புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஜூன், 2015

ஜெயலலிதாவுக்கு ஆதரவாக அ.தி.மு.க.வினர் தீவிர வாக்கு சேகரிப்பு

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக அ.தி.மு.க.வினர் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.

ஜெயலலிதா போட்டி

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந் தேதி நடைபெறுகிறது. இத்தொகுதியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா போட்டியிடுகிறார்.

அ.தி.மு.க. தலைமை கழகம் சார்பில் அறிவிக்கப்பட்ட 50 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவினரும் தங்களுக்குள் பகுதிகளை பிரித்துக்கொண்டு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

வீதி, வீதியாக பிரசாரம்

இதுதவிர தமிழகம் முழுவதும் இருந்தும் ஏராளமான அ.தி.மு.க. தொண்டர்கள் ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பிரதான ஓட்டல்கள் மற்றும் விடுதிகளில் தங்கியிருந்து ஜெயலலிதாவுக்கு ஆதரவாக வீதி, வீதியாக தீவிர பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சி.மகேந்திரன், சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உள்பட மொத்தம் 28 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்குப்பதிவு தேதி நெருங்குவதையொட்டி அரசியல் கட்சியினர், சுயேச்சை வேட்பாளர்கள் பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.

அ.தி.மு.க.வினர்வாக்கு சேகரிப்பு

இந்த நிலையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று முன்தினம் ஆர்.கே.நகர் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். தண்டையார்பேட்டையில் உள்ள திருவொற்றியூர் நெடுஞ்சாலை சந்திப்பு மற்றும் எண்ணூர் நெடுஞ்சாலை சந்திப்பு ஆகிய 2 இடங்களில் வேனில் இருந்தபடியே பேசி வாக்கு சேகரித்தார்.

தேர்தல் பிரசாரம் நாளை (வியாழக்கிழமை) மாலை 5 மணியோடு ஓய்கிறது. பிரசாரத்துக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் அ.தி.மு.க.வினர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தொகுதி முழுவதும் பல்வேறு குழுக்களாக சென்று பொதுமக்களிடம் ஆதரவு திரட்டி வருகின்றனர்.

ஓட்டு வேட்டை

ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக அரசியல் கட்சியினரின் வாகனங்கள் சீறிப்பாய்ந்து சென்றதை காணமுடிந்தது. ஆனால் நேற்று கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அ.தி.மு.க.வினர் தொகுதி முழுவதும் நடை பயணமாக சென்று ஜெயலலிதாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள முக்கிய சாலை சந்திப்புகள், குடியிருப்பு பகுதிகள், கடைகள் என பல்வேறு இடங்களில் பல்வேறு தரப்பினரிடம் ஓட்டு வேட்டையில் ஈடுபட்டனர். இன்று (புதன்கிழமை) ஜெயலலிதாவுக்கு ஆதரவாக நடிகர்-நடிகைகள் பிரசாரம் செய்ய உள்ளனர்.

உச்சக்கட்டத்தில் பிரசாரம்

இதனால் ஆர்.கே.நகர் தொகுதி களைக்கட்டியுள்ளது. நடிகர்-நடிகைகளின் அனல் பறக்கும் பேச்சுகளை கேட்பதற்கு பொதுமக்களும் மிகவும் ஆவலாக உள்ளனர். நாளை பிரசாரம் ஓய்கிறது என்பதால் இன்று பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ad

ad