புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஜூன், 2015


இலங்கையில் 2009-ம் ஆண்டு இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் நடந்த போரின்போது ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
இது தொடர்பாக உலகின் பல நாடுகளும் இலங்கைக்கு கண்டனம் தெரிவித்தன. ஐ.நா. மனித உரிமை அமைப்பும் படுகொலைகள் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
இலங்கைக்கு எதிராக சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று அமெரிக்காவால் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இதனை ஐ.நா.வின் பெரும்பான்மையான உறுப்பு நாடுகள் ஆதரித்தன. இதனைத் தொடர்ந்து இலங்கையில் மனித உரிமை மீறப்பட்டுள்ளதா? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு இடைக்கால அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.
இறுதி அறிக்கை வரும் செப்டம்பர் மாதம் ஐ.நா. மன்றத்தில் வழங்கப்பட உள்ளது.
இந்நிலையில், ஜெனீவா நகரில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 29-வது கூட்டத்தொடர் கடந்த 15-ம் திகதி தொடங்கி நடந்து வருகிறது. நேற்று நடந்த ஐ.நா. பொது சபையில், இலங்கையில் நடந்த போரின்போது வெள்ளைக் கொடியோடு சரணடைந்த புலித்தேவன், நடேசன், மலரவன் உள்ளிட்ட ஈழப்போராளிகள், அப்பாவித் தமிழர்கள் என 18 ஆயிரம் பேர் நிலை என்ன? அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா?
என்பதை சொல்ல ஏன் இலங்கை அரசு மறுக்கிறது? என்பது பற்றி பல்வேறு தரப்பினர் கேள்விகளை எழுப்பினர்.
முன்னதாக பசுமைத் தாயகம், பிரித்தானிய தமிழர் பேரவை, அமெரிக்க தமிழர் அரசியல் செயற்பேரவை ஆகிய அமைப்புகள் இணைந்து இலங்கையில் தொடரும் மனித உரிமை மீறல்கள் குறித்த சிறப்பு இணைக் கூட்டத்தை நேற்று முன்தினம் நடத்தியது.
இங்கிலாந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழர்கள் நீதிக்கான நல்லெண்ண தூதுவருமான லீ ஸ்காட் இக்கூட்டத்துக்கு தலைமை தாங்கினார்.
சர்வதேச மனித உரிமைகள் சட்ட வல்லுநரும், இங்கிலாந்து வழக்கறிஞர் பேரவையின் மனித உரிமைகள் குழு தலைவருமான ஜெனைன் கிறிஸ்டி பிரிமெலோ கியூசி (Janine Kristy Brimelo QC), தமிழகத்தில் இருந்து வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவைத் தலைவர் க.பாலு ஆகியோர் கூட்டத்தில் சிறப்புரையாற்றினர்.
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்து உலகம் முழுவதும் உள்ள புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள், ஈழமக்கள், மனித உரிமை ஆர்வலர்கள் பேசினர். இலங்கையில் நடந்த போரின்போது வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த போராளிகளின் உறவினர்கள், தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி மற்றும் தங்களுடையை நிலைமை பற்றி விளக்கி, துயரம் தாங்காமல் கண்ணீர் விட்டு கதறினர்.
இலங்கையில் நடந்த போரின் போது வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த போராளிகளான மலரவன் மனைவி சுசிலாம்பிகை மற்றும் புலித்தேவன் மனைவி குறிஞ்சி மற்றும் நடேசனின் மகன் உள்ளிட்ட பலரின் உறவினர்கள் ஐ.நா. பொது சபையில் பங்கேற்க வந்திருந்தனர்.
இவர்களுடன் வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவைத் தலைவர் வழக்கறிஞர் க.பாலு உரையாடினார்.
போர்க்குற்றங்கள் தொடர்பாக புலித்தேவனின் மனைவி குறிஞ்சி, மலரவனின் மனைவி சுசிலாம்பிகை மற்றும் நடேசனின் மகன் ஆகியோர் ஐ.நா.வின் நேரடி சாட்சியங்களாக உள்ளனர்.
மனித உரிமை மீறல்கள் தொடர்பாக செப்டம்பர் மாதம் ஐ.நா.மன்றத்தில் இறுதி அறிக்கை அளிக்கப்பட உள்ளது. அப்போது, இவர்களின் சாட்சியங்களால் இலங்கை அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்படும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
ஐ.நா.சபை வளாகத்தில் வழக்கறிஞர் பாலு கேட்ட கேள்விகளுக்கு சுசிலாம்பிகையும் குறிஞ்சியும் கண்ணீர் மல்க பதிலளித்தனர்.
இந்த தகவல்கள் முழுவதையும் ‘தி இந்து’விடம் பாலு பகிர்ந்துகொண்டார்.
அதன் விவரம்:
மலரவன் மனைவி சுசிலாம்பிகை:
2009-ம் ஆண்டு இலங்கைப் போரின்போது சரணடைந்தவர்களின் நிலை என்னெவென்று இன்று வரை தெரியவில்லை. உங்களுடைய கணவர் சரணடைந்ததாக சொன்னார்கள். அவரைப் பற்றிய செய்திகள் ஏதாவது தெரியுமா? சரணடையும்போது நீங்கள் அவருடன் இருந்தீர்களா?
ஆமாம். அவருக்கு பக்கத்திலேயே நான் இருந்தேன். 2009-ம் ஆண்டு மே 18-ம் தேதி முல்லைத்தீவு வட்டுவாய்க்கால் பகுதியில் பல போராளிகளுடன் எனது கணவரை எனது பிள்ளையுடன் சரணடைய ஒப்படைத்தேன்.
அப்போது, ‘நீ பிள்ளையுடன் போ’ என்று சொன்னார். நான், ‘முடியாது. போகமாட்டேன்’ என்றேன். இலங்கை இராணுவத்தினர் வயரால் எனது கையில் அடித்தனர். இராணுவத்தினர் எனது கணவரை இழுத்துச் சென்றுவிட்டனர். நான் பிள்ளையுடன் வந்துவிட்டேன்.
உங்கள் கணவர் சரணடையும்போது, உங்களிடம் என்ன சொல்லிவிட்டு சென்றார்?
போராளிகள் எல்லோருக்கும் நடப்பதுதான் எனக்கும் நடக்கும் என்று சொல்லிவிட்டு சரணடைந்தார்.
உங்கள் கணவர் இருக்கிறாரா, இல்லையா? என்ற தகவல் உங்களுக்கு தெரிந்ததா?
நாங்கள் எல்லா இடங்களிலும் கேட்டோம். அவர் எங்களிடம் வரவில்லை. அவர் எங்களிடம் வந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று சொல்கிறார்கள். 6 ஆண்டுகள் ஆகியும் இலங்கை இராணுவம் எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை. நாங்கள் மனவருத்தத்துடன் இன்றுவரை இருக்கிறோம்.
உங்கள் கணவர் திரும்பி வருவார் என்று நீங்கள் நம்புகிறீர்களா?
அவர் உயிருடன் இருக்க வேண்டும் என்றுதான் நாங்கள் நம்புகின்றோம். இலங்கை அரசாங்கம் நல்ல முடிவை தெரிவிக்க வேண்டும். நாங்களும் அவர்களிடம் கேட்டுக் கொள்கிறோம்.
ஈழத் தமிழர்களுக்கு நடந்த இன்னல்களுக்கு என்ன தீர்வு என்று நினைக்கிறீர்கள்?
ஈழத் தமிழர்களுக்கு நடந்தது கொடுமையான ஒரு செயல். துடிக்கத் துடிக்க கொன்றார்கள். இந்தியா எங்களை காப்பாற்றும் என்று ஏக்கத்துடன் இருக்கின்றோம். துன்பத்தில் இருக்கிறோம்.
ஐ.நா. மனித உரிமை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்துள்ளீர்கள். இந்த கூட்டத்தில் என்ன சொல்லப் போகிறீர்கள்?
நான் எனது கணவரை எந்த சின்ன காயமும் இல்லாமல் உயிரோடு ஒப்படைத்தேன். அதேபோல எனது கணவரை எங்களிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டும். என் பிள்ளையின் அப்பாவை திருப்பித் தர வேண்டும் என்று கேட்கத்தான் வந்து இருக்கிறேன்.
உங்களுடைய மகன் அப்பாவைப் பற்றி கேட்கும்போது, நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
பிள்ளை ஏங்கக்கூடாது என்று உண்மை நிலையை சொல்லிவிட்டேன். அப்பா வரவேண்டும் என்று பிள்ளையும், கணவர் வரவேண்டும் என்று நானும் காத்துக் கொண்டு இருக்கின்றோம். நல்ல செய்தி வரும் என்ற நம்பிக்கையூட்டி பிள்ளையை வளர்த்துக் கொண்டிருக்கிறேன்.
ஈழத்தமிழர்கள் பிரச்சினையில் கேட்பாரற்ற நிலை இருப்பதற்கான காரணம் என்ன? இவ்வளவு பெரிய இனப்படுகொலை நடந்தும், நியாயம் கிடைக்காமல் இருப்பதற்கு தமிழர்களுக்கு என்று தனி நாடு இல்லாததுதான் காரணம் என்று நினைக்கிறீர்களா?
தமிழர்கள் வாழாத இடம் இல்லை. தமிழர்களுக்கு என்று நாடு இல்லை. அதனால்தான் இலங்கையில் கேட்பாரற்று தமிழ் மக்கள் அலைந்து திரிகின்றோம். இன்று வரை எந்த தீர்வும் இல்லை. இதனை நினைக்கும்போது மனது வருத்தமாக இருக்கிறது.
ஈழத்தமிழர்கள் பிரச்சினையில் ஒரு தீர்வு, அமைதி ஏற்பட்டு அங்கு புலம் பெயர்ந்த தமிழர்கள் எல்லோரும் ஈழத்தில் வாழ்வதற்கான சூழல் ஏற்பட்டால், அது எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
நான் மட்டும் அல்ல, எல்லா தமிழர்களும் இதையே விரும்புவார்கள். எல்லா தமிழர்களையும் போல, எனது கணவருடன் நான் எங்கள் சொந்த நாட்டுக்கு போக தயாராக இருக்கிறேன்.
புலித்தேவன் மனைவி குறிஞ்சி:
2009-ம் ஆண்டு நடந்த போரின்போது சரணடைந்த உங்கள் கணவரின் நிலை என்ன?
எனது கணவர் சரணடையும்போது, அவரது பக்கத்தில் நான் இல்லை. இலங்கை அரசு அனுமதியுடன், சர்வதேசத்துக்கும் தெரியப்படுத்திய பிறகு, இலங்கை இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் புலித்தேவன், நடேசன் உள்ளிட்ட போராளிகள் வெள்ளைக் கொடியுடன் சென்று சரணடைந்தார்கள். அதன்பின் என்ன நடந்தது என்று தெரியவில்லை.
உயிரற்ற உடல்களைத்தான் இலங்கை மீடியாவும், சர்வதேச மீடியாக்களும் காட்டின. எப்படி நடந்தது? யார் சொல்லி அதை செய்தார்கள்? எப்படி கொன்றார்கள்? என்று தெரியவில்லை. இன்று வரைக்கும் தெரியவில்லை.
ஆயுதம் இன்றி வெள்ளைக் கொடியுடன் சரணடைய சென்ற குழுவை கொலை செய்வது சர்வதேச மனித உரிமை மீறிய செயலாகும். இதுபற்றி சர்வதேச அளவில் விசாரணை மேற்கொள்ள வேண்டும். வெள்ளைக் கொடியுடன் சென்றவர்கள் என்ன காரணத்திற்காக கொலை செய்யப்பட்டார்கள் என்பதற்கு எனக்கும், என்னைப்போல பாதிக்கப்பட்டவர்களுக்கும் பதில் கிடைக்க வேண்டும்.
இலங்கை பிரச்சினைக்கு நியாயமான தீர்வு கிடைக்கும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?
நிச்சயம். சர்வதேசமும் முயற்சி செய்தால் கிடைக்கும்.
இந்தியா உதவி செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களா?
இந்தியா மிகவும் பலமான நாடு. விசாரணைக்கு ஆதரவும் மற்றும் தேவையான உதவிகளையும் செய்ய வேண்டும்.
தமிழகத்தில் உள்ள மக்கள் ஈழத் தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு நியாயமான தீர்வு வேண்டும் என்று அரசியல் அழுத்தத்தை கொடுக்கிறார்கள். அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?
இதனை நினைக்கும்போது மிகவும் பெருமையாக இருக்கிறது. எங்களுக்கு ஒரு தீர்வு வரும் வரை தமிழக மக்களின் பங்களிப்பும், ஆதரவும் இருக்க வேண்டும். தமிழக மக்களின் பெரிய ஆதரவு இருக்கும் வரை எங்களைப்போல பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஒரு நீதியான தீர்வு கிடைக்கும் என்பதில் நான் முழு நம்பிக்கையுடன் இருக்கிறேன்.
இலங்கையில் மீண்டும் புலம் பெயர்ந்த தமிழர்கள் ஒரே இடத்தில் வாழ்வதற்கான சூழல் அமைந்தால் எப்படி இருக்கும்?
எல்லா புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களின் விருப்பமும் அதுதான். எங்களுக்கு என்று நிரந்தர நாடு, நிரந்தர தீர்வு கிடைத்தால் மிகவும் சந்தோஷம். அதைத்தான் நாங்கள் விரும்புகிறோம். அப்படி கிடைத்தால் நாங்கள் உடனே திரும்பி எங்கள் நாட்டுக்கு போய் வாழத் தொடங்கிவிடுவோம்.
புலித்தேவனின் மனைவி சாட்சியத்தால் குழப்பத்தில் தென்னிலங்கை: சிங்களப் பத்திரிகை
உள்ளக விசாரணைக்கான சட்ட வரைவுகள் அகஸ்ட் மாதத்தில் பூர்த்தியாகும் என சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும், இந்த உள்ளக விசாரணைப் பொறிமுறைமைக்கு வெளிநாட்டு நீதி விசாரணையாளர்கள் அல்லது சர்வதேச விசாரணையாளர்கள் உள்வாங்கப்பட மாட்டார்கள்.
போர்க் குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைப் பொறிமுறைமைக்கு சர்வதேச விசாரணைகள் ஈடுபடுத்தப்பட வேண்டுமென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக பத்திரிகையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணியாளர் புலித்தேவனின் மனைவி இலங்கை அரசாங்கத்திற்கு சேறு பூசும் வகையில் ஐக்கிய நாடுகள் அமைப்பில் போலி சாட்சியமளித்துள்ளதாக அதே பத்திரிகையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இவ்வாறு போலி சாட்சியமளித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
போலிச் சாட்சியங்களை அளிப்பதற்காக சனல்-4 ஊடகம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் குறித்த நபர்களை ஜெனீவாவிற்கு அழைத்து வந்துள்ளன.

ad

ad