புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜூலை, 2015

சிகிச்சைக்காக ஜெயலலிதா வெளிநாடு பயணம்?

சிகிச்சைக்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளிநாடு செல்ல இருப்பதாகவும், சிங்கப்பூர் அல்லது அமெரிக்காவுக்கு செல்லக்கூடும்
என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்த ஜெயலலிதா, சுமார் ஒன்றை மாதங்களுக்கு பிறகு பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார். சிறையில் இருந்து வெளியே வந்த ஜெயலலிதா, வெளியே எங்கும் செல்லாமல் தனது போயஸ் கார்டன் இல்லத்திலேயே இருந்தார். 

பின்னர் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதாவை கர்நாடக உயர் நீதிமன்றம் விடுதலை செய்ததால், சுமார் 7 மாதங்களுக்கு பிறகு கடந்த மே மாதம் 19 ஆம் தேதியன்று, போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து வெளியே வந்தார். இதையடுத்து, தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றுக் கொண்டார். இந்த பதவியேற்பு விழா சில நிமிடங்களிலேயே முடிவடைந்தது பலரையும் யோசிக்க வைத்தது.
அத்துடன் எம்.எல்.ஏ.வாக ஆவதற்கு அவர் இடைத்தேர்தலில் போட்டியிட சென்னை ஆர்.கே. நகர் தொகுதியை தேர்ந்தெடுத்ததும் கூட, பிரசாரத்திற்கு சென்னையை தாண்டிய வேறு ஊருக்கு செல்ல முடியாது என்பதால்தான் என்று கூறப்பட்டது.
மேலும், மெட்ரோ ரயில் சேவையை கூட தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

சமீபத்தில், அதிமுக சார்பில் நடந்த இஃப்தார் நிகழ்ச்சியில் ஜெயலலிதா கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டது. கடைசி நேரத்தில் அவரது வருகை ரத்து செய்யப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் ஜெயலலிதாவின் உரையை ஓ.பன்னீர்செல்வம்தான் வாசித்தார். அதில், 'கழகத்தின் சார்பில் நடத்தப்படும் இந்த இஃப்தார் நோன்பு திறப்பு விழாவில், வழக்கம்போல் நேரில் கலந்துகொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பம். எனினும் திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவின் காரணமாக, இந்த விழாவுக்கு என்னால் நேரில் வர இயலவில்லை. என்னால் இந்த விழாவில் கலந்துகொள்ள இயலாவிடினும், என் எண்ணங்கள் இந்த விழாவைச் சுற்றியே உள்ளன’ என குறிப்பிட்டிருந்தார் ஜெயலலிதா.

அதாவது, அவராலேயே மறைக்க முடியாத நிலைக்கு உடல்நிலை பாடாய்ப்படுத்த ஆரம்பித்துவிட்டது என்பதே உள்விவகாரங்களை அறிந்தவர்கள் சொல்கின்றனர்.
ஜெயலலிதாவால் ஐந்து நிமிடங்களுக்கு மேல் நிற்கவோ, சிறிது தூரத்துக்கு நடக்கவோ இயலவில்லை  என்றும், இதனால்தான் அவரது பதவியேற்பு விழாவில் சில நிமிடங்களுக்குள் அனைவரையும் கோரஸாகப் பதவிப்பிரமாணம் எடுக்கவைக்கும் நிலை ஏற்பட்டதாகவும் அப்போது சொல்லப்பட்டது. 

'கால்களின் இரண்டு மூட்டுகளும் தீராத வலியால் அவரை வேதனைப்படுத்துகின்றன. அலோபதி, சித்தா ஆகிய இரண்டு மருத்துவ முறைகளின்படியும் சிகிச்சை எடுத்துக்கொள்கிறார். அதற்கான சில பயிற்சிகளையும் செய்கிறார். ஆனாலும் வலி குறையவில்லை. நாளுக்குநாள் கூடிக்கொண்டுதான்போகிறது. வலி நிவாரணி மாத்திரைகளை அடிக்கடி உட்கொள்ளக் கூடாது என்பது மருத்துவர்கள் அறிவுரை. அப்படி உட்கொண்டால், உடல் எடை கூடுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், வலி நிவாரணி மாத்திரைகள் உட்கொள்ளாமல் இருக்கும்போது வலி அதிகமாக இருக்கிறது. அதனால்தான் அவர் நடக்க, நிற்க சிரமப்படுவதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில்தான் ஜெயலலிதாவுக்கு சமீப நாட்களாக இந்த மூட்டு வலி மிக அதிகமானதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அவர் தனது கொடநாடு செல்லும் திட்டத்தை கைவிட்டதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன. 

இதுகுறித்த செய்திகள் தமிழக அரசியல் வட்டாரங்களில் மிக அதிக அளவில் விவாதிக்கப்பட்டதைத் தொடர்ந்துதான், அண்மையில் கூட திமுக தலைவர் கருணாநிதி, ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து பேசினார்.
அப்போது, "தயவு செய்து நீங்கள் (ஜெயலலிதா) ஓய்வெடுத்து உங்கள் உடல்நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள். முதலமைச்சர் என்பவர், ஒரு நாட்டுக்கு ரகசியமானவராக இருக்கக் கூடாது. பகிரங்கமாக, வெளிப்படையாக இருக்க வேண்டும்" என்று கருணாநிதி பேசியது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சிகிச்சைக்காக  ஜெயலலிதா வெளிநாடு செல்ல இருப்பதாகவும், அநேகமாக சிங்கப்பூர் அல்லது அமெரிக்கவுக்கு அவர் செல்லக்கூடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக ஜெயலலிதா தனது மருத்துவர்களுடன் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் பயண தேதி உள்ளிட்ட விவரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இது குறித்து அதிமுக வட்டாரங்களில் தொடர்புகொண்டு நாம் விசாரித்தபோது, " எங்கள் காதுக்கு இப்படி ஒரு தகவல்  வந்தது உண்மைதான். ஆனால் எங்களாலும் இதுகுறித்து உறுதியாக எதுவும் சொல்ல  இயலாது" என்றே கூறுகின்றனர்.
இருப்பினும் இன்னும் சில தினங்களில் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ad

ad