புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஜூலை, 2015

இந்திய தேசமே சோகத்தில் ஆழ்ந்தது:

 
அப்துல் கலாம் மறைவுக்கு மோடி, பிரணாப், ஜெயலலிதா  உட்பட தலைவர்கள் இரங்கல்


இளைஞர்களின் விடிவெள்ளி அப்துல் கலாம் மறைவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் ஐ.ஐ.எம். கருத்தரங்கில் உரையாற்றிக் கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் அப்துல் கலாம் காலமானார். அவர் இறந்த செய்தியைக் கேட்டு ஒட்டு மொத்த இந்திய தேசமும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.

அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அவரது ஈடு செய்ய முடியாத இழப்பிற்கு தனது ஆழ்ந்த இரங்களைத் தெரிவித்துள்ளார். துணைத் தலைவர் ஹமீது அன்சாரி நாட்டின் அனைத்து பகுதிக்கும் சொந்தக்காரர் கலாம் என்றும், அவர் ஒரு தொழில் நுட்ப ஆளுமைத் திறன் மிக்கவர் என்றும் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். இதே போன்று தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி இளைஞர்களை வழி நடத்திய சகாப்தம் ஓய்ந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

உள்துறை அமைச்சர் சிங் ராஜ்நாத் சிங் தனது இரங்கல் செய்தியில், கலாம் காலமானது மிகவும் துக்கமான செய்தியென்றும், அவர் அனைவருக்கும் முன்மாதிரியாக இருந்தவர் எனவும் கூறியுள்ளார். அவரது மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு எனவும் ராஜ்நாத் கூறியுள்ளார்.

இதே போன்று மத்திய மந்திரி நிதின் கட்காரி, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் கட்சிகளைக் கடந்து அப்துல் கலாம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.கலாமின் இறுதிசடங்கு தமிழகத்திலேயே நடத்தவேண்டும் : விஜயகாந்த்

தேமுதிக தலைவர்  விஜயகாந்த் முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர்.ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அவர்களின் மறைவிற்கு இரங்கல் செய்தி :

’’முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர்.ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அவர்கள் தமிழர்களுக்கும், தமிழகத்திற்கும் கிடைத்த மிகப்பெரிய பெருமை. அண்ணாரது இழப்பு, அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பேரிழப்பாகும். அவரது இறுதிசடங்கு தமிழகத்திலேயே நடத்தவேண்டுமென்று தமிழக மக்களின் சார்பாக மத்திய, மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன். ’’  இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தவர்: வேல்முருகன்

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கலாமுக்கு இரங்கல்:

’’இந்திய நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல்கலாம் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி பெரும் துயரத்தைத் தருகிறது. 

நம் தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்த வறுமை விரட்டிய போதும் அதைக் கண்டு துவண்டு போகாமல் பள்ளி பருவத்தில் வீடு வீடாக பேப்பர்கள் போட்டு குடும்ப சுமையை ஏற்றவர். அவர் படித்தது முழுவதும் தமிழ்வழிக் கல்விதான்..

பிறப்பால் இஸ்லாமியராக இறந்தாலும் அனைத்து மத உறவுகளையும் நேசித்தவர். திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி அதனைத் தொடர்ந்து சென்னை எம்.ஐ.டி.யில் என கல்வி கற்ற பின்னர் நாட்டின் பாதுகாப்புத் துறை ஆராய்ச்சிக்கு தம்மை ஒப்படைத்துக் கொண்டார்

உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை நிலைநாட்டிய பொக்ரான்- 2 அணு ஆயுத சோதனையில் மிக முக்கியமாக பங்காற்றியவர்.. இந்த நாட்டின் உயரிய விருதுகளாள் சிறப்பிக்கப்பட்டவர்..

இந்த தேசத்தின் உயர்ந்த பதவியான குடியரசுத் தலைவர் பதவி வகித்த காலத்திலும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தவர்.. இந்த நாட்டின் 64 கோடி இளைஞர்களின் நம்பிக்கை நாயகனாக விடிவெள்ளியாக திகழ்ந்தவர்.. அவரது 'கனவு காணுங்கள்" எனும் தாரக மந்திரம்தான் இளைஞர்களின் தாரக முழக்கமாக தேசிய கீதமாக இருக்கிறது...

தமிழ் மொழியை திருக்குறளை மிகவும் நேசித்தவர்.. தமது உரைகளில் நூல்களில் திருக்குறள்களை எப்போதும் மேற்கொள்காட்டியவர்... தமது குடியரசுத் தலைவர் பதவிக் காலத்தில் தூக்கு தண்டனை தொடர்பான கருணை மனுக்களை நிராகரிக்காமல் அவற்றின் மீது முடிவெடுக்காமல் வைத்திருந்த கருணையாளர்.. பதவியில் இல்லாத காலத்தில் தூக்கு தண்டனைக்கு எதிரான கருத்துகளை முன்னெடுத்த மரண தண்டனையை ஒழித்தாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த மனித நேயப் பற்றாளர்....

நாட்டின் நதிகளை இணைக்க விரும்பியவர்.... 2020ஆம் ஆண்டு இந்தியாவை வல்லரசாக்குவோம் என்ற நம்பிக்கையோடு இயங்கியவர்.. அவர் நேசித்த மாணவர்கள் மத்தியிலேயே இன்று அவர் உயிர் பிரிந்துள்ளது.

நிறைவான வாழ்க்கை வாழ்ந்து இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக ஆழப்பதிந்து இன்று நம்மையெல்லாம் மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டு மறைந்திருக்கிறார் மாபெரும் அறிவியல் மேதை அப்துல்கலாம்..

அறிவியல் மாமேதை மேதகு அப்துல்கலாம் அவர்களின் மறைவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆழ்ந்த இரங்கலையும் அன்னாருக்கு எங்களது செம்மார்ந்த இறுதி வணக்கத்தையும் செலுத்துகிறோம்.. மேதகு அப்துல்கலாம் அவர்களது லட்சியங்களை நமது இளைய சமுதாயம் முன்னெடுத்துச் செல்ல வேண்டியதுதான் அவருக்கு நாம் செலுத்துகிற உண்மையான இரங்கலாக இருக்கும் என்பதை நினைவில் கொண்டு அவரது வழியில் நம் பயணத்தைத் தொடர வேண்டும்.’’

நேர்மை, எளிமை, அறிவுகூர்மை மிகுந்த இணையற்ற மனிதராக திகழ்ந்தவர் அப்துல் கலாம் : மு.க.ஸ்டாலின்

நேர்மை, எளிமை,அறிவுகூர்மை மிகுந்த இணையற்ற மனிதராக திகழ்ந்தவர் அப்துல் கலாம்  என தி.மு.க  பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் கூறியதாவது :

நேர்மை, எளிமை,அறிவுகூர்மை மிகுந்த இணையற்ற மனிதராக திகழ்ந்தவர் டாக்டர் அப்துல்கலாம். ஒரு தலைசிறந்த ஏவுகணை விஞ்ஞானி. இந்திய விண்வெளித்திட்டத்தில் அவரது பங்களிப்பு அனைவரையும் பிரமிக்க வைத்தது. அவரது திறமையைப் பார்த்த உலக நாடுகள் இந்தியாவின் மீது மரியாதை செலுத்தியது. அது மட்டுமின்றி உலக நாடுகள் எல்லாம் நம்மை திரும்பிப் பார்க்க வைத்தவர் டாக்டர் அப்துல் கலாம். ஏவுகணை மற்றும் பாதுகாப்பு திட்டங்களில் அவர் ஆற்றிய பங்கு அதை விட முக்கியமானது. இந்த தொழில்நுட்பத்தில் அவர் நிகழ்த்திய சாதனைகள் உலகில் மிகவும் முன்னேறி விட்ட ராணுவத்திற்கு இணையாக நம் ராணுவத்தை உயர்த்தியது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் ஆற்றிய ஆர்வமூட்டும் உரைகள் சின்னஞ்சிறு பள்ளிக் குழந்தைகளையும், இளைஞர்களையும் தங்களுக்காகவும், தங்கள் நாட்டிற்காகவும் கனவு காண வைத்தது. "எதையும் சாதிக்கும் திறமை இந்தியாவிற்கு இருக்கிறது" என்பதை உலக நாடுகளுக்கு உணர்த்தி, நம் நாட்டிற்கு உலக அரங்கில் மரியாதையும், பெருமையும் தேடித் தந்தவர். ராமேஸ்வரத்தில் பிறந்து, கனவுகளுடன் வளர்ந்து இந்தியாவின் குடியரசுத் தலைவரான எளிமையான சிறந்த மனிதர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் பெருமைகளை நம் நாடு நினைவில் வைத்திருப்பதோடு, அவருக்கு என்றும் நன்றிக் கடன் பட்டிருக்கும். டாக்டர் கலாம் அவர்கள் தான் மட்டும் கனவு காணவில்லை. இந்த நாட்டின் இளைய தலைமுறையையும் "கனவு கணுங்கள். சாதிக்க முடியாதது எதுவும் இல்லை" என்று உணர்வுகளை தட்டி எழுப்பியிருக்கிறார். இன்றைய தினம் அவர் நம்மிடம் இல்லை. அவரது மறைவு நமக்கு எல்லாம் பேரிழப்பு. எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.அதே நேரத்தில் இந்தியாவை தொழில்நுட்ப ரீதியாக முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்று பாடுபட்ட டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் கனவுகளை நிச்சயம் நிறைவேற்றி, அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியைக் காண்போம் என்று இந்த நேரத்தில் உறுதியேற்றுக் கொள்வோம். இவ்வாறு கூறியுள்ளார்.அப்துல் கலாம் பதிவிட்ட கடைசி ட்வீட்!


முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சற்றுமுன் நம்மை விட்டுப் பிரிந்தார். இந்தியாவில் மாணவர்களால், இளைய தலைமுறையினரால் அதிகம் நேசிக்கப்பட்ட ஒரே குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்தான்அப்துல் கலாம் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல்

கவிஞர் வைரமுத்து  இரங்கல் செய்தியில் கூறியதாவது 

இதயத்தை இறுக்கிப் பிடித்தபடி இந்த இரங்கல் செய்தியை எழுதுகிறேன்.

எங்கள் குடும்பத்தின் மூத்த தலைமகனின் வாழ்வு முடிந்துவிட்டதாய் உடைந்து நிற்கிறேன். இந்தியாவிற்கு வெளியே இந்தியாவின் அறிவடையாளமாய் விளங்கிய ஒரு ஞானப் பெருமகன் நம்மிடையே இனி இல்லை என்பதை நம்பமுடியவில்லை. 

இந்தியாவின் கடைக்கோடியில் கடைசிக் குடிமகனாய்ப் பிறந்து இந்தியாவின் முதற்குடிமகனாய் உயர்ந்தது சந்தர்ப்பத்தால் வந்தது அல்ல; சாதனையால் வந்தது.

அணு விஞ்ஞானி அப்துல் கலாம் பெருமுயற்சியால் இந்தியா தன் சொந்த ஏவுகணையைச் செலுத்தியபோது வெள்ளைமாளிகையே அண்ணாந்து பார்த்தது. அவர் அறிவின் துணையால் பொக்ரான் அணுகுண்டு சோதிக்கப்பட்டபோது வல்லரசுகளெல்லாம் மூக்கின்மேல் விரல் வைத்தன. அரசியலுக்கு வெளியே இருந்து அவர் குடியரசுத் தலைவர் ஆனபோது இந்தியாவே எழுந்து நின்று கைதட்டியது. தாய்மொழிவழி கல்வி கற்ற ஒருவர் தாயகத்தையே ஆளமுடியும் என்ற அரிய சாதனையை நிகழ்த்தியவர் அப்துல் கலாம்.

அவர் படிப்பில் ஞானி. பழக்கத்தில் குழந்தை.  நாற்பது பல்கலைக் கழகங்களின் டாக்டர் பட்டம் பெற்றும் அதைத் தன் தலையில் சூடிக்கொள்ளாதவர். இந்த நூற்றாண்டில் இளைய சமுதாயத்தின் கனவு நாயகன். இளைஞர்களைக் கனவு காணச் சொன்னவர். தூங்கிக் காண்பதல்லை கனவு; உங்களைத் தூங்க விடாததே கனவு என்று லட்சியத்திற்கு இலக்கணம் எழுதியவர்.

தன் கடைசி நிமிடம் வரை இளைஞர்களுக்குக் கற்றுக் கொடுப்பதிலேயே அவரது காலம் கழிந்திருக்கிறது. சென்ற ஆண்டு என் மணிவிழாவிற்கு வந்து வாழ்த்திய பெருமகனுக்கு ஒரு மாலை அணிவித்தேன். அந்த மாலைகூடத் தனக்குச் சொந்தமாகிவிடக்கூடாது என்று அதை எனக்கே அணிவித்துவிட்ட புனிதர் அவர்.

அவர் பிரம்மச்சாரிதான், ஆனால் இந்தியாவே அவரது குடும்பம். அவர் எந்தச் செல்வத்தையும் சேர்த்து வைக்கவில்லை. அவரது ஞானச் செல்வம்தான் அவர் இந்தியாவிற்கு எழுதி வைத்திருக்கும் சொத்து.

தடம்மாறும் சமூகமும், தடுமாறும் அரசியலும் அப்துல் கலாமின் ஒழுக்க நெறிகளைப் பின்பற்றினால் நாடு நலம்பெறும். அப்துல் கலாம் இந்தியாவிற்கு எழுதிவைத்துப் போகும் மரண வாசகம் இதுவாகத்தான் இருக்கும்.

அப்துல் கலாம் தன் செயல்களால் வாழ்ந்துகொண்டேயிருப்பார். தேசத்தின் நதிகளிலும், மலைகளிலும், மரங்களிலும், மலர்களிலும், மக்கள் மனங்களிலும் அவர் வாழ்ந்து கொண்டேயிருப்பார்.

அய்யா அப்துல்கலாம் அவர்களே உங்கள் புகழை வாழ்நாளெல்லாம் உயர்த்திப்பிடிக்கும் திருக்கூட்டத்தில் ஒருவனாய் நானும் இருப்பேன்.

கண்ணீரோடு வணங்குகிறான் அய்யா உங்கள் வைரமுத்து. இவ்வாறு கூறியுள்ளார்.

ad

ad