புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜூன், 2015

புலிப்பூச்சாண்டி காட்டும் செயற்பாடு தொடரக்கூடாது

 
சுயநல அரசியலுக்காகவும் சிங்கள பெரும்பான்மை வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காகவும் புலிப்பூச்சாண்டி காட்டும் செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.
கடந்த மூன்று தசாப்தகாலமாக நாட்டில் யுத்தம் நடைபெற்ற போது புலிகளை காண்பித்து தென்பகுதியில் அரசியல் நடத்தப்பட்டது.
2009ம் ஆண்டு விடுதலைப்புலிகள் முற்றாக ஒழிக்கப்பட்டு விட்டதாக அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்த பின்னரும் புலிப்பூச்சாண்டி காண்பித்து சிங்கள மக்களை அச்சத்திற்குள்ளாக்கி அரசியல் ரீதியில் நன்மை அடைவதற்கு தென்பகுதி அரசியல் கட்சிகள் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றன.
நாடு என்ன கேடு கெட்டாலும் பரவாயில்லை. அடுத்த தேர்தலில் சிங்கள மக்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று ஆட்சி அமைத்தால் போதும் என்ற நிலைப்பாட்டிலேயே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாறி மாறி ஆட்சிக்கு வந்த ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண முயலாது புலி வருகின்றது. புலி வருகின்றது எனக்கூறியே அரசியலை நடத்தி வந்திருக்கின்றன.
2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாக அன்றைய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் அறிவித்தது.
2010ம் ஆண்டு இடம் பெற்ற பாராளுமன்றத் தேர்தலிலும் ஜனாதிபதி தேர்தலிலும் புலிகளை ஒழித்துக் கட்டிவிட்டோம் என்று தம்பட்டம் அடித்தே இந்தத் தேர்தல்களில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மீண்டும் வெற்றி பெற்றது.
இவ்வாறு வெற்றி பெற்றிருந்த போதிலும், அடுத்து வந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் புலிகள் அழிக்கப்பட்டாலும் சர்வதேச ரீதியில் பலம் பெற்று வருகின்றனர்.
எனவே நாட்டை புலிகளிடமிருந்து தொடர்ந்தும் கட்டிக்காக்க வேண்டுமானால் எமக்கே வாக்களியுங்கள் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கோரி வந்தது. அதற்கு சிங்கள மக்களும் தலைசாய்த்து அந்தக் கட்சிக்கு வாக்குக்களை வழங்கியிருந்தனர்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் மைத்திரிபால சிறிசேனவே எதிரணி வேட்பாளராக களமிறங்கியமையினால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் புலிப்பூச்சாண்டி பிரசாரம் பெருமளவில் எடுபடவில்லை.
இருந்த போதிலும், சிங்கள மக்களின் பெரும்பான்மையான வாக்குக்களை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்சவே பெற்றிருந்தார்.
இவ்வாறான ஒரு சூழ்நிலையில் புதிய ஜனாதிபதி புதிய அரசாங்கம் பதவியேற்றுள்ள போதிலும், தற்போதும் புலிப்பூச்சாண்டிப் பிரசாரத்தில் எதிர்க்கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.
எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா உட்பட சிறிலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் கூட்டுக்கட்சிகளின் தலைவர்கள் புலிப்பூச்சாண்டிப் பிரசாரத்தை மேற்கொண்டே வருகின்றனர்.
வடமாகாணத்தில் அண்மையில் நடைபெற்ற பாலியல் வல்லுறவு, படுகொலை சம்பவத்தை முன்வைத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் வடக்கில் மீண்டும் புலிகள் உருவாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
நீதிமன்றங்களுக்கும் பொலிஸ் நிலையங்களுக்கும் கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொண்டே விடுதலைப் புலிகள் முன்னர் உருவாகினர். அதேபோன்ற நிலைமை வடக்கில் ஏற்படுகின்றது என்று கடந்த வாரம் புலிப்பூச்சாண்டிப் பிரசாரம் மேற்கொண்டிருந்தார்.
இதேபோல் எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வாவும் வடபகுதியில் மீண்டும் புலிகள் தலைதூக்கும் நிலை ஏற்பட்டு விட்டது. விடுதலைப் புலிப் பயங்கரவாதத்தை அழித்து விட்டதாக அரசாங்கம் குறிப்பிட்டாலும் அந்தப் பயங்கரவாதம் இலங்கையில் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் புலிப்பயங்கரவாதம் இன்னமும் பலமாகவே செயற்படுகின்றது. விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பு மீண்டும் இலங்கையை தாக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமாக உள்ளன.
இந்த நிலையில் எமது நாட்டைப் பாது காக்கவேண்டியது கடமையாகும். வென்றெடுத்த விடுதலையை மீண்டும் தாரைவார்க்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.
வடக்கில் அட்டூழியங்கள் அதிகரித்துள்ளதுடன் அச்சுறுத்தல்களும் ஏற்பட்டுள்ளன. அதேபோல் புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் புலிகள் இயக்கத்தின் தலையீடுகள் மீண்டும் வடக்கை ஆக்கிரமிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே மீண்டும் வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் முக்கிய பகுதிகளில் இராணுவப் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. வடமாகாண முதலமைச்சர் இனவாத செயற்பாடுகளை ஆரம்பித்து விட்டார்.
தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தை நினைவுகூர்ந்து வடக்கில் புலிகளின் தினத்தை வடமாகாண முதலமைச்சர் அனுஷ்டித்துள்ளார். வடக்கில் சட்டத்திற்கு முரணான ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடத்தப்பட்டுள்ளன. நீதிமன்றங்கள், பொலிஸ் காவலரண்கள் தாக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் வடக்கிலுள்ள இராணுவத்தை வெளியேற்றும் செயற்பாடுகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. வடக்கில் பாதுகாப்பு வலயங்களும் நீக்கப்பட்டு அனைத்துப்பகுதிகளும் மக்களுக்கு வழங்கப்படுகின்றன.
இந்த அரசாங்கம் ஐந்து மாத காலத்தில் வடக்கிலுள்ள அதிகமான இராணுவத்தை வெளியேற்றியுள்ளது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரைப் போன்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முக்கியஸ்தருமான விமல் வீரவன்சவும் புலிப்பூச்சாண்டிக் கருத்துக்களையே தெரிவித்து வருகின்றார்.
இத்தகைய பிரசாரங்கள் மூலம் பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளில் கணிசமான தொகையினை பெற்றுக்கொள்ள முடியும் என்று எண்ணுவதாகவே தெரிகின்றது.
கடந்தவாரம் இலங்கையின் வடக்கு, கிழக்கு நிலைமை தொடர்பில் அமெரிக்க ஆய்வு மையமான ஒக்லாண்ட் இன்ஸ்டிடியூட் அறிக்கையொன்றினை வெளியிட்டிருந்தது.
இந்த அறிக்கை வெளியிடும் நிகழ்வு அமெரிக்காவில் இடம் பெற்ற போது தொலைபேசியூடாக நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தொலைபேசியூடாக கலந்து கொண்டு அறிமுக உரையாற்றியிருந்தார்.
இந்த உரையில் தொடர்ச்சியான இராணுவப் பிரசன்னம் தமிழ் மக்களுக்கு மிக மோசமான பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கள மக்களை வடக்கில் குடியேற்றும் நடவடிக்கையும் பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. இது குடிப்பரம்பலை பெரிதும் பாதிக்கின்றது என்று தெரிவித்திருந்தார்.
முதலமைச்சர் வடக்கில் இராணுவப் பிரசன்னமானது தமிழ் மக்களுக்கு மிக மோசமான பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்று கருத்து தெரிவித்தமையானது தென்பகுதியில் இனவாத அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றது.
இந்தக் கூற்றினை அரசியல் சுயநலத்திற்காக பயன்படுத்தி அரசியல் இலாபத்தை பெற்றுக் கொள்ளும் வகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வாவின் கருத்து அமைந்துள்ளது.
உண்மையிலேயே வடக்கில் இராணுவப் பிரசன்னம் இன்னமும் குறைக்கப்படவில்லை. அங்கு பொதுமக்களின் காணிகளை மீளவும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் சிறியளவிலேயே நடைபெற்று வருகின்றன.
அதுவும் புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் தான் சில விட்டுக்கொடுப்புக்களை மேற்கொண்டு மக்களின் காணிகளை மீள வழங்கும் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.
இரு தசாப்தங்களுக்கு மேலாக இடம்பெயர்ந்திருந்த இந்த மக்கள் மீளவும் தமது சொந்த இடங்களுக்கு திரும்ப முடியாது பெரும் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.
இவ்வாறான மக்களை சொந்த இடங்களில் மீளக்குடியேற்றுவது தவறு என்ற தொனிப்பொருளில் எதிர்க்கட்சித் தலைவர் அரசியல் சுயநலனுக்காக கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்.
அடுத்த தேர்தலை இலக்காகக் கொண்டு சிங்கள மக்களின் வாக்குக்களை கவருவதற்காக புலிப்பூச்சாண்டி காட்டும் செயற்பாடுகளை எதிர்க்கட்சி பிரதிநிதிகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறான செயற்பாடுகளினால் தான் நாடு அழிவுப்பாதையில் சென்றது என்பதை புரிந்துகொண்டால் நல்லது.

ad

ad