புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஆக., 2015

கனடாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான ஆதரவு கூட்டம் - 2016இல் அரசியல் தீர்வை பெற்றுத் தருவோம்: இரா. சம்பந்தன


"தமிழ் பேசும் மக்கள் வடக்கு, கிழக்கில் இம்முறை நல்லதொரு வெற்றியை ஈட்டித் தரவேண்டும். அப்படித் தருவார்களானால் 2016 ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை நிச்சயம் பெற்றுத்தருவோம். எமது இலக்கு 20 ஆசனங்களாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
ரொறன்ரோவில் தமிழ்த் ததேசியக் கூட்டமைப்பு (கனடா) ஒழுங்கு செய்த இரவு விருந்தில் தொலைபேசி வாயிலாக பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த இரவு விருந்து மார்க்கம் நியூ யஸ்மின் விருந்து மண்டபத்தில் ஓகஸ்ட் 2 ஆம் நாள் மாலை இடம் பெற்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (கனடா) இன் ஆதரவாளர்கள், நண்பர்கள் இந்த நிகழ்வில் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டனர்.
மங்களல விளக்கைப் போரால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைகளுக்குமான நடுவம் இயக்குநர் அன்ரன் பிலிப், அம்பிகா நகை மாளிகை உரிமையாளர் திருமதி ஜெயா இன்பநாயகம், கனடிய தமிழர் பேரவைத் தலைவர் இரா. தவரட்ணசிங்கம், ஓம்காரானந்தா, நடேசபிள்ளை சுபதரன் ஆகியோர் ஏற்றிவைத்தனர்.
அதனைத் தொடர்ந்து இசை ஆசிரியர் கமலா சண்முகலிங்கம் அவர்களின் மாணவன் துஷாந்தன் சிறிஸ்கந்தராசா அவர்களால் தமிழ்மொழி வாழ்த்து, கனடிய தேசியப் பண் பாடப்பெற்றன.
தமிழீழ விடுதலைப் போரில் தங்கள் இளைய இனிய உயிர்களை ஈகை செய்த மாவீரர்கள் பொதுமக்கள் நினைவாகவும் முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிப் போரின் போது கொடூரமான முறையில் கொன்றொழிக்கப்பட்ட உறவுகள் நினைவாகவும் உலகளாவிய தமிழ் மொழிப் போராளிகள் நினைவாகவும் சில பொழுதுகள் அக வணக்கம் அனுட்டிக்கப்பட்டது.
அடுத்து வரவேற்பு நடனத்தை செல்வன் நிஷாந்தன் மற்றும் நடன ஆசிரியர் திருமதி வனிதா அவர்களின் மாணவிகள் வழங்கினார்கள்.
நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்தவர்களை வரவேற்று ததேகூ (கனடா) இன் பொதுச் செயலாளர் வி.எஸ். துரைராசா உரை நிகழ்த்தினார். கூட்டமைப்பின் தலைவர் கதிரவேலு குகதாசன் தலைமை உரை ஆற்றினார்.
தொடர்ந்து பேசிய இரா. சம்பந்தன்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது அரசியல் பயணத்தை முடிக்க விரும்புகிறது. எம்மைப் பொறுத்தவரை எமது அரசியல் பயணத்தை தொடர்ந்தும் நீடிக்க முடியாது. அதனை முடிக்க விரும்புகிறோம்.
 எதிர்வரும் ஓகஸ்ட் 17 இல் நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்தல் ஆகும்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள 20 ஆசனங்களை ததேகூ ப்பு பெற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு 20 ஆசனங்களை பெற்றுக்கொள்ளும் போது எங்களால் வலுவான நிலையில் இருந்து அரசாங்கத்தோடு பேசமுடியும்.
அதற்கு மக்கள் ஆதரவு எமக்கு வேண்டும். இந்தத் தேர்தல் மூலம் ஏற்படும் விளைவுகள் எதிர்காலத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே இந்தத் தேர்தலை எமது அரசியல் பயணத்தில் முக்கியமான மைல் கல்லாக கருதுகிறோம்.
"எமது இனப்பிரச்சினைக்கான தீர்வாக, ஒன்று பட்ட இலங்கைக்குள்ளே எம்மை நாமே ஆளக்கூடிய சமஷ்டி அரசியல் அமைப்பு முறையிலான அரசியல் தீர்வை 2016 ஆம் ஆண்டளவில் பெற்றுக்கொள்ள முடியும்.
ததேகூ (கனடா) ஒழுங்கு செய்துள்ள இரவு விருந்து நிகழ்ச்சிக்கு எனது மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தல் பிரச்சாரம் காரணமாக நிகழ்சியில் நேரடியாகக் கலந்து கொள்ளாததற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
அடுத்து வடக்கு மாகாண சபை நல்வாழ்வு அமைச்சர் மருத்துவர் ப. சத்தியலிங்கம் ஸ்கைப் மூலம் உரையாற்றினார்.
தொடர்ந்து தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, கிழக்கு மாகாண வேளாண்துறை அமைச்சர் கி. துரைராசசிங்கம் உரையாற்றினர்.
பேராசிரியர் யோசேப் சந்திரகாந்தன் அடிகளார் பேசும் போது மூன்று முக்கிய விடயங்களை வற்புறுத்தினார்.
(1) இலங்கைத் தீவிலுள்ள தமிழர்களின் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு சாதகமான நிலைமை ஓன்று உருவாகியுள்ளது. உலக நாடுகள் குறிப்பாக மேற்குலக நாடுகள் எமது பிரச்சனை தொடர்பாக நல்ல கவனம் எடுத்து இயங்கி வருகின்றார்கள். இது எமக்கு மிகவும் சாதகமான ஒரு போக்காகும்.
(2) இப்போதைக்குப் போர்க் குற்றம், மனித உரிமை மீறல்கள் என்பவற்றை அதிகம் முன்னிலைப் படுத்தாது, தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெற்றி பெறச் செய்து, அவர்களின் பலத்தை நாடாளுமன்றத்தில் அதிகரித்து அவர்களது பேரம் பேசும் சக்தியை வலுப்படுத்த வேண்டும்.
(3) இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் நாம் தொடர்ந்து தக்க வைக்க வேண்டும். அதன் பொருட்டு புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கரங்களைப் பலப் படுத்த வேண்டும்.
அடுத்து சிறப்புரை வழங்கிய நக்கீரன் சனவரி 8 இல் இடம் பெற்ற ஆட்சி மாற்றத்தினால் எந்தவித நன்மையும் இல்லை எனச் சிலர் சொல்கிறார்கள்.
ஜனாதிபதி தேர்தலைப் புறக்கணியுங்கள் ராஜபக்சவுக்கும் சிறிசேனவுக்கும் வித்தியாசம் இல்லை. பெயரில்தான் வித்தியாசம் என்று சொன்னவர்கள்தான் ஆட்சி மாற்றத்தினால் தமிழ்மக்களுக்கு ஒரு நன்மையும் இல்லை என்று சொல்கிறார்கள்.
ஆட்சி மாற்றம் காரணமாக வலிகாமம் வடக்கில் 6382 ஏக்கர் நிலத்தில் 1,033 ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டுள்ளது.
சம்பூரில் 816 ஏக்கர் காணி சொந்தக்காரர்களுக்கு மீளக் கொடுக்கப்பட்டுள்ளது. 237 ஏக்கர் கொண்ட முகாமை கைவிட்டு வேறு இடத்துக்குப் போக கடற்படை ஒத்துக் கொண்டுள்ளது.
மலையகத் தமிழர்களுக்கு இந்த அரசு முதன் முறையாக வீடுகள் கட்டிக் கொடுக்க முன்வந்துள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக எமது மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்காவிட்டாலும் நிம்மதியாக மூச்சு விட அவர்களால் முடிகிறது.
வெள்ளைவான், கழிவு எண்ணெய், கிறீஸ் பூதம் இப்போது இல்லை. பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இராணுவத்துக்குக் கொடுக்கப்பட்ட பொலீஸ் அதிகாரங்கள் பிடுங்கப்பட்டுள்ளன.
சம்பந்தன், சுமந்திரன் போன்ற அறிவாளிகள், சட்டம் படித்தவர்கள், சர்வதேச சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்வர்கள் எமது அரசியலுக்கு தலைமை தாங்குவதையிட்டு நாம் பெருமைப் படவேண்டும். "வடக்குக்கும் கிழக்குக்கும் பாலமாக விளங்கும் சம்பந்தன் ஐயா காலத்தில் வாழ்வதையிட்டு நான் பெருமைப் படுகிறேன்" எனக் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து கலந்து கொண்ட பன்னாட்டு தமிழ் உறவு மன்றத்தின் நிறுவனர் பெருங்கவிக்கோ சேதுராமன் அவர்களுக்கும்
இரவிச்சந்திரன் சுவாமிஜி அவர்களுக்கும் பொன்னாடை அணிவித்து மதிப்பளிக்கப்பட்டனர்.
அடுத்து ததேகூ (கனடா) இன் துணைச் செயலாளர் முருகேசு தியாகலிங்கம் பேசினார். நன்றியுரையை வீரசுப்பிரமணியம் ஆற்றினார்.

ad

ad