புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜூலை, 2015

தமிழ் மக்களின் ஒற்றுமையைச் சிதைக்க முற்படுகின்ற புலம்பெயர் அமைப்புக்களின் அவதானத்திற்கு

இலங்கையில் பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான நாள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வழமைபோன்று தமிழ் அரசியல் கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக தமிழ் மக்கள்
சார்பில் போட்டியிடுவதற்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளன. தமக்கிடையிலான புரிந்துணர்வின் அடிப்படையில் வேட்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் கூட்டமைப்பாக இணைந்து செயற்பட விரும்பாத கட்சிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் தமிழ் மக்களுக்கும் இடையிலான உறவிற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்ற இலக்குடன் இத்தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்து, தமிழ் மக்களின் வாக்குப் பலத்தினை சிதைக்கின்ற பணிகளை மேற்கொள்வதற்கும் வியூகம் அமைத்துவருகின்றனர்.
இந்நிலையில் 20 ஆசனங்களைப் பெற்று தமிழ் மக்களின் பெரும்பான்மை பலத்தை நிலைநிறுத்த வேண்டும் என்ற கொள்கையுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் வேட்பாளர்களை நியமித்துள்ளனர். ஆனால் கடந்த காலங்களில் பொதுத் தேர்தல்களை எதிர்கொள்வதற்குத் தயங்கித் தலைமறைவாகியவர்கள் இத்தேர்தலில் மீண்டும் களத்தில் குதித்துள்ளனர். இவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்பதற்காக கூட்டமைப்பிற்கு எதிரான கருத்தியலை மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றனர்.
இவர்களுக்கு விடுதலைப் புலிகளின் நாமத்தில், தேசியத் தலைவரின் பெயரைக் கூறியவாறு செயற்பட்டுவருகின்ற புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் நிதியுதவிகளை வழங்கிவருகின்றனர்.
இந்நிலையில் தமிழர் தாயகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பிரதான கட்சிக்கு சிங்கள அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி ஸ்ரீலங்கா சுகந்திரக் கட்சி ஆகியவற்றுடன் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, பல்வேறு சுயேட்சைக் குழுக்கள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போன்ற அரசியல் கட்சிகளுடன் போட்டியிட வேண்டும் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
அதேபோல் சிங்கள் பேரினவாத ஆட்சியாளர்களின் நிகழ்ச்சி நிரலில் செயற்படுகின்ற இராணுவப் புலனாய்வாளர்களால் கூட்டமைப்பின் வாக்கு வங்கிகளைச் சிதைப்பதற்காக புதிய சுயேட்சைக் குழுக்களின் பிரதிநிதிகளும் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இதனால் வடக்கில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்ற கட்சியினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்கு வங்கியைச் சிதைத்து எப்படியாவது கஜேந்திரகுமாரை பாராளுமன்றத்திற்கு அனுப்பவேண்டும் என்ற வெறியுடன் கூட்டமைப்பிற்கு எதிராக வசைபாடத் தொடங்கியுள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் நாமத்தில் இயங்கிவருகின்ற புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இக்கட்சிக்கு பக்க பலமாகச் செயற்பட்டு தாயகத்தின் அரசியலைக் குழப்புவதற்கு முற்படுகின்றனர்.
இந்த அமைப்புக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றப் பிரதிநிதிகள் சிலர் தமிழ் இனத்திற்கு எதிராக கடந்த காலங்களில் செயற்பட்டுள்ளனர் எனவும் அவர்கள் தம்முடைய அறிவுரைகளைக் கேட்கவில்லை எனவும் கூறி கூட்டமைப்பிற்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கஜேந்திரகுமார் என்ற நபரை தாயகத்தில் அரசியல் தலைவராகச் செயற்படுமாறு அனுப்பியுள்ளனர்.
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியலிலிருந்து அகற்றுவதற்காக பெருமளவான நிதியையும் இந்த புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் வழங்கியுள்ள நிலையில் கூட்டமைப்பிற்கு எதிராக கஜேந்திரகுமார் தலைமையிலானவர்கள் பிரசாரங்களை ஆரம்பித்துள்ளனர்.
ஆனால் தாயக அரசியலைப் பொறுத்தவரையில் தமிழ் மக்கள் போரில் அதிகமானவற்றை இழந்துள்ளனர். தமிழன் சிங்களத்தால் அழிக்கப்படுகின்றான். தமிழனுக்கு ஒரு நீதியும் சிங்களத்திற்கு வேறொரு நீதியுமாக சிங்களத்தின் ஆட்சி நடைபெறுகின்றது. இந்நிலையில் தமிழ் மக்கள் தங்களுடைய வாக்குரிமையை, வாக்குப் பலத்தை பயன்படுத்தியே தாயகத்தில் இனத்தின் இருப்பை நிலைநிறுத்த வேண்டியவர்களாகவுள்ளனர். அதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுகின்ற தவறுகளையும் பொருட்படுத்தாமல் மக்கள் தேசியத் தலைவரின் வழிகாட்டலுடன் வாக்குரிமையை பயன்படுத்துகின்றனர்.
கடந்த 2009 ஆண்டுக்குப் பின்னர் இலங்கையில் நடைபெற்ற சகல தேர்தல்களிலும் தமிழ் மக்கள் தமது ஒற்றுமையை வெளிப்படுத்தி சிங்கள அரசியல் கட்சிகளைக் கதிகலங்க வைத்துள்ளனர். சிங்களத்தின் ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் மாற்றியுள்ளனர். சிங்கத்தின் ஆட்சியைத் தீர்மானிக்கின்ற அளவிற்கு மாபெரும் சக்கதியாக தமிழ் மக்கள் தமது ஒற்றுமையை வெளிக்காட்டியுள்ளனர்.
இதனால், வட,கிழக்கில் தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதைத்து கூட்டமைப்பை அரசியல் இருந்து அகற்ற வேண்டிய தேவை தெற்கின் இனவாத ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதன்வெளிப்பாடாக தேர்தல் களத்தில் சுயேட்சைக் குழுக்களைகளமிறக்கி கூட்டமைப்பின் வாக்கு வங்கியைச் சிதைக்க சிங்களம் முயற்சிக்கின்றது.
இதற்கு முன்னாள் போராளிகளில் சிலரையும் சிங்களத்தின் கைக்கூலிகள் பயன்படுத்தி வருகின்றமை மறுப்பதற்கில்லை. இத்தேர்தலில் இவ்வாறு களமிறக்கப்பட்ட முன்னாள் போராளிகள் கூட்டமைப்புடன் பேரம்பேசி ஆசனங்களை வழங்குமாறு அச்சுறுதியுள்ளனர். ஆனால் தலைவர் சம்பந்தன் எதனையும் கருத்திலெடுக்காது தமிழ் மக்களின் அரசியலை சரியான பாதையில் நகர்த்திச் செல்ல முற்படுகின்றார்.
இவ்வாறான நிலையில் தாயக அரசிலில் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் தாக்கம் அதிரித்துள்ளமை அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எதற்காக புலம்பெயர்ந்தவர்கள் தாயகத்தின் அரசியல் மீது அக்கறையுள்ளவர்களைப் போன்று செயற்படுகின்றார்கள் என்ற அவதானிக்க வேண்டிய தேவையும் தாயக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் எவையுமே முள்ளிவாய்க்கால் அவலத்திற்குப் பின்னர் இன்னமும் ஒருங்கிணைக்கப்படவில்லை. தாயகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் செயற்பட முடியாத நிலை எற்படுத்தப்பட்ட பின்னர் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த அமைப்பிற்குச் சவாலாகவே ஏனைய அமைப்பினர் தற்பொழுதும் இயங்கிவருகின்றனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் போருக்கும் உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காகவும் போரால் பாதிக்கப்பட்ட தாயக மக்களின் வாழ்வாதார மேம்பாடுகளுக்காகவும், சர்வதேச அரசியல் மன்றும் மனிதாபிமானப் பணிகளுக்காகவும் தேசியத் தலைவர் இந்த அமைப்புகளை உருவாக்கியிருந்தார். இந்த அமைப்புகளை போராளிகள் நேரடியாகக் கண்காணித்து வந்தனர். ஆனால் ஒரு சிலர் நிர்வாகக் கடமைகளில் சம்பளத்திற்கும் நியமிக்கப்பட்டிருந்தனர்.
முள்ளிவாய்க்கால் அவலத்திற்குப் பின்னர் இந்த அமைப்புக்களில் கடமையாற்றிய நேர்மையான போராளிகள் துரத்தப்பட்டுள்ளனர். அக்காலப்பகுதியில் அமைப்புக்களில் கூலி அல்லது உதவிகளைப் பெற்றுக்கொண்டு பணியாற்றியவர்கள் அமைப்புக்களில் இருந்த நிதிக்கு கணக்குக்காட்ட முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளனர். இவர்கள் தற்பொழுது தங்களைப் போராளிகளாகவும் அடையாளப்படுத்தி அமைப்புக்களை அக்கிரமித்துள்ளனர். இத்தகையவர்களுக்கு அறிவும் ஆற்றலும் மற்றவர்களைவிடவும் குறைவாக உள்ளதால் ஒற்றுமையாகச் செயற்பட முடியாதவர்களாக தமக்கிடையில் விதண்டாவாதமான கருத்தியலை வளர்த்துவந்துள்ளனர். இதனால் புலம்பெயர் தமிழர் அமைப்பினர் ஒருமித்த கருத்துடன் எதையுமே செய்ய முடியாதவர்களாக வருமானத்தை மட்டும் இலக்காக்கொண்ட அமைப்புகளாகச் செயற்பட்டு வருகின்றனர். இத்தகைய அமைப்புக்களை புலம்பெயர் தமிழர்களும் ஒதுக்கியுள்ளனர்.
இந்நிலையில் இந்த அமைப்புக்களின் பிரதிநிதிகள் தங்களுடைய நலன்களுக்காக, வருமானத்திற்காக, திருட்டுக்களை மூடிமறைப்பதற்காக தாயக மக்களுக்கு உதவிகளை வழங்குவதைப் போன்ற தோற்றப்பாட்டினை காண்பித்து வருகின்றனர்.
இதற்காக இவர்கள் தம்சார்பானவர்களுக்கு மட்டும் உதவிகளை வழங்கி வீராப்பு பேசுவதற்கும் தவறவில்லை.
இந்நிலையில் தாயகத்தில் அரசியலை வழிநடத்துவதற்கும் இந்த அமைப்புக்களின் பிரதிநிதிகள் முயற்சித்துள்ளனர். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் புலம்பெயர்ந்தவர்களை ஒரே கருத்துடன் ஒற்றுமையாக வந்து தாயக அரசியலை நெறிப்படுத்துமாறு அழைப்பு விடுத்துள்ளனர். இவ்வாறு ஒன்றுபட முடியாதவர்கள் தாயகத்தில் கூட்டமைப்பிற்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் விரிசலை ஏற்படுத்தவதற்காக கோடிகோடியாகப் பணத்தை வாரிவழங்கியுள்ளனர்.
ஆனால் தாயக அரசியலைப் பொறுத்தவரையில் எமது மக்கள் தற்பொழுதும் தேசிய உணர்வுடன் இருக்கின்றனர். தமிழ் மொழியும் எமது கலாசார பண்பாட்டு விழுமியங்களும் எமது இருப்பும் அழிக்கப்படாதவகையில் பாதுகாத்து வருகின்றனர். ஆனால் மிகவும் வறியவர்களாகவுள்ளனர்.
எமது மக்களின் செயற்கை வறுமை இத்தகைய தயார்படுத்தப்பட்ட அரசியல் வாதிகளுக்கு தீனிபோட்டுள்ளது. இனால் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களும் தயார்படுத்தப்பட்ட அரசியல்வாதிகளும் தாயகத் தமிழ் மக்களின் இருப்பை ,தமிழிம் என்ற எமது நாட்டை, எமது தேசத்தை, எமது மக்களின் தேசியத்தை சிதைக்கத் துடிக்கின்றனர்.
இவ்வாறு தயார்படுத்தப்பட்ட அரசியல்வாதிகள் இலங்கைத் தீவில் இருதேசம் இருப்பதாகவும் ஆனால் இலங்கை ஒரு நாடு எனவும் கூறியுள்ளனர். எமது ஆயுத விடுதலைப் போராட்டத்தில் தமிழீழ தேசியத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழன் தேசிய இனம், தமிழ் மக்கள் ஒரு தேசம், தமிழீழம் ஒரு நாடு என்ற கொள்கையுடன் போராட்டத்தை வழிநடத்தியிருந்தார்.
தமிழீழம் எங்களுடைய தாய்நாடு, தமிழீழமே எங்களுடைய இறுதி மூச்சு, சிங்களத்தை எமது நாட்டிலிருந்து துரத்த வேண்டும் என்ற தனிநாட்டுக் கனவுடன் பல ஆயிரக்கணக்கான கரும்புலிகளும் பல ஆயிரக்கணக்கான மாவீரர்களும் இலட்சக்கணக்கான மக்களும் வீரகாவியமாகியுள்ளனர். பலர் எல்லாவற்றையும் இழந்த நிலையில் நிற்கதியாக்கப்பட்டுள்ளனர். இவர்கள்  சா ட்சியங்களாக தற்பொழுதும் தாயகத்தில் வாழுகின்றனர்.
ஆனால் தயார்படுத்தப்பட்ட அரசியல் வாதிகளும் அவர்களுக்கு உதவுகின்ற புலம்பெயர் தமிழர் அமைப்புக்களும் தமிழீழம் என்ற தனிநாட்டுக் கொள்கையையே கைவிட்டுள்ளனர். இவர்கள் விடுதலைப் புலிகளும் தனிநாட்டுக் கொள்கையைக் கைவிட்டுள்ளதாகவும் பிரசாரம் செய்கின்றனர்.
ஆனால் எமது தேசியத் தலைவரின் தீர்க்க தரிசனத்தில் வளர்ந்த, வாழ்ந்த, வாழ்ந்துகொண்டிருக்கின்ற, வாழப்போகின்ற எமது தாயக மக்கள் தற்பொழுதும் துரநோக்குடன் கூடிய நேரிய சிந்தையுடன் செயற்படுகின்றனர். தமிழனின் ஒற்றுமையைச் சிதைக்கின்றவர்கள் தொடர்பில் மக்கள் விழிப்புடனேயே இருக்கின்றனர்.
சிங்களத்தின் அமைச்சரவையில் தாத்தா சுருட்டிய பணத்தில் அப்பா அரசியல்வாதியாகி தங்கப் பாயில், தங்கத் தொட்டிலில், தங்கப் பல்லக்கில் படுத்துறங்கி பிரித்தானியாவில் சொர்கத்தைத் தேடுகின்றவர்களின் கூற்றுக்களை நம்புவதற்கு எமது மக்கள், தேசிய உணர்வற்ற ஜடங்களாக எப்பொழுதுமே செயற்பட்டது கிடையாது.
அவர்கள் தேசியத் தலைவரால் வழிப்படுத்தப்பட்டவர்கள், தலைவரின் கொள்கையுடன் வாழுகின்றவர்கள்,தமிழன் என்ற உணர்வுடையவர்கள்.
எனவே எமது மக்கள் இத்தேர்தலிலும் தமிழ்த் தேசிய ஒற்றுமையை, தேசிய உணர்வை, தமிழ் மக்களின் சக்தியை ஒன்றிணைந்து வெளிக்காட்டுவார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் மக்களுடைய ஆணைக்கு மதிப்பளித்து எமது மக்களுக்கான அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொடுபதற்கு முற்பட வேண்டும். இதனூடாகவே எங்களுடைய சுகந்திர தமிழீழ தனி நாட்டை மீட்டெடுக்க முடியும்.
“தமிழ் மக்களின் தாகம் தமிழீழத் தாயகம்”
இராவணன்

ad

ad