புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஜூன், 2015

கோதரி கனிமொழிக்கு ஒரு மனம்திறந்த மடல்!புகழேந்தி

வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தொடர்பாக தி.மு.க.வின் மாநிலங்களவை உறுப்பினரான கனிமொழிக்கு ஒரு மனம் திறந்த மடல்.
அன்புச் சகோதரி கவிஞர் கனிமொழி அவர்களுக்கு, வணக்கம்.
2009ல் ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்குப் பின், சர்வதேச அளவில் ஈழத்துச் சகோதரிகளின் ஈடுஇணையற்ற அடையாளமாகவே இனம்காணப்படுபவர்,  வட மாகாண சபை உறுப்பினரான சகோதரி அனந்தி சசிதரன்.
ஈழத்து உறவுகளால் நேரடியாகத் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதியான அனந்தி தெரிவித்துள்ள செய்தி தொடர்பாக, உங்களிடம் நான் சில வார்த்தைகள் பேச வேண்டியிருக்கிறது.
இந்தச் செய்தி குறித்து முதல் முதலில் எழுதியவன் என்கிற அடிப்படையில், இதுகுறித்துப் பேசியாக வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. (2014 ஜனவரியில் இதுகுறித்து நான் எழுதிய கட்டுரை தமிழக அரசியலில் வெளியாகியிருந்தது.)
சர்வதேச நியதிகளின் அடிப்படையில், வெள்ளைக்கொடியுடன் சரணடையும் முடிவை விடுதலைப் புலிகள் எடுக்கும் முன், தனது கணவரும் விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் பிரிவு பொறுப்பாளருமான எழிலன் என்கிற சசிதரன் உங்களிடம் செயற்கைக்கோள் தொலைபேசி வாயிலாகப் பேசினார் - என்று அனந்தி தெரிவித்திருப்பது ஒரு தகவல் மட்டுமே! அது உங்கள் மீதான குற்றச்சாட்டு அல்ல!
அனந்தியின் அந்தத் தகவலுக்கு இப்போது அவசர அவசரமாக உங்கள் தரப்பிலிருந்து வெளிவந்திருக்கும் மறுப்பைப் பார்க்கும்போது, அதை ஒரு குற்றச்சாட்டாகவே நீங்கள் எடுத்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.
இது தொடர்பாக சென்ற ஆண்டு தொடக்கத்தில் இதே பகுதியில் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதியை அப்படியே இங்கே தருகிறேன்.
"எழிலன் உள்பட பெருந்திரளானோர் சரணடைந்தது மே 17ம் திகதி. அதற்கு முன்தினம், 16ம் தேதி இரவில், தி.மு.க.வின் மாநிலங்களவை உறுப்பினரான கனிமொழியிடம் பேசியிருக்கிறார் எழிலன்.
அப்போது, அரசு சார்பிலேயே தான் பேசுவதாக கனிமொழி தெரிவித்திருக்கிறார். இராணுவத்திடம் சரணடைந்து விடுங்கள். இலங்கை அரசிடம் பேசி, உங்களுக்குப் பொது மன்னிப்பு கிடைக்க ஏற்பாடு செய்கிறோம்.
இதுதொடர்பாக ஐ.நா. மற்றும் மூன்று நாடுகளின் பிரதிநிதிகளுடன் பேசிக்கொண்டிருக்கிறோம்' என்பது அலைபேசி வாயிலாக கனிமொழி தெரிவித்த தகவல். கனிமொழியுடன் எழிலன் பேசியபோது, அருகிலேயே இருந்திருக்கிறார் அனந்தி.
'பெருந்திரளானவர்கள் இராணுவத்திடம் சரணடைந்தனர். அரசோ, அப்படி எதுவும் நடக்கவேயில்லை என்பதுபோல அதை முழுமையாக மூடி மறைக்கப் பார்க்கிறது. அவர்கள் சரணடைந்தது ஐ.நா.வுக்கும் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் நன்றாகத் தெரியும்.
அமெரிக்காவின் ரோபர்ட் பிளேக் உட்பட அனைவருக்கும் எல்லா விவரங்களும் தெரிவிக்கப்பட்டிருந்தன. இன்னும் சொல்லப்போனால், சரணடைந்தவர்கள் எவ்வளவு பேர் என்பதைக்கூட அவர்கள் அறிவார்கள். இப்போது அவர்கள் மௌனம் சாதிப்பது ஏன்' என்று வேதனையுடன் கேட்கிறார் அனந்தி.
எழிலன் இராணுவ வாகனத்தில் ஏற்றப்படுவதை நாங்கள் பார்த்துக் கொண்டிருந்ததைப் போல், எவ்வளவோ சகோதரிகள் தங்கள் கணவர் அல்லது சகோதரர் வாகனத்தில் ஏற்றப்படுவதைக் கண்ணீரோடு பார்த்துக் கொண்டிருந்தனர்.
அவர்கள் எங்கே என்பது தான் எங்கள் கேள்வி' என்கிறார் அனந்தி. இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கக் கூட சிங்கள மிருகங்கள் மறுப்பது கொடுமை. பொறுப்பேற்றுக் கொள்வதாகக் கூறிய அத்தனைப்பேரும் மௌனம் சாதிப்பது அதைக்காட்டிலும் கொடுமை.
தமிழக அரசின் சார்பில் கனிமொழி கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற - திராவிட முன்னேற்றக் கழக அரசு சார்பில் முயற்சி ஏதாவது எடுக்கப்பட்டதா? கொழும்பு அலரி மாளிகையில் மகிந்த மிருகத்தை நேரில் சந்தித்தபோதாவது, குறைந்தபட்சம் அவரிடம் பரிசுப் பொருளைப் பெறும்போதாவது, 'சரணடைந்தவர்கள் எங்கே' என்று கேட்டாரா கனிமொழி? பாஸ்பரஸ் வெளி - ஆகிவிட்ட முள்ளிவாய்க்காலின் காற்றுவெளிகளில் கலந்து கனிமொழியின் வாக்குறுதியும் மௌனித்து விட்டதா?
சரணடைந்தவர்களுக்கான சர்வதேசச் சட்டங்கள் இருக்கின்றன. அந்தச் சட்டங்களை இலங்கை காற்றில் பறக்க விடுகிறது. சரணடைந்தவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை, அவற்றைக் கொடுத்தவர்கள் காற்றில் பறக்க விடுகிறார்கள். இன்றுவரை, சரணடைந்தவர்கள் உயிருடன் இருக்கிறார்களா, இல்லையா என்பதே தெரியவில்லை....."
இது, 2014 ஜனவரியில் வெளியான கட்டுரையின் ஒரு பகுதி. இதில் அனந்தி சொன்ன தகவலும் இருந்தது, என்னுடைய கேள்விகளும் இருந்தன. அப்போது இதுதொடர்பாக மறுப்பு எதையும் நீங்கள் தெரிவிக்கவில்லை கனிமொழி! இத்தனைக்கும், 'சென்ற ஆண்டு இப்படியொரு கட்டுரை வெளியானதை நான் அறியவேயில்லை' என்று நீங்கள் சொல்லிவிடவும் முடியாது.
அந்தக் கட்டுரை வெளியான மறுநாளே, இன்றைக்கும் நான் உயர்வாய் மதிக்கிற உங்கள் குடும்ப நண்பர் ஒருவர், அலைபேசி வாயிலாக என்னிடம் பேசினார். கட்டுரை தொடர்பான தன்னுடைய கண்டனத்தையும் கோபத்தையும் நயத்தகு நாகரிகத்துடன் என்னிடம் அவர் வெளிப்படுத்தினார்.
அவரும் கண்ணியத்தின் எல்லையைக் கடக்கவில்லை. நானும், என்னுடைய கடமையை அவருக்குத் தெரிவிக்காமல் இருக்கவில்லை.
இப்போது நீங்கள் வெளியிட்டுள்ள மறுப்பில், எழிலன் யாரென்பதே உங்களுக்குத் தெரியாதென்றும், எழிலன் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியத் தலைவரில்லை என்றும் கூறியிருக்கிறீர்கள்.
இதுகுறித்து நான் எதையும் கேட்க விரும்பவில்லை. இலங்கை அரசின் சட்டவிரோதக் காவலில் தான், எழிலனும் ஈழத்துக் கவிப்புயல் புதுவை ரத்தினதுரையும் இருப்பதாக நான் உறுதியாக நம்புகிறேன்.
சட்டவிரோதக் காவலில் இருந்து எழிலன் வெளிவருகிறபோது, நீங்கள் சொல்வது எவ்வளவு தூரம் மெய் அல்லது பொய் என்பதும் கூடவே வெளிவரும்.
உங்களது இப்போதைய மறுப்பு தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்போது அனந்தி கேட்டிருக்கும் ஒரு அர்த்தமுள்ள கேள்வியை மட்டும் உங்கள் முன் வைக்கிறேன்.
"எழிலன் ஒன்றும் புலிகள் அமைப்பின் முக்கியத் தலைவர் இல்லை என்று சொல்கிறீர்களே.... 'புலிகள் அமைப்பின் முக்கியத் தலைவர்களுடன்தான் நான் பேசினேன்' என்று அதற்கு பொருள் கொள்ளலாமா" - என்று அனந்தி இப்போது கேட்கிற கேள்விக்கு எப்போது நீங்கள் பதில் சொல்லப் போகிறீர்கள்?
என்னைப் பொறுத்த வரை, உங்களுடைய மறுப்பின் இறுதிப் பகுதி பற்றி மட்டும்தான் நான் உங்களிடம் பேச வேண்டியிருக்கிறது.
"போர் உச்சத்தில் இருக்கும்போது, இலங்கை ராணுவத்திடம் சரணடையும்படி யாராவது சொல்வார்களா" - என்பது உங்களது முத்தாய்ப்பான கேள்வி. இந்தக் கேள்வி இன்றைய சூழலில் (போர் முடிந்து ஆறு ஆண்டுகள் முடிவடைந்த பிறகு) நியாயமென்றே தோன்றுகிறது.
அனந்தியைப் பார்த்து 'இன்றைக்கு' இப்படிக் கேட்கிற நீங்கள், "போர் உச்சத்தில் இருக்கிறபோதே, இலங்கை தன்னுடைய தாக்குதலை நிறுத்திக் கொண்டதாக அறிவிக்கிறீர்களே... இது நியாயமா" என்று, 'அன்றைக்கு' முதல்வராக இருந்த உங்கள் தந்தையிடம், அப்படி அவர் அறிவித்தபோது ஒரு வார்த்தை கேட்டிருக்கிறீர்களா?
நடப்பது போர் கிடையாது, திட்டமிட்ட இனப்படுகொலை - என்பதை 2009லேயே உணர்ந்த மனசாட்சியுள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு நொடியும் துடித்தோம். விடுதலைப்புலிகள் - என்கிற அந்த நிஜமான விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு ஆயுதம் வருகிற எல்லா வழிகளுக்கும், உங்கள் தந்தையின் எஜமானராயிருந்த சொக்கத் தங்கம் 'சீல்' வைத்தது.
மீறிவந்த ஆயுதக் கலங்கள் 'சொக்கப்பனை' போன்று கொளுத்தப்பட்டன. இதெல்லாம், போகிற போக்கில் புகழேந்தி சேறுவாரி இறைப்பதல்ல... நாடாளுமன்றத்தின் மக்களவையில் தாராளமாக வெளியான தகவல்கள் இவை.
ஆயுதங்கள் எதுவுமில்லாமல் நிராயுதபாணிகளாக்கப்பட்ட அந்த விடுதலைப் போர் வீரர்களுக்கும், துரோக இந்தியா உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட நாடுகள் வாரிவழங்கிய ஆயுதங்களுடன் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்திய சிங்கள மிருகங்களுக்கும் இடையே 'போர்' தான் நடக்கிறது என்று புளுகியவர்களுடைய நோக்கம், அங்கே நடந்துகொண்டிருந்த இனப்படுகொலையை மூடிமறைக்க வேண்டும் என்பது மட்டும்தான்!
வேறு நோக்கம் ஏதாவது அதற்கு இருக்க முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
சர்வதேசம் எப்படியாவது தலையிடும் - என்று புலிகள் நம்பினார்கள். அதுவரை இலங்கை ராணுவத்தின் முன்னேற்றத்தை நிதானப்படுத்துவதற்காகத்தான், தங்களிடமிருந்த மிக மிகக் குறைந்த அளவிலான ஆயுதபலத்தைப் பயன்படுத்தினார்கள்.
இந்த உண்மையை, புலிகளை நேசிக்கிற நீங்களும் உங்களது உண்மையான நண்பர்களும் மறுக்க மாட்டீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன், கனிமொழி!
இனப்படுகொலை நடந்துகொண்டிருந்த சமயத்தில் 'மாண்புமிகு முதல்வர்' அரியணையில் அமர்ந்திருந்தவர் உங்கள் தந்தை கருணாநிதி தான்! அதைத் தடுத்து நிறுத்துவதற்கான நெருக்கடி எதையும் மத்திய அரசுக்கு அவர் கொடுக்கவில்லை என்பதைத் தெரிந்துகொள்ள 'விக்கி லீக்ஸ்' எல்லாம் எதற்கு?
அதைத்தானே 2009லிருந்து நாங்கள் ஒவ்வொருவரும் கூறிவருகிறோம். பதவி நாற்காலியில் உங்கள் தந்தை ஒட்டிக்கொண்டிருந்தபோதே இந்தக் குற்றச்சாட்டைத் தானே மீண்டும் மீண்டும் எழுப்பினோம்...... உங்கள் தந்தையாலோ உங்களாலோ எப்போதாவது அதை அழுத்தந் திருத்தமாக மறுக்க முடிந்திருக்கிறதா?
எடுத்த எடுப்பில் உங்கள் தந்தை வேறுமாதிரி காய் நகர்த்திப் பார்த்தார். இலங்கை தன்னுடைய இன அழிப்பு வேலையை அதிரடியாக நிறைவேற்றி முடித்துவிடும்.... அதுவரை சைலன்ட் மோடுக்குப் போய்விடலாம்..... என்று மருத்துவமனையில் போய்ப் படுத்துக்கொண்டார்..... உங்களுக்கு அது நினைவிருக்கிறதா இல்லையா?
உண்மையிலேயே முதல்வருக்கு உடல் நலக் குறைவுதான் - என்றால், அவருக்கு பதில் ஆட்சி நிர்வாகத்தைக் கவனித்தவர்கள் நடந்த இனப்படுகொலையைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமே.... எடுத்தார்களா?
இந்தியத் திருநாட்டின் கள்ளத்தனத்தால் சற்றேறக்குறைய நிராயுதபாணிகளாகவே ஆக்கப்பட்டபிறகும், விடுதலைப் புலிகளின் அர்ப்பணிப்பால் அந்த இன அழிப்பைத் திட்டமிட்ட காலத்துக்குள் செய்துமுடிக்க இலங்கையால் முடியவில்லை.
அந்த நிலையில்தான், வேறு வழியில்லாமல் குகைக்குள்ளிருந்து சிங்கம் வெளிவருவதைப் போல ராமச்சந்திராவிலிருந்து மாண்புமிகு முதல்வர் 'வெளிக்கிட்டார்' என்பதாவது உங்களுக்கு நினைவிருக்கிறதா?
'ராமச்சந்திரா' அத்தியாயம் நாடகத்தின் முதல் காட்சியென்றால், அடுத்தடுத்த காட்சிகளாக 'கொட்டும் மழையில் மனிதச் சங்கிலி', 'கடற்கரையில் சாகும்வரை பட்டினிப் போர்' ஆகியவை தொடர்ந்தன. அதுவாவது உங்களுக்கு நினைவிருக்கிறதா கனிமொழி?
சாகும்வரை உண்ணாவிரதம் - ஐந்தாறு மணி நேரத்துடன் 'வெற்றிகரமாக' நிறைவடைந்தது எப்படி என்பதாவது உங்களுக்கு நினைவிருக்கிறதா? உங்கள் தந்தையைப் போலவே, 'உண்மை ஒன்றைத் தவிர வேறெதுவும் பேசத் தெரியாது பராபரமே' என்கிற கொள்கையில் ஒற்றைக்காலில் நிற்கிற கலியுகத் தாயுமானவர் ப.சிதம்பரம் 'போர் நின்றே விட்டது...தாக்குதல் நின்றே விட்டது' என்றெல்லாம் தெரிவித்தாரே...
அதை உச்சரிப்பு கூட மாறாமல் அச்சுஅசலாக அப்படியே உங்கள் தந்தை அறிவித்தாரே.... நினைவிருக்கிறதா?
போரே நின்றுவிட்டது - என்று உங்கள் தந்தை தெரிவித்த பிறகும், எங்களது அப்பாவித் தமிழீழ உறவுகள் மீது குண்டுமழை பொழிந்ததைப்பற்றிக் கேட்டபோது - 'மழை நின்றாலும் தூவாணம் நிற்கவில்லை' என்கிற நக்கல் புஸ்வாணம் முதல்வர் நாவிலிருந்து புறப்பட்டதே.... அதையாவது நீங்கள் நினைவில் வைத்திருக்கிறீர்களா?
'போரே நின்றுவிட்டது' என்று அறிவித்த ஒருவருடைய திருமகளான நீங்கள், தந்தையின் அந்த வார்த்தைகளை முற்றுமுதலாக மறுக்கிற விதத்தில், 'போர் உச்சத்தில் இருந்த சமயத்தில் சரணடையும்படி யாராவது சொல்வார்களா' என்று இப்போது கேட்பதுதான் மற்றெல்லாவற்றையும் காட்டிலும் வியப்பளிக்கிறது எனக்கு!
'போர் முடிந்துவிட்டது' என்று ப.சி.யும் உங்கள் தந்தையும் தெரிவித்தது 'பச்சைப் பொய்' என்று பகிரங்கமாகக் குற்றஞ் சாட்ட முயல்கிறீர்களா? அப்படித்தான் எனில், எம் மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருந்த சமயத்திலேயே இதை ஏன் நீங்கள் சொல்லவில்லை? 'போர்' என்கிற போலியான பெயரால் நடந்த இனப்படுகொலை முடிவடைந்த ஆறாண்டுகளுக்குப் பிறகு ஆற அமர இதை அறிவிக்கிறீர்களே... ஏன்?
எம் இனத்தைக் காப்பாற்ற உங்கள் தந்தை வேறெதுவும் செய்திருக்க வேண்டாம் சகோதரி! 'நடப்பது போர் என்று இந்தியாவும் இலங்கையும் புளுகுகின்றன. அங்கே நடப்பது போரல்ல, திட்டமிட்ட இனப்படுகொலை' என்கிற உண்மையை அவர் உரைத்திருந்தாலே போதுமே.....
உண்மை நிலவரம் என்ன என்பது குறித்து அவர் ஒரு வார்த்தை பேசியிருந்தால், அடுத்த கணமே நிலைமை தலைகீழாக மாறியிருக்குமே.... இதை உணர்கிறீர்களா கனிமொழி!
2015ல் தமிழீழ முதல்வர் விக்னேஸ்வரன் 'இனப்படுகொலை' என்று வெளிப்படையாகச் சொல்வதை, 2009ல் தமிழக முதல்வர் சொல்லியிருந்தால் எமது ஒன்றரை லட்சம் உறவுகளைக் காப்பாற்றியிருக்க முடியுமே! ஏன் அதைச் செய்யவில்லை சகோதரி?
அனந்தி சசீதரனுக்கோ எனக்கோ பதில் சொல்லும்முன், நீங்களும் உங்கள் நண்பர்களும் உங்கள் மனசாட்சிக்குப் பதில் சொல்லுங்கள் கனிமொழி!
உங்களது இதயத்தைத் தொட்டுக் கேட்கிறேன் கனிமொழி....
விடுதலை கேட்கிற இயக்கத்தையா ஆதரிக்கிறீர்கள் - என்று கேட்டுக் கேட்டுத்தானே கொல்லப்பட்டார்கள் எங்களது ஒன்றரை லட்சம் உறவுகள்.....
அந்த அப்பாவி மக்களைக் காப்பாற்ற ஒரு துரும்பைக் கூட தூக்கிவைக்காத ஒரு மாஜி முதல்வரைக் காப்பாற்ற மீண்டும் மீண்டும் நீங்களும் உங்கள் நண்பர்களும் முயற்சிப்பது நியாயம் தானா சகோதரி!
புகழேந்தி தங்கராஜ்

ad

ad