புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஆக., 2015

முற்றுகைகளை உடைத்து வெல்லட்டும் தமிழ்த் தேசியம்!


இது தேர்தல் காலம், குழப்பம் விளைவிக்க உகந்த காலம். தற்போது, தமிழீழ மண்ணிலே, தேசியக்கூப்பாடுகள் அதிகம் கேட்கின்றன. தமிழ்த் தேசியக்கூட்டமைப்பையும், அதன் தலைமையையும் தோல்வியுறச் செய்ய, பலமுனையில் முயற்சிக்கப்படுகின்றன.
அதற்காக, தேசியத்தின் மீது அதீத பற்றுக்கொண்டவர்களாக தம்மைக் காட்டிக்கொள்ளும் சிலர் தீவிரமாக முயற்சி எடுத்து வருகின்றனர். புலம்பெயர் சமூகமும் தம்மோடு இருப்பதாக அவர்கள் காட்டிக்கொள்ள முனைகின்றனர்.  அவர்களின் பிரச்சாரத்திற்கு உகந்தவகையில், வெளிநாடுகளிலும், தங்கள் தலைமை எதுவென்று தெரியாத அறியாத சில குழுக்கள், செயற்படுகின்றன
உண்மையில், அவற்றில் அங்கம் வகிப்பவர்களுக்கு, தம்மை இயக்குவது யார் என்றே தெரிவதில்லை. அதைப்பற்றிய ஒரு ஆராய்விலும் அவர்கள் இறங்குவதில்லை. அதற்கான தேவையும் அவர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. இவர்கள், எதைப்பற்றியும் ஆழ்ந்து நோக்குவது இல்லை. நல்லது கெட்டவற்றை அலசுவதும் இல்லை. இவர்கள் ஒரு சிலர், குழுக்களாக இயங்குகின்றனர்.
அறிவுக்குருடர்களாக இவர்களின் குருட்டுத்தனமான விசுவாசிகளாக சிலர். இவர்கள்தான் தம்மை புலம்பெயர் சமூகம் எனக் காட்டிக்கொள்ள முனைகின்றனர். மாவீரர்களின் தியாகத்தில், மக்களின் தியாகத்தில் குளிர்காய முனைகின்றனர்.
புலம்பெயர் சமூகம் என்றால் என்ன? அதனை வழிநடத்துபவர்கள் யார்?
உண்மையைக் கூறுவதானால், புலம்பெயர் சமூகத்தை யாரும் வழிநடத்தவில்லை. அடிப்படையில் பலம் பொருந்திய சக்தியான புலம்பெயர் சமூகம் ஒரு தலைமையின் கீழ் இல்லை. அது கூறுபட்டுக் கிடக்கின்றது. சுயநலம்மிக்க சிலர், சில குழுக்கள், புலம்பெயர் மக்களின் பிரதிநிதிகளாக தம்மை முன்னிலைப்படுத்த முனைப்புக்கொண்டுள்ளனர்.
தம்மிடம் இருக்கக்கூடிய பணபலம் மற்றும் அதிகாரபலம், ஊடகபலம் என்பனவற்றின் துணையுடன், போலித்தனமான தோற்றத்தை அவர்கள் காண்பிக்க முனைகின்றனர். ஆனால், உண்மை நிலவரம் அதுவல்ல. இவர்கள் காட்ட நினைக்கும் படத்திற்கு முற்றிலும் மாறானது அது.
புலம்பெயர்ந்த சமூகம், தமிழ்த்தேசியக்கூட்டமைப்புடனேயே ஐக்கியப்பட்டு நிற்கின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளை தமது தேசிய விடுதலை இயக்கமாக ஏற்றுக்கொண்டு, ஆதரித்த புலம்பெயர் மக்கள், முள்ளிவாய்க்காலின் பின்னர், தமிழ்மக்களுக்கு இருக்கக்கூடிய ஒரே ஆதாரசக்தியாக ஆறுதலாக கூட்டமைப்பினையே நம்பியிருக்கின்றனர். அதனை மேலும் பலப்படுத்தி, செழுமைப்படுத்தவே புலம்பெயர் சமூகம் விரும்புகின்றது.
கடந்துபோன ஒவ்வொரு தேர்தல்களிலும், கூட்டமைப்பின் வெற்றிக்காகவே புலம்பெயர் சமூகம் பாடுபட்;டது. புலம்பெயர்ந்த சமூகம் என்னும்போது, களத்தில் இருந்து, இறுதிப்போர்வரையும் சிங்கள இராணுவத்துடன் போர்புரிந்து, புலம்பெயர்ந்து வந்திருக்கின்ற போராளிகளும் அதில் அங்கம்.
தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில், தேசியம் சிதைந்துவிடாமல் காப்பதற்கான அரசியல் தளம் கூட்டமைப்பு என்பதில் உறுதியாக இருக்கும் புலம்பெயர்சமூகம், காலம் சூழலில் தங்கியிருக்கும் எதிர்காலப் போராட்டத்தின் வடிவம் எப்படியிருப்பினும், தற்போதைய சூழலில், கூட்டமைப்பின் பலம் அதிமுக்கியமானது என்பதில் உறுதியாக உள்ளது.
சிங்கள ஆட்சியாளர்கள் எதிர்பார்த்ததுபோல், சதிதிதிட்டங்கள் போட்டு முயன்றதுபோல், முள்ளிவாய்க்காலின் தொடர்ச்சியாய் தமிழ்த்தேசியம் சிதைந்து மறைந்துபோய்விடாமல், பாதுகாத்து வைத்திருப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே.
தமிழ்த் தேசியத்தைச் சிதைக்க, சிங்கள ஆட்சியாளர்கள், விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தவர்களைக்கூட அவர்களின் இக்கட்டான நெருக்கடியான சூழ்நிலையை தூக்கிநிறுத்தி நிர்ப்பந்தித்து பயன்படுத்தியதுபோல், கூட்டமைப்பிற்குள் ஊடுருவியும், சிலரைப் பிரித்தெடுத்தும் முனைந்தது.
புலம்பெயர்ந்த மண்ணில் இருந்தும், சில குழுக்களுக்கூடாக சில தனிநபர்களுக்கூடாக சிங்கள அரசு முனைந்தது. ஆனால், தமிழ்மக்கள், உறுதியுடனும் தெளிவுடனும் இருந்தபடியால், சிங்களத்தின் முயற்சிகள் தோல்வியைத் தழுவின.
கூட்டமைப்மைச் சிதைப்பதில் முன்னின்று உழைத்த சிங்களத்தின் ஒட்டுக்குழுக்கள், மக்களால் முற்றாக நிராகரிக்கப்பட்ட நிலையில், தற்போது, தமிழர் பலத்தைசிதைப்பதில் முன்னிற்கின்ற அணிகளில் முக்கியமானது தமிழ் தேசிய மக்கள் முன்னணியே.
முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்த அடுத்த ஆண்டே, கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்று, கூட்டமைப்புக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கிய கஜேந்திரகுமார் தலைமையிலான அந்த அணியினர், இன்றுவரை சுறுசுறுப்புடன் ஈடுபட்டுவருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக வெளிநாடுகளிலும், தமிழ் நாட்டிலும் சிறு சிறு குழுக்கள். இவர்களுக்கிடையேயான செற்பாடுகளும், ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டதாக இருக்கும்.
உதாரணத்திற்கு, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மற்றும் மாகாணசபைத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் என்பவற்றை நிராகரித்தல் விடயத்தில், உப்புச்சப்பில்லாத விளக்கங்களுடன், அவர்களின் நிலைப்பாடுகள் அச்சுப்பிசகாத வகையில் ஒத்ததாகவே இருந்தன.
சிறீலங்கா அரசிற்கு எதிராக அமெரிக்க அரசு கொண்டுவந்த தீர்மானத்தை எதிர்ப்பதிலும், எரிப்பதிலும், இம்மூன்று தரப்பும் ஒரே அலைவரிசையிலேயே சிந்தித்தன செயற்பட்டன. சம்பந்தர், சுமந்திரன் கொடும்பாவிகளை எரிப்பதிலும் அவர்கள் தமக்கிடையேயான ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.
கஜேந்திரகுமார் தலைமையிலான அணியினரின் முன்னுக்குப்பின் முரண்பாடான செய்பாடுகளில் ஒருசிலவற்றை அலசிப்பார்ப்பது இங்கு பொருத்தமானது.
அமெரிக்கத் தீர்மானத்தை ஜெனீவா சென்று கடுமையாக எதிர்த்துப் பிரச்சாரம் செய்தவர்கள் இவர்கள். அத்தத் தீர்மானத்தின் பிரதிகளை, கொழுத்தியவர்கள் இவர்கள். அந்தத்தீர்மானத்தில் தமிழர் என்ற சொல் இல்லை ஆகவே ஏற்றுக்கொள்ள முடியாது என, இராஜதந்திர மொழியறிவற்ற அனந்தி போன்றவர்கள் கூப்பாடு போட்டார்கள்.
ஆனால், தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஐ.நா.விசாரணை நடைபெற்ற போது, தமிழ் மக்களுக்குக் கிடைத்திருக்கின்ற மிகச்சிறந்த சந்தர்ப்பம் இதுவெனவும், மக்கள் தமிமிடம் தொடர்புகொண்டு, சாட்சிசொல்ல முன்வரவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்து, கூச்சமே இல்லாமல், சூழ்நிலையை தமக்குச் சாதகமாக்க முனைந்தனர்.
தமது ஐந்தாண்டுகால வேலைத்திட்டமாக, ஐ.நா.தீர்மானம் வெற்றிபெற உழைத்தமாக, அக்கட்சியைச் சேர்ந்த மணிவண்ணன் என்பவர் அண்மையில் தெரிவித்திருந்தார். இதைப்போன்ற அயோக்கியத்தனம் வேறு ஏதும் இருக்கமுடியுமா. உண்மையில், அவர்களின் முயற்சி வெற்றிபெற்றிருந்தால், ஐ.நா.தீர்மானம் வந்திருக்கவும் மாட்டாது, விசாரணையும் நடைபெற்றிருக்கமாட்டாது.
தமிழர் பிரச்சினை சர்வதேச மயப்படவும், ஐ.நா.வின் வாசல் கதவைத் தட்டவும், பல்லாண்டுகாலம் சளைக்காமல் அரும்பணியாற்றியவர்கள், இவர்களின் உரிமை கோரல்குறித்து இவர்கள் மீது அருவருப்பே கொள்வர்.
வடமாகாணசபைத் தேர்தலை புறக்கணிக்குமாறு மக்களிடம் வலியுறுத்தினர். மக்கள் அவர்களின் கோரிக்கையை ஏற்றிருந்தால், விக்னேஸ்வரனின் இடத்தில் இன்று டக்ளஸ் தேவானந்தா வீற்றிருந்துகொண்டு, தமிழ்மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் எந்தவித பிரச்சினையும் இல்லை. நாங்கள் ஒற்றுமையாக இருக்கின்றோம் ஆகவே எங்கள் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாதீர்கள் என்று சர்வதேச சமூகத்தை நோக்கி வேண்டுகோள் விடுத்திருப்பார்.
முள்ளிவாய்க்காலின் பிரதிபலிப்பை காட்டும் விதமாக, புலிகளிடம் இருந்து தமிழ்மக்களை பாதுகாத்தேன் என்ற ராஜபக்சவின் அப்பட்டமான பொய்ப்பிரச்சாரத்தை முறியடிக்கும் விதமாக, சிங்களத்தின் ஒரு காயைக்கொண்டு மறுகாயை அடித்து வீழ்த்தியதுபோல், இராஜதந்திர நகர்வின் அடிப்படையில், கூட்டமைப்பு எடுத்த முடிவு, ராஜபக்சவிற்கு அவமானகரமான தோல்வியைக் கொடுத்தது.
தமிழ்மக்கள் தமது வெறுப்பை, கோபத்தை, வாக்குகளின் ஊடாக வெளிப்படுத்தி, ராஜபக்சவை வீழ்த்தினர். தமிழ்மக்களை புலிகளிடம் இருந்து மீட்டேன் எனக் கூறிவந்த ராஜபக்ஸ்ச தமிழ்மக்கள் தன்னைத் தோற்கடித்துவிட்டனர் எனப் புலம்பும் நிலை ஏற்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை எதிர்த்து, பிரச்சாரம் செய்ததுடன், இது எமக்கான தேர்தல் இல்லை சிங்களத்தின் தேர்தல் எனவே மக்கள் இதனைப் புறக்கணியுங்கள் என்று, மக்கள் முன்னணியினர் பிரச்சாரம் செய்தனர்.
அவர்களின் பேச்சைக் மக்கள் கேட்டிருந்தால், இன்று ராஜபக்ஸ்சவின் கொடுங்கோல் ஆட்சி நீடித்திருக்கும். மக்கள் சற்று மூச்சுவிடுவதற்கான இடைவெளிகூட ஏற்பட்டிருக்காது. தமிழ்மக்கள் தொடர்பில் ராஜபக்ஸ்ச செய்துவந்த சர்வதேசப் பிரச்சாரம் எடுபட்டிருக்கும்.
இதில், நகைப்பிற்கிடமான விடயம் என்னவென்றால், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம், கனடாவில் இருந்து செயற்படும் தமிழ் வானொலி ஒன்று அண்மையில் செவ்வி கண்டிருந்தது. அதில், முன்னைய தேர்தல்களைப் புறக்கணித்த நீங்கள் தற்போதைய தேர்தலில் ஏன் போட்டியிடுகின்றீர்கள் என கேள்வி கேட்கப்பட்டிருந்தது.
அதற்குப் பதில்கூறிய கஜேந்திரகுமார், ராஜபக்ஸவின் கொடூர ஆட்சியில், தமக்கு பெரும் நெருக்கடிகள் இருந்ததாகவும், ஒரு சனநாயக இடைவெளி இருக்கவில்லை எனவும், ஆனால் தற்போதைய சூழ்நிலையில் அதற்கான சூழல் அமைந்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
ஆக, கஜேந்திரகுமார் அணியினர், தமிழ்மக்களுக்கு சாதகமான சூழலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்படுத்த முனைகின்ற போதெல்லாம், அதனை எதிர்ப்பதும், முட்டுக்கட்டை போடுவதும், பின்பு, கூட்டமைப்பின் நிலைப்பாட்டால் ஏற்படக்கூடிய நல்ல சூழ்நிலைகளைத் தமக்கு சாதகமாக பயன்படுத்த முனைவதும், அவர்களின் நேர்மைத்தன்மையை காட்டவில்லை. இது அவர்களின் சுத்த அயோக்கியத்தனத்தைக் காட்டுகின்றது.
உண்மையில் இவர்கள், தெரியாமல் புரியாமல்தான் இப்படிச் செயற்படுகின்றார்கள் என்றால், விளக்கமேயில்லாத இவர்கள் மக்களை வழிநடத்தத் தகுதியற்றவர்கள். மாறாக தெரிந்தே, திட்டமிட்டுத்தான் இவர்கள் இதனைச் செய்கின்றார்கள் என்றால், இவர்கள், ஏதோ ஒரு பின்னணியில், தமிழ்த் தேசிய இனத்திற்கு விரோதமான ஏதோ ஒரு சக்தியின் தூண்டுதலில் செயற்படுகின்றார்கள் என்று அர்த்தம்.
அதனைவிட, தான் என்ற தன்முனைப்பு காரணமாக, தனிப்பட்ட விரோதம் கோபதாபம் பொறாமை காரணமாக, கூட்டமைப்பின் ஒவ்வொரு நகர்வையும் எதிர்க்கவேண்டும் என்ற காரணத்திற்காக செயற்படுவதாயின் இவர்கள் பொதுத்தளத்திற்குப் பொருத்தமற்றவர்கள். இவர்கள் உண்மையில் நேர்மையானவர்களாகவும், தேசிய விசுவாசம் கொண்டவர்களாகவும் இருந்தால், எல்லாவற்றையும் சிந்தித்து, செயற்படவேண்டும். முக்கியமாக மக்களின், நிலை அவர்களின் எதிர்காலம் குறித்து சிந்தித்துச் செயற்படவேண்டும்.
சுத்தமான தேசியம் பேசும் நீங்கள், கூட்டமைப்பைக் கண்மூடித்தமாகச் சாடும் நீங்கள். கடந்த ஐந்தாண்டு காலத்தில் என்ன செய்தீர்கள்?
மக்களை அணிதிரட்டி என்னென்ன போராட்டங்களைச் செய்தீர்கள்?
சமூக, கலாச்சாரச் சீர்கேடுகளை களைவதற்கு முயற்சிகள் ஏதும் எடுத்தீர்களா?
மாவீரர் குடும்பங்கள், போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாரத்திற்கு வழியேற்படுத்துவதற்கு சிறிதளவாவது முயற்சி மேற்கொண்டீர்களா?
குறைந்தபட்சம், இளைஞர்களைச் திரட்டிச்சென்று, மக்களிற்கு அவர்கள் குடிசைகள் அமைத்துக் கொடுப்பதற்கு உடல்உழைப்பையாவது வழங்கினீர்களா?
சட்டத்தரணிகளைக் கொண்டிருக்கும் உங்கள் அணியினர் சிறைகளில் வாடும் தமிழ் இளைஞர் யுவதிகளை விடுவிடுக்க முயற்சிகள் எதனையேனும் மேற்கொண்டீர்களா?
சர்வதேச நாடுகளுக்குச் சென்று நீங்கள் ஆற்றிய உருப்படியான பணிகள் ஏதாவது உண்டா?
கூட்டமைப்பை நோக்கிக் குற்றஞ்சாட்டும் நீங்கள், மக்கள் மத்தியில், மக்களோடு மக்களாக மக்கள் பணி செய்தீர்களா? என்ற கேள்விகளுக்கு உங்களிடம் பதில் இல்லை.
நாடாளுமன்றம் சென்றுதான் இவற்றைச் செய்யவேண்டும் என்ற தேவையில்லை. மாறாக மக்களால் தெரிவு செய்யப்பட்டு, மக்கள் பிரதிநிதிகளாக நீங்கள் வலம்வந்தால், நிலைமை மிகமோசமான குழப்பத்தையடையும் என்பதே, பொதுவாக மக்களின் கவலை.
இரண்டாயிரத்து பத்தாம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, முதல்முதலாக பிரிந்து களமிறங்கியபோது, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பகிரங்கமாகவே தமிழ் வானொலியில் தெரிவித்திருந்தார், தமது முதல் இலக்கு, சம்பந்தனையும், மாவையையும், சுரேஸ்பிரேமச்சந்திரனையும் தோற்கடிப்பதே என்று. ஆக, இவர்களின் இலக்கு மிகக் தெளிவானது.
விடுதலைப் புலிகளின் மாற்றாக தம்மைக் காட்டிக்கொள்ள முனையும் இவர்கள், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தேசியக் கொள்கையைக் கைவிட்டு, சரணாகதி அரசியலை நடத்துவதாகவும் குற்றஞ்சாட்டுகின்றனர். மக்களுக்கும் போராட்டத்திற்கும் துரோகம் செய்கின்றது கூட்டமைப்பு எனக் கூப்பாடு போடுகின்றனர்.
உண்மையில், தேசியக்கூட்டமைப்பு தம்மை விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளாக ஒருபோதும் பறைசாற்றவில்லலை. விடுதலைப் புலிகளின் கொள்கையை முழுமையாகப் பிரதிபலிக்கும் கட்சியாக கூட்டமைப்பு தோற்றம் பெறவில்லை.
சிங்களப் பாராளுமன்றத்திலும், சர்வதேச அரங்கிலும் தமிழ் மக்களின் போராட்ட நியாயத்தை எடுத்தியம்பும் ஒரு செயற்பாட்டையே கூட்டமைப்பு அன்றும் செய்தது. இன்றும் செய்கின்றது. இதைத் தாண்டி சிங்களப் பாராளுமன்றத்திற்குச் செல்லும் எத்தத் தமிழ்க் கட்சிகளாலும் பெரிதாக எதுவும் செய்துவிடமுடியாது.
உண்மையில், விடுதலைப் புலிகளின் மாற்றாக தம்மை காட்டிக்கொள்ள முனையும் இவர்கள்தான், தமிழீழக் கோரிக்கையைக் கைவிட்டு. மாவீரர்களுக்கு துரோகம் செய்தபடி, சிறீலங்காவின் ஒற்றையாட்சிக் கோட்பாட்டை ஏற்றுக்கொண்டு, சிறீலங்காப் பாராளுமன்றம் செல்லத்துடிக்கின்றனர்.
தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக, அவர்கள் சென்றால் என்ன நடக்கும்? என்று தமிழ் மக்கள் மத்தியில் தோன்றியிருக்கும் அச்சம் நியாயமானது. அனைத்துலக அரங்கில் நடைபெறும் பேச்சுவார்த்தைகள், கருத்துப்பரிமாற்றங்கள், தீர்வுமுயற்சிகள் கந்தறுந்து போகும் நிலைதான் ஏற்படும்.
தமிழ் மக்கள் புத்திசாலிகள், அவர்கள் பேச்சைக் கேட்டு சாய்வதுஇல்லை. செயற்பாடுகளை வைத்தே மதிப்பீ:டு செய்கின்றனர். புலிகளை அவர்கள், தங்கள் ஏக பிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டது அவர்களின் செயற்பாடு, தியாகம், உறுதிப்பாடு, அர்ப்பணிப்பு காரணமாக மட்டுமே. புலிகளோடு ஒப்பிடுகையில், பேச்சாற்றல் மிக்க தமிழ் அரசியல் தலைமைகளை அவர்கள், இரண்டாம் நிலையில் வைத்தே பார்த்தனர்.
வித்தியாதரன் தலைமையிலான சனநாயகப் போராளிகளுக்கானது
மரியாதைக்குரியவர்கள் என்ற தளத்தில் வைத்துக்கொண்டே, இந்தக் கட்டுரையை வரைகின்றோம். போராளி என்பவன் எப்போதும் போராளியே. முன்னாள் இன்னாள் என்ற பேச்சுக்கே இடமில்லை. மக்களுக்காக உயிரையும் கொடுத்துப்போராட தானாக முன்வந்த ஒருவன், இறக்கும் வரைக்கும் போராளியே. மக்களுக்காகவே துடித்துக்கொண்டிருக்கும் அவனது உள்ளம், போராளியாகவே என்றும் கனன்றுகொண்டிருக்கும். ஆயுதம் தூக்குவதுதான் போராட்டமல்ல. போராட்டத்திற்கு பல வடிவங்கள் , பல முகங்கள் உண்டு. சூழலுக்கு ஏற்ப அது மாறுபடும்.
வித்தியாதரன், ஐந்தாண்டுகளுக்கு முன்னர் கூட்டமைப்புடன், இணங்கிச் செயற்பட்டவர். வடமாகாண முதல்வர் பதவிக்கு அவர் ஆசைப்பட்டதாகவும், அது சாத்தியமற்ற நிலையில் அவர் கூட்டமைப்பில் இருந்து விலக்கிக் கொண்டதாகவும் செய்திகள் உண்டு.
இந்தத் தேர்தலுக்கு ஏழு மாதங்களுக்கு முன்னரே, ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்திலேயே ஜனநாயகப் போராளிகள் என்ற அமைப்பை தொடங்கும் வேலையை வித்தியாதரன் ஆரம்பித்துவிட்டார். இரண்டு பிரதான சிங்களக் கட்சிகளிடமும், குறிப்பாக கோத்தபாய ராஜபக்ஸவிடமும், தனது முயற்சியை விளக்கி அவர்களின் அனுமதியைப் பெற்றுக்கொண்டதாக வித்தியாதரனே ஊடகங்களிடம் தெரிவித்திருக்கின்றார்.
சமூகத்தில் அவர்களை இப்படியே விட்டால், அவர்கள் ஒருவேளை மீண்டும் பழையவழிக்கே திரும்பக்கூடும் எனவும் அதனால் அவர்களை ஜனநாயகவழிக்கு கொண்டுவரவே இந்தமுயற்சி எனத் தான் எடுத்துக் கூறியதையும், அதனை சிங்களத் தரப்பினர் முழுமனதுடன் ஏற்றுக்கொண்டதையும் வித்தியாதரனே தெரிவித்திருக்கின்றார்.
தமிழ் மக்களால் தேர்வுசெய்யப்பட்ட மாகாண சபை உட்பட தமிழ் பிரதிநிதிகளின் செயற்பாடுகளையே மோசமாகக் கட்டுப்படுத்திய ராஜபக்ச அரசு, விடுதலைப் புலிகள் அரசியலுக்கு வருவதை ஏற்றிருப்பதை நீங்கள் சந்தேகத்துடன் நோக்கவில்லையா.
சரி, கூட்டமைப்பைப் பலப்படுத்தும் நோக்கில், கூட்டமைப்பில் தேர்தலில் பங்குபற்ற சந்தர்ப்பம் கேட்டதாகவும், போராளிகளை கூட்டமைப்பு நிராகரித்து விட்டதாகவும் வித்தியாதரன் தற்போது கூறிவருகின்றார். அது வித்தியாதரனின் உள்நோக்கத்துடனான பிரச்சாரம் என்றே எம்போன்றவர்கள் நம்புகின்றோம்.
கூட்டமைப்பைப் பலப்படுத்துவதாக இருந்தால், பதவிகளுக்கு ஆசைப்படாமல், அதன் வேராகவும் வேரடி மண்ணாகவும் இருந்து மக்கள் பணிசெய்யவேண்டும். மக்கள் மத்தியில் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவேண்டும். மக்கள் சக்தியைத் திரட்டி, மக்கள் கருத்துக்களை, மக்களின் விருப்புக்களை, அம்மக்களின் அபிலாசைகளை தலைமையின் தலைக்குள் திணிக்கவேண்டும். சரி பிழைகளை உள்ளுக்குள் பேசித் தீர்க்கவேண்டும். தவறுகளைக் தட்டிக்கேட்கவேண்டும். போராட்ட உணர்வு மங்கிடாமல், மக்களை உயிர்ப்புடன் வைத்திருக்கவேண்டும். போராளிகள் அதைச் செய்திருக்கவேண்டும் என்பதே எம்போன்றவர்களின் விருப்பு.
கம்பீரமாக நிற்கும் தமீழீழத் தேசியக்கொடிக்கு முன்னால், நின்று ஒருசேரச் சத்தியப்பிரமாணம் எடுத்த எங்கள் வீரர்கள், சிங்களப் பாராளுமன்றத்தின், ஒற்றையாட்சிச் சபதம் ஏற்று, சிங்களத்தின் செங்கோலை வணங்க முயல்வதை மனவேதனையுடன்தான் பார்க்கின்றோம்.
தமிழீழத் தேசியத் தலைவர் சிங்களப் பாராளுமன்றத்தை விடுதலைக்கான ஒரு தளமாக நம்பியிருந்தால், இந்தப் போராட்டத்தையே ஆரம்பித்திருக்கமாட்டார். அவரின் வழிவந்தவர்கள் நீங்கள். சதாரணமனிதர்களாக வேண்டுமானால், பாராளுமன்றம் போங்கள் ஆனால், போராளிகள் முத்திரையைக் குத்திக்கொண்டு செல்லாதீர்கள். தங்களின் அரசியல் எதிர்காலத்திற்காக, வித்தியாதரன் போன்றவர்கள், உங்களைப்போன்ற போராளிகளைப் பாவிக்கின்றனர் என்றே நாம் நம்புகின்றோம்.
திடீரென ஒரு குழுவாகச் சென்று, தொகுதிக்கு இரு வேட்பாளர்களுக்கு இடம்தாருங்கள் எனக் கேட்பதே, ஒரு சதிநோக்கத்துடனான திட்டம்தான். வித்தியாதரன் போன்று மேலும்பலர், ஆளுக்கு இருபது பேருடன், போராளிகள் அமைப்பு எனக் கிளம்பினால், ஏற்படக்கூடிய நெருக்கடிகளை சிந்தித்துப் பாருங்கள்.
உண்மையில், வித்தியாதரன் போன்ற சந்தர்ப்பவாதிகளைவிட்டுவிட்டு, போராளிகள் பையப்பைய ஒரு சனநாயகத் தளத்தில் ஒருங்கிணைந்து, ஒரு சனநாயகக் கட்டமைப்பை கட்டிவளர்ப்பதே, சந்தர்ப்பவாதிகளின் கைகளில், போராளிகள் சிக்குவதையும், போராளிகள் என்ற பெயரை சுவீகரிப்பதையும் தடுக்கமுடியும்.
முதலில் அந்த முயற்சியில் இறங்குங்கள். பலமான தமிழ்த் தேசியக் கட்டமைப்பை கட்டியெழுப்புங்கள், அது எதிர்காலத்தில், சனநாயகவழிப்போராட்டங்களை முழுமூச்சுடன், உயிர்த்துடிப்புடன் மேற்கொள்ள வழிவகுக்கும். பாராளுமன்றக் கதிரைக்கு ஆசைப்படுபவர்களின் சவாரிக்குதிரைகளாக உங்களை மாற்ற அனுமதிக்காதீர்கள். சிங்களப் பாராளுமன்றம், போராளிகளுக்கானதல்ல.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதா?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுத்தமானது என்றோ, அதில் அங்கம் வகிப்பவர்கள், மக்கள் சேவையொன்றையே மனதிடை வைத்துச் செயற்படும் பரிசுத்தமானர்கள் என்றோ யாரும் அறுதியிட்டுச் சொல்ல முன்வரவில்லை.
மாவீரர்களையும், தேசியத்தலைவரையும், விமர்சிக்கும், ஆயுதப்போராட்டத்தை கொச்சைப்படுத்திப்பேசும், தற்குறியள் ஒரு சிலர் கூட்டமைப்பில் இருக்கவே செய்கின்றனர்.
தேசியத் தலைவரும் போராளிகளும், விழும்புண்தாங்கி, பசி பட்டினியுடன் காடுமேடு அலைந்து, குடும்பங்களைப் பிரிந்து இனத்தின் விடுதலை ஒன்றையே நெஞ்சில் நிறுத்தி, களமாடிய பொழுதுகளில், மாவீரர்களின் வித்துடலங்கள், தாயகமெங்கும் சிதறிக்கிடந்த பொழுதுகளில், ஆண்களும் பெண்களுமாக இளம் குருத்துகள் உயிர்மூச்சின் இறுதிச் சுவாசிப்பை தாய்மண் மடியில் விட்டுக்கொண்டிருந்த பொழுதுகளில், தம் இன்ப வாழ்க்கையைச் சுகிர்த்துக் கொண்டிருந்தவர்கள், தமது வாழ்க்கையின் முன்னேற்றத்தித்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, அக்கம் பக்கம் பாராமல் படித்துப்பட்டம் பெற்று முன்னேறியவர்கள்.
தொழில் துறையில் முன்னேற அரச விசுவாசத்துடன் உழைத்தவர்கள் எனப் பலரும் கூட்டமைப்பில் இருக்கின்றார்கள் என்பது உண்மை. ஆனால், அவர்கள் அல்ல, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு. அது மக்கள் இயக்கம். அதற்கு புத்துயிர்கொடுத்து புதுஇரத்தம் பாய்ச்சவேண்டியது எல்லோருடைய கடமை. மக்கள்தான் அதனை நெறிப்படுத்தவேண்டும். அதைவிடுத்து, அதனை அழிக்க நினைப்பது, எல்லாவற்றையும் இழந்து நம்பிக்கையற்று, வாழ்வில் துவண்டுபோயிருக்கின்ற நம் மக்களுக்குச் செய்கின்ற துரோகம்.
தேசியத்தலைவரை தம் தலைவராக முழுமையாக ஏற்றுக்கொண்டு, மாவீரர்களை தாம் வணங்கும் கடவுளர்களாக வகுத்துக்கொண்டு, மக்களின் விடுதலைக்காண பணியில், தமது பங்களிப்பை வழங்குகின்ற தலைவர்கள் ஏராளமானோர் கூட்டமைப்பில் இருக்கின்றனர். இந்த உணர்வுடனேயே கூட்டமைப்பு என்ற முகாமில் கூடிநிற்கும் பல்லாயிரம் பல்லாயிரம் தொண்டர்கள் அங்கே அங்கம் வகிக்கின்றனர்.
விடுதலைப் புலிகளின் ஏதோ ஒரு நிழல் கூட்டமைப்பின் மீது படர்வதாக கருதியே மக்கள், கூட்டமைப்புடன் ஐக்கியப்பட்டு நிற்கின்றனர். ஒரு சில தற்குறிகளைக் குறிவைத்து, கூட்டமைப்பு என்ற விருட்சத்தை தறிக்க நினைக்கக்கூடாது.
எதிரும் புதிருமாக இருந்த பல இயக்கங்களை, பல கட்சிகளை ஒன்றிணைத்து தமிழ்த்தேசியக்கூட்டமைப்பாக உருப்பெற வைக்கின்ற முயற்சியில், தமிழீழத் தேசியத்தலைவரின் ஆசீர்வாதம் இருந்தது. இந்த முயற்சி சாத்தியமாவதில், விடுதலைப் புலிகளின் பங்களிப்பு முழுமையாக இருந்தது.
ஆனால், தற்போதைய சூழலில், தமிழ் தேசியத் தளத்தில் பிளவுகளும் சிதைவுகளும் ஏற்பட்டால், ஒட்டுப்போடமுடியாத பெரும் வெடிப்பாக அதுமாறும். ஓற்றுமைப்படுத்தல் என்ற பேச்சுக்கே எதிர்காலத்தில் இடமில்லாமல் போய்விடும். சிதறுண்ட குழுக்களை, சிங்களம் தன் இஸ்ட்டத்திற்கு எடுத்து விளையாடும். பாவம் தமிழர்கள்தான் தமது தலைவிதியை நொந்தபடிக்கு, மீண்டும் ஒரு அதிசயப் பிறவியின் வரவிற்காகக் காத்திருக்கவேண்டிய சூழல் ஏற்படும்.
வழமையாகக் கூறுவதுபோல், இது முக்கியமான தேர்தலல்ல. அதிமுக்கியமான தேர்தல். சிங்களம் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கும் இந்தப் பொழுது. சர்வதேசத்தின் கவனம் தமிழ்மக்களின் பிரச்சினையில் குவிந்திருக்கும் இத்தருணத்தில், தமிழ் மக்கள் தமது ஒற்றுமைப் பலத்துடன், தமிழ் மக்களின் தேசிய அபிலாசையை, சிங்களத்திற்கும் சர்வதேச அரங்கிற்கும் மீண்டும் ஒருமுறை பறைசாற்ற வேண்டிய பொழுது இது.
பாமரன்
BERNADRAJAN@GMAIL.COM

ad

ad