்வு ஒன்று வேண்டும் என்பதை வலியுறுத்தியே கடந்த அனைத்து தேர்தல்களிலும் எமது மக்கள் வாக்களித்து வந்துள்ளனர். 
 
நாம் முன்னைய அரசுடன் 18 சுற்றுப் பேச்சுகளை மேற்கொண்டிருந்தோம். இருப்பினும் எந்தவித முடிவும் இன்றிய நிலையில் அவர்களே அந்த பேச்சுக்களை முறித்துக் கொண்டனர்.
 
 சர்வதேசத்துக்கு எடுத்துக்காட்டாக நடந்து கொள்ளாமைக்காக அன்றைய ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும். உள்ளக விசாரணை ஒன்றையே 2012, 2013 மற்றும் 2014 ஆகிய திகதிகளில் சர்வதேச மனித உரிமைப் பேரவையில் சர்வதேச நாடுகளின் கோரிக்கையாக இருந்தது. 
 
எனினும், முன்னைய அரசு அதனை செயற்படுத்தாத காரணத்தால்தான் சர்வதேச விசாரணை ஒன்றுக்கு தள்ளப்பட்டுள்ளது.
 
 அக்காலப்பகுதிகளில் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான விடயங்களை அன்றைய பெருந்தோட்ட அமைச்சர் நிறைவேற்றிக் கொண்டிருந்த வேளை அப்போது வெளிவிவகார அமைச்சராக இருந்த பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் பின்வரிசையில் அமர்ந்திருந்ததையிட்டு வெட்கப்படுகின்றேன்.
 
 இப்படியான தகுதியற்றவரான பீரிஸ் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அறிக்கை தொடர்பில் பேசுவதற்கோ எமது நாட்டினதும் மக்களினதும் இறைமை பற்றி பிரஸ்தாபிப்பதற்கோ எந்த அருகதையும் அற்றவர் என்பதையும் கூறிக் கொள்கின்றேன். 
 
சி.வி.விக்னேஸ்வரன் வடக்கு மாகாணத்தின் முதலமைச்சர். அவர் தனது நிர்வாகப் பிரதேசத்திலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என்று கூறுவதற்கு அனைத்து உரிமையும் கொண்டிருக்கிறார். அவர் அவ்வாறு கூறுவதால் சி.வியை விடுதலைப் புலியாக சித்திரிக்க சிலர் முயற்சிக்கின்றனர். 
 
இவர்கள் இந்நாட்டில் ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் புலிகள் என்றும் அச்சுறுத்தல்காரர்கள் என்றும் சர்வதேசத்துக்கு சித்தரித்துக் காட்ட முயற்சிக்கின்றனர். 
 
இவர்கள் தொடர்பில் நான் அலட்டிகொள்ளவில்லை. ஆனால், நாட்டில் பிரச்சினைகளை உருவாக்க வேண்டாம் என்று கூறிக்கொள்கிறேன். இந்நாட்டில் வாழும் சகலருக்கும் சமத்துவம் இருக்க வேண்டும். அப்படி இல்லாதுவிடின் இறைமைபற்றி பேசுவதற்கு எவருக்கும் அருகதை இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

ad

ad