புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜூன், 2015

வேட்பு மனுவை தாக்கல் செய்தார் ஜெயலலிதா



ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்று (வெள்ளிக்கிழமை) வேட்புமனுவை தாக்கல் செய்தார் ஜெயலலிதா. 

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா, ஸ்ரீரங்கம் சட்டசபை உறுப்பினர் மற்றும் தமிழக முதல்வர் பதவியை இழந்தார். பின்னர் சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் விடுதலை பெற்ற ஜெயலலிதா, மீண்டும் தமிழக முதல்வராக பதவியேற்றுள்ளார். தற்போது எம்.எல்.ஏவாக இல்லாத ஜெயலலிதா அடுத்த 6 மாத காலத்திற்குள் சட்டசபை உறுப்பினராக வேண்டும். இந்நிலையில், அண்மையில் சென்னை ஆர்.கே. நகர் அதிமுக எம்.எல்.ஏ. வெற்றிவேல் தனது பதவியை ராஜினாமா செய்தார். 

அதனைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப் பட்டது. இதனால் காலியாக உள்ள ஆர்.கே. நகர் தொகுதியில் வரும் ஜூன் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் ஜூன் 3ம் தேதி தொடங்கியது. வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூன் 10. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாள் ஜூன் 11. வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் ஜூன் 13. ஜூன் 27ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். இந்த வாக்குகள் ஜூன் 30-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனைத்தொடர்ந்து சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் ஜெயலலிதா போட்டியிடுவார் என அக்கட்சித் தலைமைக் கழகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

அதன்படி இன்று இன்று (வெள்ளிக்கிழமை) வேட்புமனுவை தாக்கல் செய்தார் ஜெயலலிதா. 

கடந்த 1977-ம் ஆண்டு ஆர்.கே.நகர் தொகுதி உருவாக்கப்பட்டது. அன்று முதல் 2011 வரை நடந்துள்ள 9 தேர்தல்களில் அதிமுக 5 முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தலா 2 முறை வென்றுள்ளன. 1977-ம் ஆண்டு எம்ஜிஆர் தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றியபோது சென்னை மாநகரில் அதிமுக வென்ற ஒரே தொகுதி ஆர்.கே.நகர் மட்டுமே.

கடந்த 2011 தேர்தலில் பி.வெற்றிவேல் (அதிமுக) - 83,777 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பி.கே.சேகர்பாபு (திமுக) - 52,522 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தில் இருந்தார். கே.ஆர்.விநாயகம் (பாஜக) - 1,300 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் இருந்தார். 

ad

ad