புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜூலை, 2015

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்த ராசபக்ச மீண்டும் போட்டியிடுகிறார் என்ற பரபரப்புக்களின் மத்தியில் தென்னிலங்கை தேர்தல் களம் சூடு பிடித்திருக்கும் இவ்வேளையில் வடக்கு கிழக்கில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் மாவட்ட ரீதியான அரசியல் கள நிலவரங்களை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

இலங்கையில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் வருடாவருடம் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற போதிலும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ். தேர்தல் மாவட்டத்தில் மட்டும் வாக்காளர் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து வருகிறது.
2000ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் யாழ். மாவட்டத்தில் 6இலட்சத்து 22ஆயிரத்து 331 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர். ஆனால் இவ்வாண்டு யாழ். மாவட்டத்தில் 5 இலட்சத்து 29 ஆயிரத்து 239 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
11தேர்தல் தொகுதிகளை கொண்ட யாழ். மாவட்டத்தில் வாக்காளர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதால் தெரிவு செய்யப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இறுதியாக தொகுதி ரீதியாக தேர்தல் நடைபெற்ற 1977ஆம் ஆண்டில் யாழ். மாவட்டத்தில் 11தொகுதிகளிலிருந்தும் 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். மாவட்ட தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்ட 1989ஆம் ஆண்டும் 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். பின்னர் வாக்காளர் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்ததை அடுத்து 2000ஆம் ஆண்டு தொடக்கம் 2010ஆம் ஆண்டுவரை 9 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் யாழ். மாவட்டத்திலிருந்து 7 உறுப்பினர்களே தெரிவு செய்யப்பட உள்ளனர்.
யாழ். மாவட்டத்தில் இம்முறை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழரசுக்கட்சியின் சின்னத்தில் போட்டியிடுகிறது. கடந்த முறை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலைச்சின்னத்தில் போட்டியிட்ட ஈ.பி.டி.பி இம்முறை ஈ.பி.டி.பியின் வீணைச்சின்னத்தில் போட்டியிடுகிறது. அங்கஜன் இராமநாதன் தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும், விஜயகலா மகேஸ்வரன் தலைமையில் ஐக்கிய தேசியக்கட்சியும் போட்டியிடுகின்றன. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட உள்ளது. ஆனந்தசங்கரியின் தலைமையில் தமிழர் விடுதலைக் கூட்டணியும் போட்டியிட உள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், சிறிதரன், சரவணபவன், சுமந்திரன், ஆகியோருடன் முன்னாள் சாவகச்சேரி டிபேர்க் கல்லூரி அதிபர் கந்தையா அருந்தவபாலன், முன்னாள் வடகிழக்கு மாகாண பிரதிகல்விப்பணிப்பாளர் என்.அனந்தராஜ், பருத்தித்துறை பிரதேசசபை உறுப்பினர் திருமதி மதினி நெல்சன் புளொட் தலைவர் சித்தார்த்தன், சட்டத்தரணி சிறிகாந்தா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
கடந்த முறை 5 நாடாமன்ற உறுப்பினர்களை பெற்றுக்கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பால் இம்முறை அதனை தக்க வைக்க முடியாது. மூன்று அல்லது நான்கு உறுப்பினர்களையே தமிழ் தேசியக் கூட்டமைப்பால் பெற கூடியதாக இருக்கும். 
வேட்பாளர் பட்டியலில் இளைஞர்களை உள்வாக்காமை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களான சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரின் போக்குகளால் மக்களுக்கு அக்கட்சி மீது ஏற்பட்டிருக்கும் வெறுப்பு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு கொள்கையில் உறுதியாக இல்லை என்ற பிரசாரம், யாழ். பல்கலைக்கழக வட்டாரங்கள் உட்பட கல்விச்சமூகத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீது ஏற்பட்டிருக்கும் அதிருப்தி, உட்பட பல காரணங்களால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செல்வாக்கு வீழ்ச்சியடைந்து வருகிறது. வேட்பாளர் தெரிவிலும் கூட சில தொகுதிகளை சரியாக பிரதிநிதித்துவ படுத்தும் வகையில் வேட்பாளர் தெரிவு இடம்பெற வில்லை. 11வேட்பாளர்களில் இளைஞர்களுக்கு இடம் வழங்கப்படவில்லை. இத்தகைய பலவீனங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாக்கு வங்கியில் சரிவை ஏற்படுத்தும் என்பதை யாரும் மறுக்க முடியாது.
மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அதிருப்திகளின் மத்தியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாக்கு வங்கியில் வீழ்ச்சி ஏற்பட்டாலும் யாழ். மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளை பெறப்போவது தமிழ் தேசியக் கூட்டமைப்பு தான்.
அதற்கு அடுத்த நிலையில் டக்ளஸ் தலைமையிலான ஈ.பி.டி.பி வாக்குகளை பெறலாம். கடந்த முறை ஆளும் கட்சியின் பலத்துடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலை சின்னத்தில் போட்டியிட்டு 47622 வாக்குகளை பெற்று 3 நாடாளுமன்ற உறுப்பினர்களை ஈ.பி.டி.பி பெற்றுக்கொண்டது. இம்முறை ஆளும் கட்சி என்ற பலம், மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வாக்குகள் இல்லாத நிலையில் ஈ.பி.டி.பி தனியாக வீணைச்சின்னத்தில் போட்டியிடுகிறது.
கடந்த தேர்தலில் 1இலட்சத்து 48ஆயிரத்து 503 பேர் வாக்களித்திருந்தனர். இம்முறை வாக்களிப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கலாம். எனவே 40ஆயிரம் வாக்குகளை பெற்றாலும் ஒரு உறுப்பினர் அல்லது 2 உறுப்பினர்களை மட்டுமே ஈ.பி;.டி.பியால் பெற முடியும்.
கடந்த தேர்தலில் மூன்றாவது இடத்திற்கு வந்த ஐக்கிய தேசியக்கட்சி இம்முறையும் அந்த இடத்தை தக்கவைத்துக்கொண்டு ஒரு ஆசனத்தை பெற்றுக்கொள்ளுமா என்பதில் சில சாதக பாதக நிலை காணப்படுகிறது. ஐக்கிய தேசியக்கட்சி இம்முறை ஆளும் கட்சி என்ற பலத்துடனும் விஜயகலா மகேஸ்வரன் பிரதியமைச்சர் என்ற பலத்துடனும் போட்டியிடுகின்றார் என்பதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீவுப்பகுதியை பிரதிநிதித்துவ படுத்தகூடிய செல்வாக்கு மிக்க வேட்பாளர் ஒருவரை நிறுத்தாத நிலையும் ஐக்கிய தேசியக்கட்சிக்கு சாதகமானவையாகும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் சட்டத்தரணி சிறிகாந்தா காரைநகரை சேர்ந்தவர் என்ற போதிலும் காரைநகரிலும் முழுத்தீவுப்பகுதியிலும் அவர் செல்வாக்கு மிக்கவர் என சொல்ல முடியாது.
ஐக்கிய தேசியக்கட்சி தலைமை வேட்பாளராக போட்டியிடும் விஜயகலா மகேஸ்வரனுக்கு இம்முறை மைத்துனரான துவாரகேஸ்ரவனின் ஆதரவு கிடைக்குமா என்ற சந்தேகங்களும் நிலவுகின்றன. இதனால் கடந்த முறை போன்று அவர் வாக்குகளை பெற மாட்டார் என்றும் கூறப்படுகிறது. இவை விஜயகலாவுக்கு பாதகமான நிலையாகும். இம்முறையும் ஐக்கிய தேசியக் கட்சி ஒரு ஆசனத்தை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் பிரசாரம் மற்றும் வேட்பாளர்களை பொறுத்தே அவர் இம்முறை ஒரு ஆசனத்தை பெறக் கூடிய அளவுக்கு வாக்குகளை பெறுவாரா இல்லையா என்பதை கூற முடியும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீது உள்ள அதிருப்தி, குறிப்பாக சம்பந்தன், சுதந்திரன் போன்றவர்களின் அரசியல் போக்கினால் ஏற்பட்டிருக்கும் அதிருப்தி, இளைஞர்கள் மத்தியில் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி கொள்கையில் உறுதியாக இருக்கிறார் என வளர்ந்து வரும் நம்பிக்கை, போன்ற காரணிகள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வாக்கு வங்கி அதிகரிக்கும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனாலும் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு யாழ். மாவட்டம் முழுவதும் ஆதரவு தளம் இருக்கிறது என கூற முடியாது. வடமராட்சி கிழக்கு, மற்றும் சில இடங்களிலேயே அவர்களின் அரசியல் நடவடிக்கைகள் காணப்படுகிறது. சுமந்திரனை தோற்கடிக்க வேண்டும் என அவர்கள் பருத்தித்துறை தொகுதியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். ஆனால் அந்த வியூகம் வெற்றி அளிக்காது என்றே நினைக்கிறேன்.
ஏனெனில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் பருத்தித்துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் என்.அனந்தராஜ் வேட்பாளர் பட்டியலில் இணைக்கப்பட்டிருப்பது தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு பாதகமான நிலைதான். அனந்தராஜ் வடமராட்சி கிழக்கு உட்பட வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, தொண்டமானாறு உட்பட பருத்தித்துறை தொகுதி முழுவதிலும் உள்ள மக்களால் அறியப்பட்டவர். இது பருத்தித்துறை தொகுதியை இலக்கு வைத்து பிரசாரம் மேற்கொள்ளும் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு பாதகமான விடயமாகும். எனினும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி இம்முறை ஒரு ஆசனத்தை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னி தேர்தல் மாவட்டத்தில் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர். இதில் கடந்த முறை தமிழ் தேசியக் கூட்டமைப்பு 3 உறுப்பினர்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 2 உறுப்பினர்களையும் ஐக்கிய தேசியக்கட்சி ஒரு உறுப்பினர்களையும் பெற்றுக்கொண்டது. வாக்காளர் எண்ணிக்கையின் அடிப்படையில் 5 தமிழர்களும், ஒரு முஸ்லீம் உறுப்பினரும் தெரிவாக வேண்டும். ஆனால் தமிழ் மக்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் ஐக்கிய தேசியக்கட்சிக்கும் வாக்களித்தன் விளைவாக 3 தமிழர்களும் 3 முஸ்லீம்களும் இம்மாவட்டத்திலிருந்து தெரிவாகினர். இம்முறையும் அதேபோன்ற நிலையே ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வன்னி மாவட்டத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக்கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி போட்டியிடும் கட்சிகளில் முக்கியமானவையாகும்.  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் செல்வம் அடைக்கலநாதன், வினோதராதலிங்கம் சிவசக்தி ஆனந்தன், ஆகியோருடன் தமிழரசுக்கட்சியின் சார்பில் வைத்தியகலாநிதி சிவமோகன், மற்றும் சாள்ஸ் ஆகியோரும் போட்டியிடுகின்றனர். இம்முறையும் தமிழ் தேசிய கூட்டமைப்பால் மூன்று உறுப்பினர்களை மட்டுமே பெறக் கூடியதாக இருக்கும்.
வன்னி மாவட்டத்தில் இம்முறை இரண்டாம் இடத்திற்கு ஐக்கிய தேசியக்கட்சி வரலாம். ஏனெனில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் மற்றும் றிசாத் பதியுதீனின் அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஷ் ஆகியன ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து போட்டியிட உள்ளன.
வன்னி மாவட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் ஒரு ஆசனத்தையும் பெற முடியாது. அக்கட்சியின் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பவர்கள் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றவர்களோ அறிமுகமானவர்களோ அல்ல. தமிழ் தேசிய கூட்டமைப்பு வன்னி மாவட்டத்தில் போட்டியிடுவதன் மூலம் தமிழ் பிரதிநிதித்துவதை குறைத்து முஸ்லீம் பிரதிநிதித்துவத்தை அல்லது சிங்கள பிரதிநித்துவத்தை அதிகரிப்பதற்கு மட்டுமே முடியும்.
திருகோணமலை மாவட்டத்தில் மூன்று தொகுதிகளிலிருந்து நான்கு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். கடந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 2 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக்கட்சியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தலா ஒவ்வொரு ஆசனங்களை பெற்றிருந்தன.
தமிழ் மக்கள் ஒரே அணியில் ஒரு கட்சிக்கு வாக்களித்தால் இரு பிரதிநிதிகளை பெற முடியும். 1989ஆம் ஆண்டும் 2004ஆம் ஆண்டும் இரு தமிழர்கள் திருகோணமலை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டனர். ஆனால் வடகிழக்கு தமிழர்களின் தலைநகரம் என கூறப்படும் திருகோணமலை மாவட்டத்தில் 2000ஆம் ஆண்டு ஒரு தமிழர் கூட தெரிவு செய்யப்படவில்லை, முஸ்லீம்களும் சிங்களவர்களுமே தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
தமிழ் கட்சிகள் பிரிந்து தனித்தனியாக போட்டியிட்டதாலும், தமிழ் மக்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக்கட்சி போன்ற கட்சிகளுக்கு வாக்களித்ததன் விளைவாக ஒரு தமிழர் கூட 2000ஆம் ஆண்டில் திருகோணமலையில் தெரிவாகவில்லை.
அந்த நிலை இம்முறையும் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் சம்பந்தன், துரைரட்ணசிங்கம், திருமதி இந்திராணி, யதீந்திரா, சரா.புனனேந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். சம்பந்தன் மீது உள்ள வெறுப்பு , தகுதியான மக்கள் செல்வாக்குள்ளவர்கள் வேட்பாளர் பட்டியலில் சேர்க்கப்படாமை, உட்பட சில காரணங்களால் இம்முறை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வாக்குகளில் வீழ்ச்சி ஏற்படும். தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் ஒரு உறுப்பினரை பெறுவதற்குரிய வாக்கை பெற முடியாது. ஆனால் திருகோணமலை மாவட்டத்தில் தமிழர் ஒருவர் கூட தெரிவாக முடியாமல் போவதற்கு உறுதுணையாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இருப்பார்கள் என்பதை உறுதி. திருகோணமலை மாவட்டத்தில் ஒன்று மேற்பட்ட தமிழ் கட்சிகள் போட்டியிட்டால் அங்கு தமிழ் பிரதிநிதித்துவத்தை தக்க வைக்க முடியாது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக்கட்சியின் சார்பில் பொன். செல்வராசா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன் ஆகியோருடன் பிரதேச கல்விப்பணிப்பாளராக பணியாற்றிய ஸ்ரீநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சௌந்தரராஜன், மற்றும் மாகாணசபை உறுப்பினர்களான துரைரத்தினம், கோவிந்தன் கருணாகரம், ஆசிரியர் வியாளேந்திரன் ஆகியோர் போட்டியிட உள்ளனர்.  கருணா, பிள்ளையான், ஆகியோர் ஹிஸ்புல்லா தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடுகின்றனர்.
மட்டக்களப்பில் செல்வாக்கற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய தமிழ் கட்சிகளுடன் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட திராவிடர் கட்சியும் போட்டியிட உள்ளன.
ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து போட்டியிட உள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்தும் ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்தும் ஒவ்வொரு முஸ்லீம் உறுப்பினர்கள் தெரிவாகலாம்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழர் விடுதலைக் கூட்டணி புதிதாக ஆரம்பிக்கப்பட்ட திராவிடர் கட்சி, ஆகியன வாக்குகளை பிரிப்பதாலும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக்கட்சி ஆகியவற்றிற்கு தமிழ் மக்கள் வாக்களிப்பதாலும் மட்டக்களப்பில் 2 தமிழர்களும் 3முஸ்லீம்களும் தெரிவாகும் நிலையும் ஏற்படலாம். 76வீதமான தமிழர்களும் 24வீதமான முஸ்லீம்களும் வாழும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 தமிழர்களும் ஒரு முஸ்லீமும் தெரிவாக வேண்டும். ஆனால் தமிழ் மக்களிடையே காணப்படும் ஒற்றுமையீனம் காரணமாக வாக்குகள் பிரிக்கப்பட்டு 3 அல்லது 2 நாடாளுமன்ற உறுப்பினர்களையே தமிழர்களால் பெற முடிகிறது.
7 உறுப்பினர்கள் தெரிவாகும் அம்பாறை மாவட்டத்தில் ஒரு தமிழர் தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்பு காணப்படுகிறது. ஆனால் அங்கு பல கட்சிகள் போட்டியிட்டால் ஒரு உறுப்பினரை கூட தெரிவு செய்ய முடியாது.
அம்மாவட்டத்தில் இம்முறை தமிழ் தேசியக் கூட்டமைப்பு, கஜேந்திரகுமாரின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, உட்பட சில தமிழ் கட்சிகள் போட்டியிட உள்ளன. பல தமிழ் கட்சிகள் அங்கு போட்டியிட்டு வாக்குகள் சிதறடிக்கப்பட்டால், ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு போன்ற சிங்கள கட்சிகளுக்கு தமிழ் மக்கள் வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் தமிழர் ஒருவர் கூட தெரிவாக முடியாது.
கடந்த பொதுத்தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 13நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தேசிய பட்டியல் மூலமாக ஒருவரையும் பெற்றிருந்தது. ஆனால் இம்முறை தமிழ் தேசியக் கூட்டமைப்பு 14 நாடாளுமன்ற உறுப்பினர்களை பெறும் என எதிர்பார்க்க முடியாது. இம்முறை 11 அல்லது 12 நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டுமே பெறக் கூடிய நிலை காணப்படுகிறது

ad

ad