புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜூலை, 2015

கருணாநிதியின் அவதூறுகள் இனி மக்களிடம் எடுபடாது: அமைச்சர் வேலுமணி

.தி.மு.க.வின் கடந்த 4 ஆண்டு கால ஆட்சியில் கொண்டுவரப்பட்ட குடிநீர் திட்டங்கள் பற்றி விளக்கம் அளித்துள்ள அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கருணாநிதியின்
அவதூறுகள் இனி தமிழக மக்களிடம் எடுபடாது என்று தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கடந்த 23 ஆம் தேதி அன்று அறிக்கை வெளியிட்டுள்ள கருணாநிதி, ஜெயலலிதா தலைமையிலான அரசு குடிநீர்ப் பிரச்னை குறித்து அக்கறை இல்லாது இருப்பதைப்போல ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்க முயற்சித்திருக்கிறார். முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2011 ஆம் ஆண்டு மே மாதம் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், மக்களின் அடிப்படைத் தேவையான குடிநீர்ப் பிரச்னையில் தனிக்கவனம் செலுத்தி, நீடித்த, நிலைத்த குடிநீர் ஆதாரங்களுடன் திட்டங்களை சிறப்புடன் செயல்படுத்தி வருவதை கருணாநிதி அறியமாட்டார் போலும்.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சியில் தான் தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் 98.95 விழுக்காடு குடியிருப்புகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு இந்தியாவிலேயே, தமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழ்கின்றது என்பதை அவர் தெரிந்துகொள்ள வேண்டும். மாநில மக்களின் குடிநீர் தேவையைக் கருத்தில் கொண்டு, குறிப்பாக கோடைக் காலத்தில் எவ்வித தட்டுப்பாடும் இன்றி குடிநீர் வழங்கிட, முன்னதாகவே ஆய்வுகள் மேற்கொண்டு பணிகளை துரிதப்படுத்தி செயல்படுத்திட வேண்டும் என்பது முதல்வர் ஜெயலலிதாவின் ஆணை ஆகும்.

கடந்த 20 ஆம் தேதி அன்று சென்னை குடிநீர் வடிகால் வாரியத்தில் சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்குவது தொடர்பாக துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால், குடிநீர் பிரச்னை குறித்து கருணாநிதி குறிப்பிடும் பத்திரிகைச் செய்திகள் 22.07.2015 அன்று தான் வெளியிடப்பட்டன.

முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த 2011 ஆம் ஆண்டு பொறுப்பேற்றதும், முந்தைய தி.மு.க. ஆட்சியில் வெறும் அறிவிப்புகளாக விட்டுச்செல்லப்பட்ட 8 கூட்டுக்குடிநீர் திட்டங்களில் மதுரை-மேலூர் கூட்டுக் குடிநீர் திட்டம், பல்லடம் கூட்டுக் குடிநீர் திட்டம், விருதுநகர் மாவட்டத்தில் 3 கூட்டுக் குடிநீர் திட்டங்கள், நாகப்பட்டினம் கூட்டுக் குடிநீர் திட்டம், ஆத்தூர் நரசிங்கபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் மற்றும் வேலூர் கூட்டுக் குடிநீர் திட்டம் ஆகிய 8 கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்காக ரூ.3276.62 கோடி ரூபாய் நிதி ஆதாரங்களை இறுதி செய்து, அனைத்து திட்டங்களுக்கும் ஒப்பந்த நிறுவனங்களை உறுதி செய்து, பணி ஆணைகளை வழங்கி விரைந்து நிறைவேற்றினார். அதன் பயனாகத்தான், சேலம், விருதுநகர் மாவட்டங்களில் 3 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மக்கள் பயன்பாட்டிலும், மதுரை, வேலூர் மாவட்டங்களில் 2 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் சோதனை ஓட்டத்திலும் மற்ற 3 திட்டங்கள் செயலாக்கத்திலும் உள்ளன.

இது மட்டுமல்லாமல், முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டவாறு மக்களின் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் புதிதாக கடலூர், தஞ்சாவூர், கோயம்புத்தூர், கன்னியாகுமரி, திண்டுக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் தலா ஒரு கூட்டுக் குடிநீர் திட்டமும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 கூட்டுக் கூட்டுக் குடிநீர் திட்டங்களும் ஆக 8 பெரிய கூட்டுக் குடிநீர் திட்டங்களை ரூ.2408.34 கோடி மதிப்பில் செயல்படுத்த உரிய ஆணைகள் வழங்கப்பட்டு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

இதனையும் சேர்த்து, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் மாநிலத்திலுள்ள நீடித்த, நிலைத்த நீராதாரங்களைக் கொண்டு மொத்தம் 154 பெரிய மற்றும் சிறிய குடிநீர் திட்டங்கள் மற்றும் 10,719 தனிமின்விசைத் திட்டங்கள் ரூ.9,275.65 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு, இதில் 88 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மற்றும் அனைத்து தனி மின்விசைத் திட்டங்களும் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளன. மீதமுள்ள திட்டங்களை விரைந்து முடிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முதலமைச்சர் ஜெயலலிதா அரசின் மீது அவதூறு பரப்பும் நோக்கத்துடன் வாய் கிழிய பேசும் கருணாநிதி, அதிகாரம் செலுத்திய கடந்த தி.மு.க. ஆட்சியில் 5 வருடங்களில் குடிநீர்த் திட்டங்களுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் மட்டும் செலவிடப்பட்ட தொகை ரூ.4,943 கோடி மட்டுமே ஆகும். ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசால் தமிழகத்தில் குடிநீர் திட்டங்களுக்காக இதுவரை ரூ.7,324.34 கோடி செலவிடப்பட்டு உள்ளது

ஆக, குடிநீர் வழங்கும் திட்டங்களுக்காக போதிய அக்கறை செலுத்தப்படவில்லை என்ற கருணாநிதியின் குற்றச்சாட்டு 2016 ஆம் ஆண்டு வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து மெய்க்கலப்பே சிறிதும் இல்லாமல் சொல்லப்படும் பொய்யுரைத் தொகுப்பே ஆகும்.

முதல்வர் ஜெயலலிதா, சென்ற மே மற்றும் ஜூன் 2015ல் ரூ.633 கோடி மதிப்பீட்டில் விருதுநகர் மற்றும் சேலம் மாவட்டங்களில் மூன்று பெரிய கூட்டுக் குடிநீர் திட்டங்கள், மேட்டூர், இடைப்பாடி, பள்ளிபாளையம், குன்னூர் ஆகிய நகராட்சிகளில் ரூ. 56.50 கோடி மதிப்பிலும் தனிக் குடிநீர் திட்டங்கள் உள்ளிட்ட மொத்தம் 23 குடிநீர் திட்டங்கள் ரூ.826.25 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பிலும், நகராட்சி நிர்வாகம் சார்பில் சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சியில் ரூ.7.13 கோடியிலும் குடிநீர்த் திட்டங்கள் முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

உண்மை நிலை இவ்வாறிருக்க, அரசியலுக்காக அவதூறு கூறுவதையே தன் லட்சியமாகக் கொண்ட கருணாநிதியின் கூற்று தமிழக மக்களிடம் இனிமேலும் சற்றும் எடுபடாது" என்று கூறி உள்ளார்.

ad

ad